/வாராவாரம்/விருந்தினர் பகுதி/சிறிய முயற்சி... பெரிய மாற்றம்! பெண்களே... பல்லவியை பாருங்க!சிறிய முயற்சி... பெரிய மாற்றம்! பெண்களே... பல்லவியை பாருங்க!
சிறிய முயற்சி... பெரிய மாற்றம்! பெண்களே... பல்லவியை பாருங்க!
சிறிய முயற்சி... பெரிய மாற்றம்! பெண்களே... பல்லவியை பாருங்க!
சிறிய முயற்சி... பெரிய மாற்றம்! பெண்களே... பல்லவியை பாருங்க!
ADDED : ஜூன் 16, 2024 10:57 AM

ஒரு விஷயத்தை அறிந்துகொள்வதில் பேரார்வம், நேரத்தை சரியாகத் திட்டமிடுதல், கடின உழைப்புடன் கூடிய புத்திசாலித்தனம் ஆகியவையே வெற்றிக்கு அடிப்படை என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு விடா முயற்சியோடு வெற்றி கண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பல்லவி.
ஐ.டி., ஊழியராக பணியாற்றிய இவரின் வாழ்க்கை திருமணத்திற்கு பின் குழந்தை, குடும்பம் என சுருங்கியது. குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம், குடும்ப பொறுப்புகள் போன்றவை வேலையை விட வைத்திருக்கிறது. இருப்பினும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆர்வமும், வேட்கையும் அவருக்குள் இருந்திருக்கிறது. என்ன செய்ய வேண்டுமென தெரியவில்லை.
அப்போது தன் குழந்தைகக்கு ரசாயனங்கள் இல்லாத இயற்கை தயாரிப்பு பொருட்களை தேட தொடங்கியிருக்கிறார். தேடுவதை காட்டிலும் நாமே தயாரித்தால் என்ன என்ற எண்ணம் இயற்கை முறையில் ரசாயனம் கலக்கப்படாத சோப், அழகு சாதன பொருட்கள், நறுமணப் பொருட்களை தயாரிக்க துாண்டி உள்ளது.
இவற்றை தயாரிக்க பயிற்சி எடுத்திருக்கிறார். முதலில் தன் நண்பர்கள், உறவினர்களிடம் பொருட்களை கொடுத்துள்ளார். அவர்களிடம் கிடைத்த வரவேற்பு அடுத்தகட்டமாக அவரை நகர்த்தியது. சிறு தொழிலாக துவங்கியது, நிறுவனமாக மாறி உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலம், நாடுகளிலும் இவருக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
ஸ்தல விருக் ஷம் என்ற நிறுவனத்தை தொடங்கி அதில் தற்போது வெற்றியும் கண்டு வருகிறார். ரசாயன தயாரிப்புகள் மட்டுமல்லாது பிளாஸ்டிக் பயன்பாடுகளையும் தவிர்க்க வேப்ப மரம் சீப்பு, மர சோப்பு தட்டு, தென்னை ஓடு தயாரிப்பு, சோயா மெழுகு போன்ற தயாரிப்புகளை சோப்புகளுடன் அறிமுகப்படுத்த வைத்திருக்கிறார். தன்னை போலவே பலருக்கும் இத்தொழிலை கற்றுக் கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். தனியார் அறக்கட்டளை ஒன்றுடன் இணைந்து, கணவரை இழந்து குழந்தையோடு வாழும் பெண்கள் தொழில் தொடங்கவும் பயிற்சி அளித்து வருகிறார்.
பல்லவி கூறியதாவது: சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட ஆதரவாளர்களின் கடலில் ஒரு துளி தான் நான். வாடிக்கையாளர்களின் குறைகளே என் வியாபாரத்தின் நிறைகளாக மாறுகின்றன. குறைகளை கேட்டு அறிந்து அதனை சரிசெய்து கொள்கிறேன். இதுவே என் வெற்றிக்கு மூலதனம் என்றார்.
படிப்பு, வேலை, சம்பளம் ஆகியவற்றை கடந்து தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி தங்களுக்குத் தாங்களே முதலாளியாக பரிணமிக்க வேண்டுமென்ற ஆசை பெண்களிடம் வளர்ந்து வருகிறது. அதற்கு ஆகச்சிறந்த முன்னுதாரணமாய் திகழும் இந்த பல்லவி பாராட்டிற்குரியவரே....இவரை வாழ்த்த: 73959 53034