ADDED : ஜூன் 16, 2024 10:47 AM

'சேவை தானம்' போல சிறந்த தானம் எதுவும் இல்லை. அதுவும் நோயின் தீவிரத்தில் வலியில் துடிக்கும் உயிருக்கு நாம் செய்யும் சிறு உதவி கூட பெருமலையாய் தோன்றும்.
புற்றுநோயாளிகளுக்கு அத்தகைய சேவையை இலவசமாக வழங்கி வருகிறார் மதுரை அய்யர்பங்களா உச்சபரம்புமேட்டைச் சேர்ந்த இன்டாஸ் பவுண்டேஷனின் மதுரை நிர்வாகி நல்லையன்பாண்டி.
பவுண்டேஷன் மூலம் இதுவரை 700 பேர் பயன்பெற்றதாக தெரிவிக்கிறார்.
அவர் கூறியதாவது: இந்தியா முழுக்க இந்த பவுண்டேஷன் செயல்படுகிறது. மதுரை அய்யர்பங்களாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. புற்றுநோயாளிகள் மதுரையில் சிகிச்சை பெற வரும் போது உணவு, உறைவிடத்தை இலவசமாக அளிக்கிறோம். தென்மாவட்ட புற்றுநோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகின்றனர். ரேடியோதெரபி சிகிச்சைக்காக வரும் போது ஒரே நாளில் வெளியூரில் இருந்து சிகிச்சை பெற்று வலியுடன் திரும்புவது கடினம்.
வெளியூரில் இருந்து சிகிச்சை பெற மதுரை வரும் நோயாளிகள் நேராக இங்கு வந்து தங்கலாம். இதற்கென 15 படுக்கைகள் உள்ளன. உறவினர் ஒருவரும் சேர்ந்து தங்கலாம். உணவுக்கு பின் மதுரை அரசு மருத்துவமனை, பாலரெங்காபுரம் புற்றுநோய் மையம் என எந்த மருத்துவமனையில் சிகிச்சை வேண்டுமோ அங்கே அழைத்துச் செல்ல வாகன வசதியும் வைத்துள்ளோம். எங்களது தலைமை அலுவலகம் குஜராத்தில் உள்ளது. புற்றுநோயாளிகளின் வலி, வேதனையை குறைக்க முடியாது. ஆனால் அவர்களின் சிறு செலவை பகிர்ந்து கொள்வதில் மனநிறைவு அடைகிறோம் என்றார்.
சேவை வேண்டுமா: 84896 53040