ADDED : மார் 22, 2025 11:09 PM

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை, கோவை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில், திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் கடந்த, 19, 20 ஆகிய தேதிகளில், ஓவியம் மற்றும் சிற்பக் கலை கண்காட்சி நடந்தது. அதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நிலகீரி உள்ளிட்ட பகுதி ஓவியர்களின் ஓவியங்கள், சிற்பக் கலைஞர்களின் படைப்புகள் கண்காட்சியில் அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
கல்லுாரி வளாகத்தில், ஓவிய கண்காட்சி நடக்கும் அறைக்குள் நுழைந்ததும், 'வாங்க... வாங்க!' என வரவேற்கும் வகையில் கையெடுத்து வணங்கும் வகையில் ஒரு பிரமாண்ட ஓவியம்.
'இயற்கை காட்சிகள் பெரிய விஷயம் இல்லை. கற்பனையில் யார் வேண்டுமானாலும் வரையலாம் என எளிதாக பலரும் கூறிவிடுகின்றனர். ஆனால், பறவையினங்கள், அதிகாலை சூரியன், நள்ளிரவு நிலா, அந்திசாயும் மாலைப்பொழுது, வனத்தின் ரம்மியம், நிழல் தரும் மரங்கள் என ஒவ்வொரு ஓவியமும் ஒரு செய்தி, தகவலை சொல்லியது.
'குட்டீஸ்' ரசிக்கும்வண்ணம் சிறிய பொம்மைகள் துவங்கி, சுவாமி படங்கள், கலை நுட்பத்துடன் கூடிய வரலாற்று படங்கள், சற்று நின்று, நிதானித்து ரசித்த பின், நம்மை கால்களை கடந்து செல்ல செய்தது.
அரண்மனையில் உள்ள அரசர், அரசியர் முதல் வறுமை நிறைந்த சூழலில் வாழும் ஆண்கள், பெண்கள் வரை, உழைக்கும் ஆடவர், மகளிர், அவரவர் கலாசாரம் மாற உடை, பணிகளுடன் ஓவியமாக காட்சிப்படுத்திருந்தனர். வனவிலங்குகள், வீட்டு விலங்குகள் அவற்றின் வீரம், விவேகத்துக்கு ஏற்ப மிகைப்படுத்தியும், சாதுவாக தத்ரூபமாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஆயில் கலர், அக்ரிலிக் கலர், நீர் வண்ண ஓவியங்கள், மரச்சிற்ப ஓவியம், விழிப்புணர்வு போஸ்டர், போட்டோக்கள், கணிணி ஓவியங்கள், கவரும் வகையில் இருந்தது. முப்பரிமாண ஓவியம் கண்ணுக்கு விருந்தாக இருந்தது.
குறிப்பாக, கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பெண்ணின் தத்ரூபமான விழித்திரை ஓவியம் நம்மை அருகில் சென்று உற்றுகவனிக்க செய்தது. கருவிழி, கண்ணிமை மிகவும் தத்ரூபமாக அப்படியே இருந்தது. கல்லுாரி மாணவியர், பேராசிரியர்கள் கண்டுகளித்த இந்த கண்காட்சியை, அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களையும் பார்வையிட ஏற்பாடு செய்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.