/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
சம்பாதிப்பது மட்டுமல்ல சேமிப்பதும் ஒரு கலை!
/
சம்பாதிப்பது மட்டுமல்ல சேமிப்பதும் ஒரு கலை!
ADDED : மே 10, 2026 09:36 AM

இன்றைய டிஜிட்டல் உலகில் கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் போட்டி. குழந்தைகளுக்கு அந்தப் போட்டிகளுக்குத் தயார்படுத்த பல லட்சங்களைச் செலவழிக்கும் பெற்றோர், மிக முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கத் தவறி விடுகிறார்கள்; அதுதான் 'நிதி அறிவு'
''நிறைய மதிப்பெண்களும், கைநிறையச் சம்பளம் மட்டும் ஒருவனை வெற்றியாளனாக மாற்றிவிடாது. எவ்வளவு சம்பாதித்தாலும், அதனை சரியாக நிர்வகிக்கத் தெரியவில்லை என்றால் வாழ்க்கை ஒரு சுழலில் சிக்கிக்கொள்ளும்.
எனவே, குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பணத்தைக் கையாளும் கலையைக் கற்றுக்கொடுப்பது, அவர்களின் எதிர்காலத்திற்கு செய்யும் மிகப்பெரிய முதலீடாகும்' என்கிறார், 'நிதி அறிவு' குறித்த விழிப்புணர்வை பெற்றோர் மத்தியில் ஏற்படுத்தி வரும், ஆசிரியை வனிதாமணி.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இன்றயை சூழலில், சுற்றுச்சூழல், வனப்பாதுகாப்பு, நீர் வளம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு அறிவுபுகட்டப்பட்டு வருகிறது. ஆனால், நிதி அறிவு தொடர்பான வகுப்புகள் என்பது, அரிதாகவே இருக்கிறது.
'எவ்வளவு சம்பாதிக்கிறோம்' என்பதை விட 'எப்படி செலவிடுகிறோம்' என்பது தான் இன்றைய பொருளாதார சுதந்திரத்தின் ரகசியம். பணம் என்பது வெறும் செலவுக்கான கருவி அல்ல; அது ஒரு பொறுப்பு.
குழந்தைகளுக்கு ஒரு சிறிய தொகையைக் கொடுத்து, விரும்பும் பொருளை வாங்கச் சொல்லலாம். 'தேவைக்கு மேல் செலவு செய்து கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் பணம் தீர்ந்துவிடும்' என்ற உண்மையை அவர்கள் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்வது காலத்தால் மறக்காத பாடம்.
தேவையா? ஆசையா?
நிதி மேலாண்மையின் முதல் படியே 'தேவை' எது? விருப்பம் எது?' என்பதைப் பிரித்தறிவதுதான். உணவு, உடை, கல்வி போன்றவை அத்தியாவசியத் தேவைகள். விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்கள், 'பிராண்டட்' உடைகள் போன்றவை தற்காலிக விருப்பங்கள். இந்த வேறுபாட்டை ஒரு குழந்தை புரிந்துகொண்டாலே, அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நிதி முடிவும் நிதானமானதாக இருக்கும்.
இன்றைய உலகம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை நோக்கி நகர்ந்துவிட்டது. பணம் கண்ணுக்குத் தெரியாமல் மொபைல்போன் வழியாகச் செல்வதால், குழந்தைகள் அதன் மதிப்பை உணராமல் போக வாய்ப்புண்டு. எனவே, டிஜிட்டல் பாதுகாப்பு, ஓ.டி.பி. மற்றும் 'பின்' ரகசியம் காத்தல் ஆகியவற்றின் அவசியத்தை அவர்களுக்கு விளக்குங்கள்.
பெற்றோரே முதல் ஆசிரியர்!
பிள்ளைகளுக்கு வீடுகளையும், சொத்துக்களையும் நாம் சேர்த்து வைக்கலாம். ஆனால், அவற்றைச் சரியாகக் கையாளும் 'அறிவு' இல்லையெனில் அவை நிலைக்காது. பணம் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடாது; வாழ்க்கையின் போக்கை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
நிதிக் கல்வி என்பது வெறும் பணம் சார்ந்தது மட்டுமல்ல; அது ஒரு வாழ்வியல் திறன். நன்றி உணர்வு, பகிர்வு, சிக்கனம் ஆகியவற்றைச் சிறுவயதிலேயே விதைப்போம். நம் பிள்ளைகள் வெறும் பணக்காரர்களாக மட்டுமல்லாமல், பண்புள்ள வெற்றியாளர்களாகவும் வளரட்டும்!
குழந்தைகள், தம் பெற்றோரை பார்த்தே அதிகம் கற்கின்றனர். ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து பெற்றோர் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். குடும்பத்தின் வரவு- செலவுத் திட்டமிடலில் குழந்தைகளையும் பங்கெடுக்கச் செய்யலாம். தவறு செய்யும்போது தண்டிப்பதை விட, அதிலிருந்து மீளும் வழியைக் கற்றுக்கொடுக்க வேண்டும்


