Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/தலையங்கம்/தினமலர் தலையங்கம்; விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்; 'இஸ்ரோ' மேலும் சாதிக்க உதவும்!

தினமலர் தலையங்கம்; விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்; 'இஸ்ரோ' மேலும் சாதிக்க உதவும்!

தினமலர் தலையங்கம்; விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்; 'இஸ்ரோ' மேலும் சாதிக்க உதவும்!

தினமலர் தலையங்கம்; விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்; 'இஸ்ரோ' மேலும் சாதிக்க உதவும்!

PUBLISHED ON : ஜூன் 30, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, கடந்த வியாழன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 1984ம் ஆண்டு சோவியத் யூனியனின் விண்கலம் வாயிலாக, இந்தியரான ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்றார். அதன்பின், 41 ஆண்டு களுக்கு பிறகு விண்வெளிக்கு சென்ற 2வது இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு படைத்து உள்ளார். அத்துடன், விண்வெளிக்கு சென்ற, 634வது வீரர் ஆவார்.

இந்தியா இதுவரை மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணியை மேற்கொள்ளவில்லை. வரும், 2027ம் ஆண்டில் இதற்கான முயற்சியில் இறங்க உள்ளது. அதற்காக, 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்திற்கு தேர்வான நபர்களில் ஒருவர் தான் சுபான்ஷு சுக்லா.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் உதவியுடன், அந்நாட்டை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், ஆக்சியம் - 4 திட்டத்தின் வாயிலாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்புகிறது. இத்திட்டத்தில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, இஸ்ரோவும் இணைந்துள்ளதால், சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரின் பயணம், ககன்யான் திட்டத்திற்கு உதவிகரமாக இருக்கும் என, நம்பப்படுகிறது.

சுபான்ஷு உடன் மேலும் மூன்று பேரும், டிராகன் விண்கலம் வாயிலாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். சுபான்ஷு சுக்லா தலைமையிலான ஆக்சியம் -4 குழுவினர் விண்வெளி நிலையத்தில், 14 நாட்கள் தங்கியிருந்து, பலவிதமான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

பூமியிலிருந்து, 400 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையம், 28,000 கி.மீ., வேகத்தில், விண்வெளியை சுற்றி வருகிறது. அத்துடன் ஒரு நாளைக்கு, 16 முறை பூமியையும் சுற்றுகிறது. அந்த வேகத்திற்கு சுபான்ஷு உள்ளிட்டோர் பயணித்த டிராகன் விண்கலமும் பயணித்து, விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது. அதன்பின், அவர்கள் நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவராக விண்வெளி நிலையத்திற்குள் சென்றுள்ளனர்.



ராகேஷ் சர்மா மற்றும் சுபான்ஷுவின் விண்வெளி பயணத்திற்கு இடையேயான, 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, இஸ்ரோ, விண்வெளி ஆய்வில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது.

ஆரம்பத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்திய இஸ்ரோ, விவசாயம், தகவல் தொடர்பு, நீர் மேலாண்மை மற்றும் பேரிடர் மீட்பு போன்றவற்றில் சாதனை படைத்ததுடன், தற்போது, செவ்வாய் மற்றும் சந்திரன் கிரகங்களுக்கு சிக்கலான விண்கல பயணங்களை மேற்கொள்வதிலும் முத்திரை பதித்து வருவது, நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, பாதுகாப்பாக மீண்டும் அழைத்து வருவது என்பது செவ்வாய் மற்றும் சந்திரன் கிரகங்களுக்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்புவதை விட சிக்கலானது மற்றும் மிகவும் சவாலானது.


எனவே, இந்தியாவின் இரண்டாவது விண்வெளி பயணியான சுபான்ஷுக்கு, தற்போதைய பயணம், விண்வெளி மற்றும் அங்கு நிறுவப்பட்டுஉள்ள நிலையத்தின் செயல்பாட்டை கவனிக்க நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

அடுத்த, 10 ஆண்டுகளில், சர்வதேச விண்வெளி நிலையம் போன்று, இந்தியாவும் ஒரு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இஸ்ரோவின் இந்த முயற்சிக்கு சுபான்ஷுவின் பயணம் பெரும் உதவியாக இருக்கும்.

கடந்த, 1969ல் இஸ்ரோ நிறுவப்பட்டது. தற்போது வரை செயற்கை கோள்களை ஏவுதல், நிலவு குறித்த ஆய்வுக்கு சந்திரயான் விண்கலங்கள், மங்கள்யான் விண்கலம், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா என, பல குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளது. அந்த வகையில், சுபான்ஷுவை விண்வெளிக்கு அனுப்பி இருப்பதன் மூலம், இஸ்ரோ நிறுவனம் மேலும் பல சாதனைகள் படைக்க உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us