Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/தலையங்கம்/ நுழைவு தேர்வுகளில் குளறுபடி தவிர்க்க வேண்டியது அவசியம்

நுழைவு தேர்வுகளில் குளறுபடி தவிர்க்க வேண்டியது அவசியம்

நுழைவு தேர்வுகளில் குளறுபடி தவிர்க்க வேண்டியது அவசியம்

நுழைவு தேர்வுகளில் குளறுபடி தவிர்க்க வேண்டியது அவசியம்

PUBLISHED ON : ஜூன் 22, 2024 12:00 AM


Google News
இளங்கலை மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான, 'நீட்' தேர்வு, மே 5ம் தேதி நடந்து, முடிவுகள், இம்மாதம், 4ம் தேதி வெளியாகின. அதில், இதுவரை இல்லாத அளவில் மாணவர்கள், 67 பேர் முழு மதிப்பெண் பெற்றதும், குறிப்பாக ஒரே மையத்தில் தேர்வு எழுதிய சிலர் முழு மதிப்பெண் பெற்றதும், எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி, பலருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையானது. அதனால், நீட் தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளித்த தேசிய தேர்வு முகமையின் அதிகாரிகள், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கான காரணத்தை விவரித்தனர். ஆனாலும், கருணை மதிப்பெண் வழங்கப்படுவதற்கு முன், அது பற்றிய விபரம் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அத்துடன், சில நகரங்களில், 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிந்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதனால், நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறியும், அதனை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட, 1563 பேருக்கு, வரும், 23ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வின் ரிசல்ட், 30ம் தேதி வெளியாகும்' என்று தெரிவித்தார். அதை ஏற்ற நீதிபதிகள், மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் பாதிக்கப்படாத வகையில், மறு தேர்வை விரைவாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த விவகாரம், 'நீட்' தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும், தமிழக அரசியல்வாதிகளுக்கு, அவர்களின் கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்த, ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. அதேநேரத்தில், எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி, 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதன் வாயிலாக, நீட் தேர்வின் புனிதத்தை தேசிய தேர்வு முகமை காப்பாற்றத் தவறி விட்டது என்றே கூறலாம்.

இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வை, 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இப்படி லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற தேர்வை, மருத்துவ படிப்பில் சேருவதற்கான நுழைவு வாயிலாக கருதப்படும் முக்கியமான தேர்வை, தேசிய தேர்வு முகமையானது மிகவும் எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும், தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் நடத்தியிருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், இந்தத் தேர்வில் சிறு தவறு நேர்ந்தாலும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

உயர் கல்வியில் மாணவர்களை சேர்ப்பதற்காக அல்லது அரசு பணியில் நியமிப்பதற்காக, தேசிய அளவில் இதுபோன்று நடைபெறும் தேர்வுகள், பாரபட்சமற்ற முறையில், நியாயமான வகையில் நடத்தப்பட வேண்டும். அப்போது தான், இந்த தேர்வுகளுக்காக ஆண்டுக்கணக்கில் தயாராகி வருவோருக்கு நம்பிக்கை பிறக்கும்.

தேசிய அளவில் அல்லது மாநில அளவில் நடைபெறும் தேர்வுகளில், முறைகேடுகள் நடப்பதாக, சமீப நாட்களாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உ.பி., மாநிலங்களில் நடைபெற்ற சில தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகவும், கேள்வித்தாள் லீக் ஆனதாகவும் கூறப்பட்டதால், ஒரு சில தேர்வுகள் ரத்தும் செய்யப்பட்டன. அதேபோல, தமிழகத்திலும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் முறைகேடு நடந்ததாக, முந்தைய ஆட்சி காலத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

எனவே, நுழைவு தேர்வுகளில் மோசடிகள் நிகழாமல் தடுக்க, கேள்வித்தாள் வெளியாவதை தவிர்க்க, கடும் சட்ட விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அந்த விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தவும் வேண்டும். அத்துடன் இந்த விவகாரங்களில் குற்றம் புரிபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவும் வேண்டும்.

அப்போது தான் பரிசுத்தமான, திறமையான நபர்கள் உயர் கல்விக்கு செல்வர் அல்லது அரசு பணியில் சேருவர். எனவே, இனியும் இதுபோன்ற குழப்பங்கள் நிகழாமல் தடுக்க, விரைவான தீர்வு காண வேண்டும்; தேர்வு எழுதுவோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us