Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/தலையங்கம்/ ஹாத்ரஸ் நெரிசல் உயிர் பலிகள்: இனியாவது விழிப்பது அவசியம்!

ஹாத்ரஸ் நெரிசல் உயிர் பலிகள்: இனியாவது விழிப்பது அவசியம்!

ஹாத்ரஸ் நெரிசல் உயிர் பலிகள்: இனியாவது விழிப்பது அவசியம்!

ஹாத்ரஸ் நெரிசல் உயிர் பலிகள்: இனியாவது விழிப்பது அவசியம்!

PUBLISHED ON : ஜூலை 08, 2024 12:00 AM


Google News
உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில், இம்மாதம், 2ம் தேதி நடந்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை, 121ஐ தாண்டியுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த ஏராளமானோர், இன்னும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற மத ரீதியான நிகழ்ச்சிகளில் நெரிசல் ஏற்பட்டு, அதில் பலர் இறந்த சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில், அவ்வப்போது நடந்திருந்தாலும், ஹாத்ரஸ் மாவட்டத்தில் தற்போது நடந்தது மிகப்பெரிய துயர சம்பவமே.

மத நிகழ்ச்சிகளின் போது நெரிசல் ஏற்பட்டு பலர் இறப்பதற்கு, அந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் முறையாக செய்யப்படாதது மற்றும் கூட்டத்தை கையாள தகுந்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யாததுமே பிரதான காரணமாகும். அதுமட்டுமின்றி, குறைந்த அளவிலான நபர்களே பங்கேற்பர் எனக்கூறி போலீசில் அனுமதி பெறுவதற்கு மாறாக, ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்பதாலும், இத்தகைய துயர சம்பவங்கள் நடக்கின்றன.

அப்படித்தான், ஆன்மிக சொற்பொழிவாளரான போலே பாபா, புல்ராய் கிராமத்தில் நடத்திய நிகழ்ச்சிக்கும், 80,000 பேர் பங்கேற்பர் என்று கூறப்பட்ட நிலையில், 2.5 லட்சம் பேர் பங்கேற்று உள்ளனர். அதுமட்டுமின்றி, கூட்டத்தை நிர்வகிக்க போதிய ஏற்பாடு செய்யாததுடன், அவசர சூழ்நிலையை கையாளுவதற்கான வசதிகள் மற்றும் அவசர மருத்துவ உதவிகள் பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

மேலும், சிறிய அரங்கில் தான் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த அரங்கின் ஒரு கதவும், போலே பாபா, கூட்டத்தினரிடம் சிக்காமல் வெளியேற வேண்டும் என்பதற்காக அடைக்கப்பட்டுள்ளது. இதுவும், நெரிசலில் சிக்கி ஏராளமானோர் பலியாக மற்றொரு காரணமாக இருந்து உள்ளது.

பெரிய அளவில் மக்கள் கூடும் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பவர்களை கையாளும் வகையில், ஒரு வழிகாட்டிக் குறிப்பை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியது. இது, எதையும் ஹாத்ரஸ் மாவட்ட ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் பின்பற்றவில்லை என்பது திட்டவட்டம்.

ஆன்மிக நிகழ்வுகளோ, பொதுக்கூட்டங்களோ நடக்கும் போது, எவ்வளவு நபர்கள் பங்கேற்பர் என்பது தொடர்பாக, தவறான தகவல்களை கொடுத்து அனுமதி பெறுவது என்பது, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அனுமதி வழங்கும் அதிகாரிகளும், 'பெற வேண்டியதை' பெற்றுக் கொண்டு அனுமதி தந்து விடுகின்றனர். அதனால், நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்கள் மட்டுமே, நெரிசல் உயிர்பலிகளுக்கு காரணம் என்று, பொத்தாம் பொதுவாக கூற முடியாது.

அனுமதி வழங்கும் விஷயத்தில், அதிகாரிகள் தான் கவனமுடன் செயல்பட வேண்டும். நிகழ்ச்சியை நடத்துவோர் போதுமான ஏற்பாடுகள் செய்துள்ளனரா, பாதுகாப்பு அம்சங்கள் எந்த அளவுக்கு செய்யப்பட்டுள்ளன; மருத்துவ வசதிகள் உள்ளனவா என்பது பற்றி எல்லாம் ஆய்வு செய்வதில்லை. இனியாவது இதுபோன்ற தவறுகள் திருத்தப்பட வேண்டும்.

எனவே, இந்த விஷயத்தில் தெளிவான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டி குறிப்புகளை உருவாக்குவதோடு, துயர சம்பவங்கள் நிகழ்ந்தால், நிகழ்ச்சியை நடத்துவோர், அனுமதி தந்தோர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில், கடும் சட்ட விதிகளையும் அமல்படுத்த வேண்டும். ஹாத்ரஸ் சம்பவத்தை பொறுத்த வரையில், போலே பாபா, அவரது சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள், அதற்கு அனுமதி வழங்கிய அரசு நிர்வாகத்தினர், போலீசார் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பொறுப்பாளர்களாக்கி, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும்.

போதிய உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் இல்லாமல், கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான ஆள்பலம் இல்லாமல், பெரிய அளவில் மக்கள் கூட அனுமதிப்பது நீடித்தால், ஹாத்ரஸ் போன்ற துயர சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழவே செய்யும். எனவே, இனியாவது பாடம் கற்றுக்கொண்டு, பொறுப்போடு செயல்பட வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us