Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/தலையங்கம்/ இடைத்தேர்தல் தோல்வி பா.ஜ.,வுக்கு எச்சரிக்கை!

இடைத்தேர்தல் தோல்வி பா.ஜ.,வுக்கு எச்சரிக்கை!

இடைத்தேர்தல் தோல்வி பா.ஜ.,வுக்கு எச்சரிக்கை!

இடைத்தேர்தல் தோல்வி பா.ஜ.,வுக்கு எச்சரிக்கை!

PUBLISHED ON : ஜூலை 23, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
லோக்சபா தேர்தல் ஏப்ரலில் துவங்கி, ஜூன் மாதம் 2ம் தேதி வரை நடந்தது. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், ஏழு மாநிலங்களில் காலியாக இருந்த, 13 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்., தலைமையிலான இண்டியா கூட்டணி, 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதாவது, உத்தரகண்ட் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் தலா இரண்டு என, நான்கு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேற்கு வங்க மாநிலத்தில், நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் வென்றுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியும், தமிழகத்தின் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.,வும், வெற்றி பெற்றுள்ளன. ஹிமாச்சல் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒரு தொகுதி மட்டுமே, பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளன. பீஹாரில் ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளர் வென்றுள்ளார்.

ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் காங்., வெற்றி பெற்றது, அக்கட்சிக்கு உத்வேகம் அளிப்பதாகவே அமைந்துள்ளது. ஏனெனில், இந்த மாநிலங்களில் இதற்கு முன் நடைபெற்ற லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள, 13 லோக்சபா தொகுதிகளில், மூன்றில் மட்டுமே வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு, ஜலந்தர் மேற்கு தொகுதி தேர்தல் கவுரவ பிரச்னையாக இருந்தது. அதற்கு காரணம், அந்த மாநிலத்தில், அக்கட்சி தான் ஆட்சியில் உள்ளது.

இடைத்தேர்தல் வெற்றி வாயிலாக, பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேச முதல்வர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் கட்சிகளாக உள்ள தி.மு.க.,வும், திரிணமுல் காங்கிரசும் வெற்றி பெற்றதன் வாயிலாக, இந்தக் கட்சிகள் தங்களின் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாமல், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.,வுக்கு, இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மற்றொரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதுவும், உத்தரகண்ட் மாநிலத்தில், லோக்சபா தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், இடைத்தேர்தல் தோல்வி அக்கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் வருத்தம் அடையச் செய்துள்ளது.

அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் மீண்டும் எழுச்சி பெற்று வருவதையே, இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்த வெற்றியின் வாயிலாக உற்சாகம் அடைந்துள்ள இண்டியா கூட்டணி கட்சிகள், அடுத்ததாக இந்த ஆண்டு இறுதியில் ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையும் குறிவைத்துள்ளன. அவற்றிலும் வெற்றி பெற்று, பா.ஜ.,வை மேலும் அதிருப்திக்கு ஆளாக்க விரும்புகின்றன.

ஆனாலும், அந்த வெற்றியை பெறுவது அவ்வளவு எளிதானதல்ல என்பதை அக்கட்சிகள் உணர வேண்டும். ஏனெனில், சமீபத்திய தோல்விகளால் இக்கட்டான நிலைமைக்கு ஆளாகியுள்ள பா.ஜ., இந்த இரண்டு மாநில சட்டசபை தேர்தலில் வெற்றிக்கொடி நாட்ட தீவிர பிரசாரத்தை மேற்கொள்ளும்.

லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் முடிவுகள், மாநில அல்லது தேசிய அளவில் மக்களின் மனநிலையை பிரதிபலிக்காது; உள்ளூர் பிரச்னைகளின் அடிப்படையிலேயே இத்தகையை தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று பொதுவாக கூறப்பட்டாலும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அதன் முக்கியத்துவத்தை புறக்கணிக்கவும் முடியாது. அப்படித்தான் இண்டியா கூட்டணியின் வெற்றியை கருத்தில் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது. இதை எச்சரிக்கையாக எடுத்து கொண்டு பா.ஜ., தலைவர்கள் செயல்படுவது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us