Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/சிந்தனைக் களம்/ தாமதமாக வெடித்த 'இஸ்லாமிக் பாம்'

தாமதமாக வெடித்த 'இஸ்லாமிக் பாம்'

தாமதமாக வெடித்த 'இஸ்லாமிக் பாம்'

தாமதமாக வெடித்த 'இஸ்லாமிக் பாம்'

PUBLISHED ON : செப் 21, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
சர்வதேச அரசியலில் இந்தியாவுக்கு இது போதாத காலம் போலவே தோன்றுகிறது. ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தகப் போரை துவங்கி இருக்கும் சூழலில், தற்போது சவுதி மூலம், இந்தியாவுக்கு செக் வைக்கும் அளவுக்கு மிக நேர்த்தியாக காய்களை நகர்த்தி இருக்கிறது பாகிஸ்தான்.

அண்மையில் சவுதி அரேபியாவுக்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை அந்நாட்டு பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானுடன் மேற்கொண்டார்.

அதன்படி பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அது மற்றொரு நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்டதாகவே கருதப்படும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

'பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை மீண்டும் துவங்கப்படும்' என, இந்தியா ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்தச் சூழலில், சவுதியுடன், பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்க, பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் ஒரே நாடு இந்தியா தான். இந்தச் சூழலில், சவுதியுடன் பாகிஸ்தான் கைகோர்த்திருப்பது சர்வதேச அரசியலில் மிகுந்த கவனத்தை பெற்றிருக்கிறது.

சீன பின்னணி


சவுதியுடன் பாகிஸ்தான் நெருக்கமாவதற்கு பின்னணியில் சீனா இருப்பதாகவே பேசப்படுகிறது. அதாவது, கடந்த 2022ம் ஆண்டு, சீன அதிபர் ஷீ ஜின்பிங் சவுதி சென்றபோதே இதற்கான விதை போடப்பட்டதாக தெரிகிறது.

ஆனால், அவரது பயணம், வருங்காலத்தில் இந்தியாவுக்கு இப்படியொரு சிக் கலை ஏற்படுத்தும் என்பதை அத்தனை எளிதாக ஊகித்திருக்க முடியாது என்பது தான் உண்மை.

ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தாரில் செப்., 1ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலும் சவுதி - பாகிஸ்தான் இடையிலான உறவு நெருக்கமடைந்ததற்கு காரணமாகி இருக்கிறது.

எனினும், கடந்த சில ஆண்டுகளாகவே இரு நாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக தீவிரமாக பேச்சு நடத்தி இருக்க வேண்டும். அதன் பின்னணியில் சீனாவின் பங்கும் இருந்திருக்கலாம். இது குறித்த உண்மை நிச்சயம் ஒருநாள் வெளியே வரும்.

தற்போதைய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க இந்தியா, 'ஆப்பரேஷன் சிந்துார்' போன்ற நடவடிக்கையை எடுத்தால், சவுதி தன் மீதான தாக்குதலாக அதை கருதக்கூடும்.

நம் நாட்டின் மீது பதில் தாக்குதல் நடத்தாவிட்டாலும், குறைந்தபட்சம் சர்வதேச அளவில் அரசியல் காய்களை நகர்த்தும்.

பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், சவுதிக்கு, பாகிஸ்தான் அணு ஆயுத பாதுகாப்பு வழங்கும் என தெரிகிறது. இதற்காக சவுதியில் பாகிஸ்தான் ஒரு ஏவுதளத்தையோ அல்லது ராணுவ தளத்தையோ நிர்மாணிக்கலாம். ஏன், அணு ஆராய்ச்சி நிறுவனத்தை கூட சவுதியில், பாகிஸ்தான் அமைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்காக, அமெரிக்கா ராணுவ தளம் அமைத்துக் கொள்வதற்கு, சவுதி கடந்த காலங்களில் அனுமதி அளித்திருந்தது. அதை வைத்து பார்க்கும்போது, பாகிஸ்தானுக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

தவிர, கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்ததும், சவுதி அரசை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. தாக்குதலுக்கு முன்பாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கலந்து ஆலோசித்ததாக வெளியான தகவலும் சவுதி - அமெரிக்க உறவில் லேசான விரிசலை ஏற்படுத்தி இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளமும் இஸ்ரேல் தாக்குதலை கண்டு கொள்ளவில்லை என்பதும் கூட வளைகுடா நாடுகளை அமெரிக்காவுடனான தங்கள் எதிர்கால உறவு குறித்து யோசிக்க வைத்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவு



கடந்த நுாற்றாண்டில், அணு-ஆயுத தயாரிப்பில் தீவிரமாக இறங்கிய பாகிஸ்தான், இதற்காக வளைகுடா நாடுகளின் ஆதரவையும் பெற முயற்சித்தது. 'இஸ்லாமிக் பாம்' என்ற பெயரில், வளைகுடா நாடுகளை ஓரணியில் திரட்டும் அந்த லட்சியத்தை பாகிஸ்தான் தற்போது அடைந்திருப்பதாகவே தோன்றுகிறது.

நம் நாடு சுதந்திரம் அடைந்தது முதல், தற்போது வரை வளைகுடா நாடுகளுடன் நட்பு பாராட்டியே வந்திருக்கிறது. ஏன் காஷ்மீர் பிரச்னையில் கூட வளைகுடா நாடுகள், பாகிஸ்தானை கண்மூடித்தனமாக ஆதரித்தது கிடையாது. ஆனால், இனி வரும் காலங்களில் அந்த நிலை மாறிப் போகலாம்.

பாகிஸ்தான் மீது நாம் எடுக்கும் ஒவ்வொரு ராணுவ நடவடிக்கைகளுக்கும், வளைகுடா நாடுகள் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பும் தெரிவிக்கலாம்.

இஸ்ரேல் விவகாரத்தில் பாதுகாப்பு மற்றும் அறிவியல் துறைகளில் நாம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். மறுபுறம் பாலஸ்தீன விவகாரத்தில் அரேபிய நாடுகளின் நிலைப்பாட்டை இதுவரை நாம் ஆதரித்ததே இல்லை. இதனால், இந்தியாவுடனான சவுதியின் உறவு நெருடலாகவே நீடிக்கிறது.

இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?

சவுதி - பாகிஸ்தான் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து, சீனாவுக்கான கச்சா எண்ணெய் சப்ளை, பிரச்னைக்குரிய மலாக்கா ஜலசந்திக்கு பதிலாக, இனி சீனா - பாகிஸ்தானின் பொருளாதார பாதை வழியாக எடுத்துச் செல்வதற்கான சூழல் உருவாகி இருக்கிறது.

இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்க சீனா தயக்கம் காட்டி வருவதால், ஆசிய அபிவிருத்தி வங்கியை பாகிஸ்தான் அணுகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனவே, இதன் பின்னணியில் இருக்கும் சர்வதேச அரசியலையும் நாம் கூர்ந்து கவனித்தாக வேண்டும்.

குறிப்பாக சவுதியில் இருந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பு ஏற்படுமா? வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

என்.சத்தியமூர்த்தி

சர்வதேச அரசியல் ஆய்வாளர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us