Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/சிந்தனைக் களம்/ சில நிமிடங்கள் முட்டாளாக இருந்து பாருங்களேன்! ​

சில நிமிடங்கள் முட்டாளாக இருந்து பாருங்களேன்! ​

சில நிமிடங்கள் முட்டாளாக இருந்து பாருங்களேன்! ​

சில நிமிடங்கள் முட்டாளாக இருந்து பாருங்களேன்! ​

PUBLISHED ON : மார் 20, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நீங்கள் உங்களுக்குள் ஆழமாக பார்க்கும்போது, மகிழ்ச்சி தான் உங்களுடைய இயல்பு நிலை என்பதை கண்டுகொள்ள முடியும். துக்கமாக இருப்பதற்கு உங்களுக்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது. உங்களுடைய துயரத்தோடு இணைத்துக்கொள்ள ஒரு கொக்கி தேவைப்படுகிறது. ஆனால் மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு எந்த ஒரு காரணமும் தேவைப்படுவதில்லை.

உங்களுக்கு எந்தவொரு தேவையும் இல்லாதபோது, உங்களுடைய அந்த நிலையை மகிழ்ச்சி என சொல்லலாம். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா, இல்லையா என கண்டுபிடிக்க நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.

உங்களை நீங்களே கண்ணாடியில் வெறுமனே பார்த்துக் கொண்டிருங்கள். உங்களுடைய புன்னகை எவ்வளவு பெரிதாக இருக்கிறது, எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்கள், எவ்வளவு தெளிவாக இருக்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்.

பெரும்பாலும், மிகச் சிறிய விஷயங்கள் நம் மகிழ்ச்சியை திருடிச்செல்ல அனுமதிக்கிறோம். நீங்கள் மிக சுவையான கேக் ஒன்றைத் தயாரித்துள்ளீர்கள் என கற்பனை செய்து கொள்ளுங்கள். அதை அனைவரும் விரும்பி உண்கின்றனர்.

ஆனால், அதைத் தயாரித்த நீங்கள் வருத்தமாக இருக்கிறீர்கள். ஏனெனில், அதில் சிறிது செர்ரி பழங்களை சேர்க்க மறந்து விட்டீர்கள்.

விருந்தினர்கள் அதைச் சாப்பிட்டனர், மகிழ்ந்தனர், சென்று விட்டனர். ஆனால் உங்கள் மனமோ, நீங்கள் மறந்துபோன அந்த செர்ரி பழங்களில் மாட்டிக் கொண்டிருக்கிறது! அது தான் மனதின் நிலை, - அற்பமான ஒரு விஷயத்தை பெரிதுபடுத்தி, அங்கே ஏற்கனவே இருக்கும் மகிழ்ச்சியை கவனிக்க தவறிவிடுகிறது.

மனதை கவனியுங்கள்


இங்கு தான் யோகாவின் ஞானம் உதவி செய்கிறது. மகிழ்ச்சி மற்றும் திருப்தி என்பது ஒரு விபத்து அல்ல; அவை பயிற்சிகள். ஆரோக்கியத்திற்கும் உடல் சுகாதாரத்துக்கும் மட்டுமல்ல, மகிழ்ச்சியான வாழ்விற்கு மனநலம் அவசியம்.

ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் உங்கள் மனதை கவனிக்கச் செலவழியுங்கள். ஏனெனில், உங்களுடைய மனநிலை தான் உங்களுடைய வாழ்க்கையின் தரத்தை முடிவு செய்கிறது.

தியானம், மூச்சு பயிற்சி, விழிப்புணர்வை உருவாக்கி கொள்வது, இவையெல்லாம் நம் மனதை துாய்மையாக்கும் கருவிகளாகும்.

மேலும் உங்களுடைய வெகு இயல்பான ஆனந்தத்தில், உங்களை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். ஒரு தனிமனிதன் சந்தோஷமாக இருப்பது மட்டுமல்ல மகிழ்ச்சி. அது அனைவரையும் உள்ளடக்கியது. மற்றவர்களிடம் தொற்றிக் கொள்ளும் தன்மையுடையது.

ஒரு குடும்பத்தில், ஒருவர் மட்டும் மகிழ்வாக இருந்து மற்றவர் வருத்தமாக இருந்தால், அந்த மகிழ்ச்சி சிதைந்து போய்விடும். நம்மை சுற்றியுள்ளவரின் நல்வாழ்வே நம் மகிழ்ச்சியின் விளைவு.

இதனால் தான் நம்முடைய பண்டைய பிரார்த்தனைகளில் நாம் எப்பொழுதும் கூட்டு மகிழ்விற்கே வேண்டிக் கொண்டிருக்கிறோம். 'சர்வோ பவந்து சுக்கினஹ'- - அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்பது இதன் பொருள்!

ஆனால், உங்களை சுற்றியுள்ளவர்கள் மகிழ்வற்று இருந்தால், நீங்களும் அந்த துயரத்தில் மூழ்கி போக வேண்டுமா என்ன? இல்லை! குடும்பத்தில் உள்ள ஒருவர் உடல் நலமில்லாமல் இருந்தால், யாரோ ஒருவராவது தைரியமாக இருந்து மற்றவரை கவனித்துக் கொள்ள வேண்டும்.

அது போல, உங்களை சுற்றியுள்ள மக்கள் துயரத்தில் இருந்தால், உங்களுடைய உள்மன நிலைத்தன்மை தான் அவர்களுக்கான ஆதரவாக இருக்கும்.

உங்களுடைய மகிழ்ச்சி மற்றவரை சார்ந்து இருக்க வேண்டியதில்லை; ஆனால் அவர்களை உயர்த்துவதற்காக இருக்கலாம். இறுதியில், யாராலும் உங்களுக்கு மகிழ்ச்சியையோ, துயரத்தையோ தர முடியாது. ஒவ்வொரு மனிதனும் அவன் கர்மாவை பொறுத்தே வாழ்க்கையை அனுபவிக்கிறான்.

ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த, உலகையே நீங்கள் தலைகீழாக புரட்டி போடலாம்; ஆனாலும் அவர் வருத்தத்தில் தான் இருப்பார்.

அறிவாற்றலே தடை


நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்தாலும் சிலர் குற்றம் கண்டுபிடித்து கொண்டு தான் இருப்பர். அவர்களின் மனநிலை, அவர்களே ஏற்படுத்திக் கொள்வது தான்.

சில சமயம் நம்முடைய அறிவாற்றலே, நம்முடைய மகிழ்ச்சிக்கு மிக பெரும் தடையாக இருக்கும். இதை தாண்டுவதற்கான மிக எளிமையான வழி, சிறிது நேரம் முட்டாளாக இருப்பது!

எப்போதும் மனம் தொடர்ந்து முடிவில்லாமல் பேசிக் கொண்டிருக்கும் போது, அமைதிக்கான ஒரு வழியும் தெரியாத போது, ஒரு முட்டாளாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உணர்தல் ஒன்றே ஒரு தளர்வு நிலையை கொண்டு வரும். நாம் நம்முடைய அறிவாற்றலை கடக்கும் போது, ஆனந்தம் தோன்றும்.

எப்படி நாம் காதலில் இருக்கும் போதோ, ஆச்சரியத்தில் இருக்கும் போதோ அறிவாளியாக காட்டிக்கொள்வதை விட்டுவிடுவோமோ, அதைப் போன்ற தருணம் இது.

விருப்பம், விழிப்புணர்வு, செயல்கள் அனைத்தும் ஒரே சக்தியின் பல்வேறு வெளிப்பாடுகள் தான். எந்த நேரத்திலும் இந்த மூன்றில் ஏதாவது ஒன்று மேலோங்கி இருக்கலாம்.

உங்களுக்கு விருப்பம் கூடுதலாக இருக்கும் போது, தன்னை பற்றிய அறிதல் அதன் கீழ் நிலையில் இருக்கும். விருப்பங்கள் மேலோங்கும் போது, நீங்கள் ஒரு கற்பனை உலகத்தில் இருப்பதால், அது மனஅழுத்தம் மற்றும் துயரத்தையே விளைவிக்கும்.

உங்கள் செயல்கள் மேலோங்கும்போது விழிப்புணர்வின்மை, அமைதியின்மை மற்றும் சோர்வு தொடரும்.

விழிப்புணர்வு மேலோங்கும் பொழுது, மகிழ்ச்சி இயல்பாக எழுந்துவிடும். அதனால், உங்களை நீங்கள் மகிழ்வற்றவராக உணர்ந்தால், அதற்கான காரணத்தை வெளியில் தேடாதீர்கள்; அதற்கு பதிலாக, உங்களுள் செல்லிக் கொள்ளுங்கள்.

மகிழ்ச்சி கேக்கில் இல்லை, தவறவிட்ட செர்ரி பழங்களில் இல்லை; - அது அந்த கேக்கை மகிழ்வோடு பகிர்ந்து கொள்வதிலும், வாழ்க்கையை அதன் ஏற்றத்தாழ்வுகளோடு கொண்டாடுவதில் தான் இருக்கிறது.

குருதேவ்

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்

ஆன்மிக சொற்பொழிவாளர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us