Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பொக்கிஷம்/பேசும் மூலிகை சித்திரங்கள்...

பேசும் மூலிகை சித்திரங்கள்...

பேசும் மூலிகை சித்திரங்கள்...

பேசும் மூலிகை சித்திரங்கள்...

PUBLISHED ON : ஜூன் 13, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
Image 1282426
குற்றாலத்தின் மெயினருவி போவதற்கான வளைவைத் தாண்டி ஐந்தருவி போகும் வழியில், தேர் நிலைக்கு பக்கத்தில் வலது பக்கத்தில் எந்தவித விளம்பர பலகையும் இல்லாமல் காணப்படுகிறது சித்ரசபை.

Image 1282427


இந்த இடம் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்படுவதால், வாகனங்கள் வந்து நின்றவுடன் 'அவசரத்திற்கு' ஒதுங்கி இந்த சித்திரசபை கோவிலின் மதில் சுவரை கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் 'ஈரம்' செய்பவர்கள், கொஞ்சம் ஈரமனதுடன் உள்ளே போய் என்னதான் இருக்கிறது என்று எட்டிப்பார்க்கலாம்.

Image 1282428


இந்தியாவில் அமைந்துள்ள சிவாலயங்கள் ஐந்து திருச்சபைகளின் பெயரால் அழைக்கபடுகிறது.

சிதம்பரம் நடராசர் ஆலயம் 'கனகசபை' என்றும்

திருவாலங்காடு சிவாலயம் 'இரத்தினசபை' என்றும்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் 'வெள்ளிசபை' என்றும்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் 'தாமிரசபை' என்றும்

குற்றாலம் குற்றாலநாதர் கோவில் 'சித்திரசபை' என்றும் அழைக்கப்படுகிறது.

Image 1282429


பொதுவாக கோவில்களில் விக்கிரக வழிபாடுதான் பிரதானமாக இருக்கும்.

ஆனால் சித்திர வடிவில் இறைவனை வழிபடுவது அநேகமாக இங்கு மட்டுமே.

இங்கு இறைவன் ஓவியமாக காட்சியளிக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம் இந்த சபையில் நடைபெற்றதாக திருப்பத்தூர் புராணம் கூறுகிறது.

சித்ரசபையில் நடராஜபெருமான் தேவியாருடன் எழுந்தருளியிருக்கிறார். மார்கழி மாதம் திருவாதிரை விழா இங்கு விமரிசையாக நடைபெறும்.

Image 1282431


சபையில் இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக் கண்டு பிரம்மதேவன் ஆதி சிவனின் சொரூபங்களைச் சுவரில் எழுதிவைத்தார். இதனால் வியாசர் முதலியோர் இதனைச் சித்திரசபை என்று அழைத்ததாக புராணங்கள் கூறுகிறது.

சித்திர சபை, குற்றால நாதர் கோயிலுக்குப் அருகில் தனிக்கோயிலாக உள்ளது.சபையின் உட்சுவற்றில் துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், திருவிளையாடற்புராண வரலாறுகள், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்தகோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகவான் ஆகியவை அழியாத மூலிகை ஓவிய வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது.

Image 1282432


அதிலும் சிவபெருமான் திருநடனம் புரியும் காட்சிக்கு கொடுக்கப்பட்ட வண்ணங்கள் எந்தவகை மூலிகையில் இருந்து கிடைத்தது என்பதை அறியும் ஆவலைத் தருகிறது,நேற்றுதான் தீட்டியது போன்ற பொலிவுடன் காணப்படும் இந்த ஒவியங்கள் வரைந்து பல நுாறு ஆண்டுகள் இருக்கலாம் என்பதுதான் இதன் ஆச்சரியம்.

மேலும் இன்று நாம் காணும் குற்றாலநாதர் கோவிலானது ஒரு காலத்தில் விஷ்ணு கோவிலாக இருந்தது, இதனை அகத்திய மாமுனிவர்தான் சிவத்தலமாக மாற்றி அமைத்தார், விஷணுவின் சிரசில் கைவைத்து 'குறு குறு குற்றாலநாதா' என்று சொல்லி அழுத்த, விஷ்ணு உருவம் அகன்று சிவனின் லிங்க வடிவம் உருவானதாக புராண வரலாறு உண்டு,இந்த வரலாற்றை சித்திரிக்கும் ஒரே ஒவியமும் இங்குதான் இருக்கிறது.

Image 1282433


இன்னும் இரண்டு மூன்று மாத காலத்திற்கு திருவிழா போல குற்றால சீசனை அனுபவிக்க கூட்டம் கூட்டமாக செல்பவர்கள், நம் பழமையும் பெருமையும் பேசும் இந்த சித்தரசபையையும் எட்டிப்பார்த்து வாருங்கள்.

-எல்.முருகராஜ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us