
பனை மரங்களையும்,பனைத் தொழிலாளர்களையும் காத்து, பனைப்பொருட்களை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில், தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற 'பனைக்கனவு திருவிழாவில்' தமிழகம் முழுவதிலும் இருந்து பல ஆயிரம் பேர் திரளாக வந்து கலந்து கொண்டனர்.விழாவின் நிறைவாக ஆயிரம் பேர் கலந்து கொண்டு 'மாவொளி' எனும் தீப்பந்தம் சுற்றியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்கவைத்தது.

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி வட்டத்தில் உள்ளது வேம்பி மதுரா, பூரிகுடிசை கிராமம், இந்த கிராம மக்கள் பனங்காடு என்ற பனை மரங்கள் சூழ்ந்த இடத்தில் பனைக்கனவு திருவிழாவினை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர், நான்காவது ஆண்டாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தினர்.


இந்த 10 ஆயிரம் பேர்களும் தினக் கூலித்தொழிலாளர்களாக அன்றாடம் காய்ச்சிகளாக மாறிவருகின்றனர் காரணம் பனையை நம்பி வாழமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர் உண்மையில் பனை என்பது கற்கபத்தரு அது கேட்டதெல்லாம் தரும்.பல தலைமுறைகளை வாழவைக்கும்.
இத்தகு சிறப்பு வாய்ந்த பனையை காக்கவும் பனைப்பொருட்களை பிரபலப்படுத்தவும் பனைத் தொழிலாளர்கள் வாழ்வை மீட்டுருச் செய்யவும் இந்த விழா இங்கு நடத்தப்படுகிறது என்றார் விழாவின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன்.
இந்த ஒரு நாள் திருவிழாவின் காலை வேளையில் பனையேறிகள் பனங்கள்ளை ஊர்வலமாக சுமந்துவந்து பனை மரத்திற்கு கீழ் வைத்து படையலிட்டு வணங்கி பின் விரும்பியவர்களுக்கு வழங்கினர் பலரும் குடும்பத்துடன் கள்ளை பெற்று வாங்கி மகிழ்வுடன் சாப்பிட்டனர்.

பின் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,கள் நல்லுசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த இயற்கை பொருள் விற்பனையாளர்கள் தத்தம் பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.
பனையால் செய்யப்பட்ட பல பொருட்கள் பார்வையாளர்களை கவர்ந்தது அதிலும் பனை ஒலை நகைகள் தனிக்கவனம் பெற்றது.நுங்கு பனங்கிழங்கு பதநீர் நீரா பானம் உள்ளீட்ட பனை உணவுப்பொருட்களை மக்கள் வாங்கி ரசித்து சாப்பிட்டனர்.
மாலையில் பனை மரமேறும் போட்டி நடத்தப்பட்டது இதில் விரைந்து பனையேறி வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது இந்தப் போட்டியில் வருணேஷ் என்ற சிறுவன் கலந்து கொண்டு பாராட்டுகளைப் பெற்றான்.நிகழ்வின் நிறைவாக இரவு 9 மணியளவில் ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாவொளி எனப்படும் தீப்பந்தம் சுழற்றும் நிகழ்வு நடந்தது.
விழாவில் கள்ளிற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டது,கள் என்பது போதைப் பொருள் அல்ல கள் சாப்பிட்டு இறந்தவர் இதுவரை ஒருவர் கூட கிடையாது,அது ஒரு உணவு இன்னும் சொல்லப்போனால் அது ஒரு மருந்து பனையேறி மக்களின் உரிமை.
ஆந்திரா,கர்நாடகா,கேரளா போன்ற மாநிலங்களில் கள் இறக்கவும் பருகவும் எந்த தடையும் இல்லை ஆனால் தமிழகத்தில் மட்டும் கள் இறக்க தேவையின்றி தடைவிதித்துள்ளனர்.
சாராயம்,பிராந்தி,ரம்,ஜின் போன்ற மக்களின் உயிரைப் பறிக்கும் மது பானங்கள் தாராளமாக கிடைக்கும் தமிழகத்தில் கள் என்ற உணவுப் பொருளுக்கு தடை ஏன் என்பதற்கான விடைதான் கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
-எல்.முருகராஜ்