Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/அமிழ்தமிழ்து: வடசொற்களைக் கண்டுபிடிக்கும் வழி

அமிழ்தமிழ்து: வடசொற்களைக் கண்டுபிடிக்கும் வழி

அமிழ்தமிழ்து: வடசொற்களைக் கண்டுபிடிக்கும் வழி

அமிழ்தமிழ்து: வடசொற்களைக் கண்டுபிடிக்கும் வழி

PUBLISHED ON : ஜூலை 15, 2024


Google News
தமிழில் கலந்துள்ள வடசொற்களை அறிவதற்கு எளிய வழி ஏதேனும் இருக்கிறதா? தமிழ்ச்சொற்கள் என்று நம்பிப் பயன்படுத்தும் பல சொற்களை வடசொற்கள் என்கிறார்கள். அவ்வாறு தெரிந்திருப்பின் நாமே அவற்றைச் சீர்தூக்கி ஆராய்ந்து பயன்படுத்தலாம். ஜ, ஸ, ஷ, ஹ போன்ற கிரந்த எழுத்துகள் பயின்றுவந்தால் அவை வடசொற்கள் என்று எளிதில் கூறிவிடுகிறோம். அவ்வாறில்லாமல் தமிழ் எழுத்துகளிலேயே பயின்று வருவனவற்றை எப்படி இனங்காண்பது?

இது வடசொல்லாக இருக்க வாய்ப்பு என்று பார்ப்பதற்குச் சில குறுக்கு வழிகளும் உள்ளன. அவற்றைத் தெரிந்து வைத்திருந்தால் வடசொற்களை எளிதில் அடையாளம் காணலாம். ஒரு சொல்லின் தொடக்கம் கீழ்க்கண்டவாறு இருப்பின் அது வடசொல்லாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. எல்லாவற்றையும் கருத முடியாது. பயன்பாட்டிலுள்ள வடசொற்கள் பலவும் இவ்வாறு தொடங்கும்.

அ). ஒரு சொல்லின் தொடக்கம் 'பிர' என்று தொடங்கினால் ஐயுறவேண்டும். பிரசவம், பிரகாசம், பிரமிப்பு, பிரச்னை, பிரசாதம், பிரசன்னம், பிரசித்தம், பிரசுரம், பிரமாதம், பிரதமர், பிரதி, பிரயாசை, பிரபஞ்சம், பிரபு, பிரயத்தனம், பிரவேசம், பிரேதம், பிராணவாயு என எண்ணற்ற வடசொற்கள் இவ்வாறு தொடங்குகின்றன. 'பிரச்னைக்கு' இடையூறு, சிக்கல் போன்றவை தமிழ்ச்சொற்கள்.

ஆ). பர, பரா, பரி போன்ற ஒலியொற்றுமை உடைய சொற்களில் தமிழும் வடசொல்லும் இணையாகக் கலந்திருக்கின்றன. பரமபதம், பராக்கிரமம், பரோபகாரி, பரிகாரம், பரிதாபம் போன்றன வடசொற்கள். பரப்பு, பரவை, பரல் போன்றன தமிழ்ச்சொற்கள்.

இ). சம் என்று தொடங்கும் சொற்கள் பலவும் வடசொற்களாக உள்ளன. சம்சாரி, சம்பந்தம், சம்பவம், சம்பத்து, சம்பாத்தியம், சம்பூர்ணம் போன்றவை.

ஈ). அப, அபி எனத் தொடங்குபவை பெரும்பாலும் வடசொற்கள். அபயம், அபாயம், அபராதம், அபிநயம், அபிமானம், அபிவிருத்தி என அவற்றை இனங்காணலாம். இதனைச் சற்றே விரித்து ஆபத்து, ஆபாசம் போன்ற சொற்களையும் சேர்க்கலாம். இவ்வகையில் முற்காலத்தில் பெரிதும் வழக்கத்திலிருந்து அபேட்சகர் என்ற வடசொல்லைத்தான் வேட்பாளர் எனத் தமிழாக்கினோம்.

உ). அனு, அநி, அதி என்ற தொடங்கும் சொற்களையும் வடசொற்களா என்று பார்க்கவேண்டும். அனுபவம், அனுசரணை, அனுட்டானம், அனுபல்லவி, அனுதினம், அனுசரி, அனுமானம், அனேகம், அநியாயம், அநித்தியம், அதிசயம், அதீதம் என அவ்வகையில் பல சொற்கள்.

ஊ). வி என்ற எழுத்திலும் பல வடசொற்கள் தொடங்குகின்றன. விகடம், விக்கிரகம், விகிதம், விசயம், விசாலம், விசித்திரம், விசுவாசம், விஞ்ஞானம் எனத் தொடங்குகின்றன. வி என்ற எழுத்தில் எண்ணற்ற தமிழ்ச்சொற்களும் தொடங்குவதால் இவற்றைக் கூர்ந்து நோக்கவேண்டும்.

மேலும் சு, உத், உப, நிர், துர் போன்ற எழுத்துகளிலும் பல வடசொற்கள் தொடங்குகின்றன. இவற்றை நினைவில் இருத்திக்கொண்டால், வடசொற்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

-மகுடேசுவரன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us