Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/சரித்திர சங்கமம்: ஔரங்கசீப்பின் செருப்பை அணிந்து பார்த்த மதுரை மன்னர்

சரித்திர சங்கமம்: ஔரங்கசீப்பின் செருப்பை அணிந்து பார்த்த மதுரை மன்னர்

சரித்திர சங்கமம்: ஔரங்கசீப்பின் செருப்பை அணிந்து பார்த்த மதுரை மன்னர்

சரித்திர சங்கமம்: ஔரங்கசீப்பின் செருப்பை அணிந்து பார்த்த மதுரை மன்னர்

PUBLISHED ON : ஜூன் 16, 2025


Google News
Latest Tamil News
நான் மதுரையை ஆட்சி செய்த நாயக்க மன்னன். பொ.யு. 1682 முதல் 1689 வரை சிறிது காலம்தான் மதுரையை ஆட்சி செய்தேன். அதற்குள் நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டேன். நான் முடி சூட்டிக்கொண்டபோது மைசூர் மன்னரின் பிடியில் இருந்த மதுரை மீட்டேன். மதுரை நிம்மதி பெருமூச்சு விட்டது.

என் ஆட்சிக் காலத்தில், டில்லியில் மொகலாய மன்னர் ஔரங்கசீப்பின் ஆட்சி இருந்தது. அவர் தனக்குக் கப்பம் செலுத்தும் நாடுகளுக்கு, தன் செருப்புகளில் ஒன்றைப் பல்லக்கில் வைத்து, படைகளுடன் அனுப்பி வைப்பது வழக்கம். மன்னர்கள் தமது நாட்டின் எல்லையில் செருப்பை வணங்கி வரவேற்று, வீரர்களை அழைத்துச் செல்வார்கள். செருப்பை அரியணையில் வைத்து வணக்கம் செலுத்தி, திறையைக் கொடுத்தனுப்புவார்கள்.

என் காலத்திலும் செருப்பைத் தாங்கிய பல்லக்கு, நான் திருச்சியில் இருக்கும்போது அங்கே வந்தது. நான் வந்தவர்களை மதிக்கவும் இல்லை. எல்லையில் சென்று வரவேற்கவும் இல்லை. டில்லி வீரர்கள் செருப்பை எடுத்துக்கொண்டு என் மாளிகைக்கு வந்தார்கள்.

நான் அரியணையில் அமர்ந்து கொண்டு அந்த ஒற்றைச் செருப்பை என் காலடியில் வைக்கும்படி சொன்னேன். அப்படி வைக்காவிட்டால் டில்லி வீரர்களின் தலை, தரையில் விழும் என்றேன். அவர்கள் நடுங்கி, என் பாதங்களுக்கு அருகே செருப்பை வைத்தனர். 'ஒற்றைச் செருப்பை அனுப்பி வைத்திருக்கும் உங்கள் அரசன், இன்னொரு செருப்பையும் அனுப்பி வைத்திருந்தால் எனக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும். இப்போது பாருங்கள் என் இன்னொரு கால், காலியாக இருக்கிறது.' என்றேன். ஆத்திரம் கொண்ட மொகலாய வீரர்கள் என்னைத் தாக்குவதற்குப் பாய்ந்தனர். பின்னர் அவர்கள் என் வீரர்களால் கொல்லப்பட்டனர்.

இந்த நிகழ்விற்குப் பிறகு ஔரங்கசீப் மற்ற நாடுகளுக்கு செருப்பு அனுப்புவதை நிறுத்திக்கொண்டார்.

மதுரையை நீதி, நேர்மை, தெய்வ பக்தியுடன் ஆட்சி செய்தேன். தனிமனிதனுக்குரிய ஒழுக்க நெறிகளுடன் வாழ்ந்த நான் யார்?

உதவி குறிப்பு, எனது தாய் ராணி மங்கம்மாள். என் தந்தை சொக்கநாத நாயக்கர். இப்போது கண்டுபிடியுங்கள், நான் யார் என்று.

விடை: ரங்ககிருஷ்ண முத்து வீரப்பன்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us