துணியின் ஒவ்வொரு மடிப்பிலும் என் படிப்பு இருக்கிறது...
துணியின் ஒவ்வொரு மடிப்பிலும் என் படிப்பு இருக்கிறது...
துணியின் ஒவ்வொரு மடிப்பிலும் என் படிப்பு இருக்கிறது...
PUBLISHED ON : பிப் 25, 2024 12:00 AM

சலவைத் தொழிலாளியான என் தந்தை வெளுத்துதரும் துணிகளை அழகுற இஸ்திரி போட்டு மடிப்பது என் தாயின் வேலை.,நேரம் காலம் பாராது அவர்கள் மடித்து தந்து சம்பாதித்த பணத்தில்தான் என் படிப்பு இருந்தது என்று சலவைத்தொழிலாளி சமூகத்தில் இருந்து முதல் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பாலாஜி/26 நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.
அரசுப்பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்ட சிவில் நீதிபதிக்கான பட்டியலில் ஏழை எளிய மாணவ,மாணவியர் சிலர் இடம் பெற்றுள்ளனர்.கல்விதான் குடும்பத்தின் வறுமையை நீக்கும், காலம் காலமாக பட்டுவரும் அவலத்தை போக்கும் என்பதை கவனத்தில் கொண்டு படித்தவர்கள் இவர்கள்.
இவர்களில் பெரும் கவனத்தை ஈர்த்தவர் காஞ்சிபுரம் செக்கு பேட்டை தெற்கு தெருவைச் சார்ந்த பாலாஜி ஆவார்.இவரது பெற்றோர்களான கணேசன்-மேகலா தம்பதியினர் சலவைத்ததொழிலாளர்களாக இருக்கின்றனர்.
இவர்களது மகனான பாலாஜி பள்ளிப்படிப்பை காஞ்சிபுரத்தில் படித்துவிட்டு, சட்டப்படிப்பை சென்னையில் முடித்தார், பின்னர் நான்கு ஆண்டுகள் சட்டப்பயிற்சி பெற்ற பிறகு சிவில் நீதிபதிக்கான தேர்வை எழுதி தற்போது சிவில் நீதிபதியாகியுள்ளார்.
மிகவும் சிரமப்பட்டே என்னை என் பெற்றோர் படிக்கவைத்தனர், நானும் அவர்கள் சிரமம் உணர்ந்து படித்ததுடன் அவர்கள் சிரமம் போக்கவேண்டும் என்ற உறுதியுடன் படித்தேன், நீதிபதியாக தேர்வான பிறகுதான் தெரிந்தது சலவைத் தொழிலாளர் சமூகத்தின் முதல் நீதிபதியே நான்தான் என்று, மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றார்.
பெற்றோர் துணிகளின் கறையை நீக்க பாடுபட்டனர் நீதிபதி பாலாஜி சமூகத்தின் கறைகளை போக்க பாடுபடுவார் என்பது நிச்சயம்.படங்கள் :சீனிவாசன்
-எல்.முருகராஜ்.