Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/ஆப்களை அன் இன்ஸ்டால் செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்!

ஆப்களை அன் இன்ஸ்டால் செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்!

ஆப்களை அன் இன்ஸ்டால் செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்!

ஆப்களை அன் இன்ஸ்டால் செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்!

PUBLISHED ON : ஜூன் 22, 2025


Google News
Latest Tamil News
எ ன்னிடம் வரும் நோயாளிகளுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்து 'ஸ்டென்ட்' வைத்து அனுப்பிய சில நாட்களிலேயே வாயு தொல்லை என்று வருவர். அடுத்த ஆறேழு மாதங்களில் பித்தப்பையில் கல் உருவாகி இருக்கும். ஏன் இப்படி என்று யோசித்த போது, முறையற்ற உணவுப் பழக்கம் தான் இதற்கு காரணம் என்று புரிந்தது.

அலோபதி மருத்துவத்தை தாண்டியும் இதற்கு தீர்வு தரும் ஒருங்கிணைந்த மருத்துவ முறைகள் ஏதேனும் உள்ளதா என்று தேடினேன். பித்தப்பை நீக்க அறுவை சிகிச்சை இல்லாமல், பாரம்பரிய மருத்துவத்தில் இதற்கான தீர்வுகள் கிடைத்தன.

என் அனுபவம்

நான் சிறுவனாக இருந்த போது, அஜீரணம் என்றால் அம்மா ஓமம் கலந்த தண்ணீர் குடிக்கக் கொடுப்பார். அமிலத்தன்மையை சமச்சீராக்கும் திறன் ஓமத்திற்கு உண்டு.

எந்தப் பிரச்னையும் இல்லாவிட்டாலும், வாரத்தில் ஒரு நாள் சுக்கு, ஓமம் கலந்த நீரை குடிக்கக் கொடுப்பார். இதனால், ஜீரண மண்டலம் ஆரோக்கியமாக இருந்தது.

இது போன்று ஆயுர்வேதத்தில், அனுபவத்தில் கிடைத்த தீர்வுகளை என் நோயாளிகளிடம் பின்பற்ற சொன்ன போது, பித்தப்பையில் கற்கள் உருவாவது குறைந்தது; வயிறு சரியானது.

உடல் பிரச்னை வந்த பின், அறிவியல் பூர்வமான அலோபதி மருத்துவம் சிறப்பான தீர்வைத் தரும். வருமுன் காப்பதற்கு, தொடர்ந்து பிரச்னைகள் வராமல் தடுப்பதற்கு, ஆயுர்வேத, சித்தா போன்ற பாரம்பரிய முறைகளை பின்பற்றலாம்.

அதை விடுத்து, நம் சுற்றுச்சூழல், மரபுகளுக்கு எதிரான மேற்கத்திய உணவுகள், வாழ்க்கை முறைகளை பின்பற்றினால், எல்லா நோய்களும் வரும்.

எதிர்ப்பு சக்தி

சேமிப்பு கணக்கில் உள்ள பணம் மொத்தமும் கரைந்து கடனாளியாவது போன்று, வாழ்க்கை முறை மாற்றத்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடலை பலவீனமாக்கி விடுகிறோம்.

எதிர்பாராமல் உடல் கோளாறுகள் ஏற்படும் போது, பொருளாதார சிக்கல்களுக்கு மேலும் மேலும் கடன் வாங்கி, ஒரு கட்டத்தில் திவாலாவோம். உடல் நலக் கோளாறுகள் வரும் போது, எதிர்ப்பு சக்தி இல்லாமல், உயிரிழப்பில் கொண்டு போய் விடுகிறது.

ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது தான் ஒரே வழி.

எப்படி?

முதல் வேலையாக மொபைல் போனில் இருக்கும் அனைத்து உணவு டெலிவரி ஆப்களையும் 'அன் இன்ஸ்டால்' செய்து விட வேண்டும். அடுத்தது, நம் வாழ்க்கை முறைகளை மேம்படுத்த வழி சொல்லும் பாரம்பரிய முறைகளை பின்பற்ற வேண்டும்.

வருமுன் காப்பது எப்படி என்பதை பற்றி தான் பாரம்பரிய மருத்துவ முறைகளை பேசுகிறது. இதில், சாப்பிட வேண்டிய உணவு, அளவுகள் எப்படி, எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும், தினசரி ஒழுங்கு முறைகளை எப்படி பின்பற்றலாம் என்பதை பாரம்பரிய மருத்துவ முறைகள் தெளிவாக விளக்குகின்றன.

ஒட்டு மொத்தமாக பாரம்பரிய முறைகள் விட்டு விலகி, மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு மாறியது தான் பிரச்னைகள் அனைத்திற்கும் காரணம்.

நம் பழைய சாதமும், புளிக்க வைத்த மாவும் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது. நல்ல பாக்டீரியாக்களை பெருகச் செய்கிறது என்று நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் சொன்ன பிறகு அதை நம்புகிறோம்.

சர்க்கரை பயன்பாடு

சர்க்கரை பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க இதய நோய்கள், கேன்சர், பித்தப்பை கல், கல்லீரல் பேட்டி லிவர், அல்சைமர் என்று எல்லா பிரச்னைகளும் வருகின்றன.

ஹோட்டல்களில் சாம்பார் உட்பட சைவ உணவுகளில் சர்க்கரை அதிகம் உள்ள பலவிதமான சிரப், சாஸ்களை பயன்படுத்துகின்றனர். இவற்றை சாப்பிடும் போது, 'டோபமைன்' என்கிற மகிழ்ச்சி உணர்வை தரும் ஹார்மோன் சுரந்து, திரும்ப திரும்ப வெளி உணவுகளை சாப்பிடத் துாண்டுகிறது.

மெதுவாக அதற்கு அடிமையாகிறோம். சாப்பிடும் அளவு அதிகரிக்கிறது. வெள்ளை சர்க்கரையை தவிர்த்து விடுவதே மிகவும் நல்லது.

டாக்டர் அசோக் குமார்,

இதய நோய் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர், ரேலா மருத்துவமனை, சென்னை91500 11579info@relainstitute.com




      Our Apps Available On




      Dinamalar

      Follow us