Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்


PUBLISHED ON : மே 17, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தனசேகரன், மதுரை: எனக்கு வயது 68. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்து வருகிறேன். இரண்டும் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. என்றாலும் சில நேரங்களில் படுக்கையை விட்டு எழும்போது மயக்கம் வருகிறது. இது ஏன், எப்படித் தவிர்ப்பது?

உங்கள் பிரச்னைக்கு 'நிலை மயக்கம்' (போஸ்சுரல் ஹைப்போடென்சன்) என்றுபெயர். முதுமை காரணமாக ரத்தக்குழாய்களின் உட்சுவர் தடித்து, சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடும். உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்பகுதிக்கு ரத்தம் செல்ல சிரமப்படும். இதனால் திடீரென ரத்த அழுத்தம் குறைந்து மூளைக்குச் செல்லும் ரத்தம் குறையும். அப்போது மயக்கம் வரும். குறிப்பாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுந்திருக்கும்போதும், காலையில் படுக்கையிலிருந்து எழும்போது, சாப்பிட்டு முடித்தவுடன், சிறுநீர், மலம் கழித்த பின் என, பல சூழல்களில் மயக்கம் வருவது இதனால்தான்.

இதைத் தவிர்க்க, கட்டிலின் தலைப்பகுதியை அரையடி உயர்த்திக் கொள்ளலாம். தொடர்ந்து நீண்ட நேரம் படுப்பதையும் ஒரே இடத்தில் உட்காருவதையும் தவிர்ப்பது நல்லது. சட்டென்று நேராக எழுந்திருக்காமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பி மெதுவாக எழவேண்டும். ஒரே வேளையில் வயிறு முட்ட சாப்பிடுவதைவிட அரை வயிறு நிரம்பும் வகையில் அடிக்கடி சாப்பிட வேண்டும். சிறுநீர், மலம் கழிக்கும்போது முக்கக்கூடாது. மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கால்களில் 'எலாஸ்டிக் ஸ்டாக்கிங்ஸ்' மீளுறைகளை அணிய வேண்டும்.

- டாக்டர் கு.கணேசன், பொது மருத்துவ நிபுணர், ராஜபாளையம்.

லோகநாதன், நிலக்கோட்டை: வெயிலால் சர்க்கரை நோயாளிகளுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்?

வெயிலில் அலைவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்படும். தலைச்சுற்றல் வரும். கூடுதலான தாகம், அதிக பசி ஏற்படும். நீரிழப்பு ஏற்பட்டு மயக்க நிலைக்கு செல்ல நேரிடும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டோடு வைத்திருக்க வேண்டும். காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் அருந்த வேண்டும். நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும். சர்க்கரை அளவை கூட்டும் மா, பலா, வாழை, சப்போட்டா பழங்களை தவிர்த்து நீர்சத்து உள்ள தர்பூசணி, வெள்ளரி சாப்பிடலாம். இரு நேரம் குளிக்க வேண்டும்.

- டாக்டர் செல்வராஜ், சர்க்கரை நோய் நிபுணர், நிலக்கோட்டை.

டி.கார்த்திகா, போடி: ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு சளி, இருமல் எதனால் வருகிறது. இவை வராமல் தடுப்பது எப்படி?

புகை பிடிப்போர், சளி, இருமல், காசநோய் உள்ளவர்கள் குழந்தைகளை துாக்கி முத்தம் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு பரவுகிறது. இதனை தடுக்க குழந்தைகளுக்கு முன் இருமல், தும்மல் கூடாது. கைகளை நன்கு கழுவிய பின்பு குழந்தைகளை துாக்க வேண்டும். இருமல், இளைப்பு, மூச்சு விடுதலில் சிரமம், பால் குடிக்காமல் இருப்பது, உடல் சுணக்கம் ஏற்படுவது போல் இருந்தால் டாக்டரை அணுக வேண்டும். பிறந்தது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடிய ப்ளு தடுப்பூசி, நிமோனியா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இயற்கை மருத்துவ முறையில் துாதுவளை, மிளகு, இஞ்சி சாறு சிறிதளவு கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி சளி, இருமல், காய்ச்சல் வருவதை தடுக்கலாம்.

- டாக்டர்.எஸ்.ரவீந்திரநாத், தலைமை மருத்துவ அதிகாரி, அரசு மருத்துவமனை, போடி.

எம்.பாத்திமா, ராமநாதபுரம்: எனது குழந்தைக்கு ஒரு வயதாகிறது. கண்கள் நீல நிறத்தில் காணப்படுகின்றன. இதனால் பார்வை பாதிக்கப்படுமா?

குழந்தை பிறந்தது முதல் 15 வயது வரை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தைகளின் ஒவ்வொரு பருவத்திலும் ஊட்டசத்து குறைபாடு, உணவுப்பழக்கம் உள்ளிட்ட காரணிகளால் கண்களில் பாதிப்பு ஏற்படும். வைட்டமின் குறைபாடு, பார்வை திறன் குறைவது உள்ளிட்டவற்றால் கண்களின் நிறம் மாற்றம் அடையும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுப்பதன் மூலம் அதை சரிசெய்ய முடியும். இதனால் பார்வை பாதிக்கப்படாது. குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு தென்பட்டால் அதற்கேற்ப கண்ணாடி அணிவது அவசியம். சிறிய வயதில் கண்ணாடி அணியாமல் அஜாக்கிரதையாக இருந்தால் பின்னாட்களில் பார்வை முற்றிலும் இழக்க வாய்ப்புள்ளது. கண்ணாடி அணியும் பட்சத்தில் 18 வயதுக்குபின் லேசர் அறுவை சிகிச்சை மூலம் பார்வை குறைபாட்டை சரிசெய்ய முடியும்.



- டாக்டர் எஸ்.ஆனந்தன், துணை பேராசிரியர், கண் மருத்துவப் பிரிவு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்.


க.கார்த்திக், சிவகங்கை: வயது 45. காசநோய் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறேன். எவ்வாறு உடலை பராமரிப்பது?



காச நோய் இருந்தால் முறையான மருத்துவ சிகிச்சையுடன் சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம் குணப்படுத்தலாம். காசநோய் இருப்பதை அறிந்தவுடன் டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். உடல் நிலை தேறினாலும் டாக்டர் கூறிய கால அளவு வரை மருந்தை நிறுத்தக்கூடாது.

மாதந்தோறும் மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல வேண்டும். உடல் திசுக்களை சரிசெய்யவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பால், முட்டை, பருப்பு வகை, பயறு உள்ளிட்ட புரத உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

புகைபிடிப்பது, மது அருந்துவதை தவிர்க்க வேண்டும், அதிக காரமான, வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரைப் பயன்படுத்த வேண்டும். பிறருடன் பேசும்போது முகக் கவசம் அணிவது நல்லது. நுரையீரலை வலுப்படுத்த டாக்டர் ஆலோசனையுடன் மூச்சுப் பயிற்சிகளை செய்யலாம்.

- டாக்டர் வெங்கடேஷ், நெஞ்சக நோய் நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.

அனுசியா, விருதுநகர்: பிறந்த குழந்தைகளை வெயில் காலத்தில் பாதுகாக்கும் முறைகள் என்ன?

பிறந்த குழந்தைகளின் கை, கால்களை துணியில் மூடி வைக்காமல் அறையின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு குழந்தைக்கு வெக்கை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். இதனால் குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுக்க முடியும்.

பருத்தி ஆடைகளை அணிதல் நல்லது. கழுத்து, கையில் மாலை, கயிறு அணிவதால் புண், தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் தவிர்க்க வேண்டும்.

காலையில் கொதிக்க வைத்து சூடு தணிந்த நீரால் குழந்தையை குளிப்பாட்டிய பின் ஒரு நாளைக்கு இருமுறை மிதமான வெப்பம் உள்ள தண்ணீரில் பருத்தி துணியை நனைத்து துடைத்து எடுக்க வேண்டும். வேர்க்குரு பவுடர் போடக்கூடாது. பால் கொடுக்கும் தாய்க்கு உடல் நலப்பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தையின் வாயில் பால் துடைத்து எடுக்கும் முன்பும், கையாளும் பெரியவர்கள் வெறும் தண்ணீரில் கைகளை கழுவி சுத்தம் செய்யாமல் சோப்பு உபயோகித்து கைகளை சுத்தம் செய்து விட்டு குழந்தையை பெற வேண்டும். தாய்ப்பால் குடிக்கும் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை உள்ள குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

-- டாக்டர் அரவிந்த் பாபு, குழந்தைகள் நல மருத்துவர், அரசு மருத்துவக்கல்லுாரி, விருதுநகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap