Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...

PUBLISHED ON : ஜூன் 22, 2025


Google News
Latest Tamil News
தனலட்சுமி, மதுரை: ஒற்றைத் தலைவலியை விரட்டுவது எப்படி?

'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியானது இளவயதினருக்கு வரும் நோய். இதன் தாக்கத்தை குறைக்க யோகா பயிற்சி செய்யலாம். விகிதாச்சார கணக்கு படி மாத்திரைகளால் வரும் பயனை விட யோகாவினால் வரும் பயன் அதிகமென்பது ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. தியானப்பயிற்சியும் பயன்தரும் ஒருமுறை. சரியான நேரத்தில் உணவும் உறக்கமும் தேவை. தினமும் ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி செய்யலாம். தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும். அதிகமாக கவலைப்படுவதையும் மன உளைச்சலையும் தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும். பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பழபானங்கள், துரிதஉணவுகள், இறைச்சி வகைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் வகையில் செயற்கை 'ப்ரிசர்வேடிவ்' சேர்க்கப்படுவதால் இவற்றை தவிர்க்க வேண்டும். இவை ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கும் தன்மையுடையது. தலைவலி அதிகமாக இருந்தால் சில நாட்களுக்கு சாக்லெட், ஐஸ்கிரீமை தவிர்ப்பது நல்லது.

- டாக்டர் எஸ். மீனாட்சிசுந்தரம், மூளை நரம்பியல் சிறப்பு நிபுணர், மதுரை

மல்லிகா, பழநி: புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை நோய் தொற்றில் இருந்து காப்பது எப்படி?

முதல் முதலாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தொற்று கிருமிகளால் பாதிப்பு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத போதிலும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். பள்ளிக்கு சென்ற சில நாட்களிலே காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சாதாரணமாக குழந்தைகளுக்கு ஓரிரு நாட்களில் இதுபோன்ற தொந்தரவுகள் சரியாகிவிடும்; அந்த நேரத்தில் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலே பாதுகாக்க வேண்டும் அதற்கு மேல் தொந்தரவு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

நகங்களை வளர்க்கவிடாமல் வெட்டி துாய்மையாக வைக்க வேண்டும். இரவு நன்கு துாங்க வைக்க வேண்டும். காலையில் திடீரென குழந்தைகளை எழுப்பாமல் அமைதியாக எழுப்ப வேண்டும்.

- டாக்டர் சங்கீதா, பழநி

என்.சிவராமன், ராமநாதபுரம்: முதுகெலும்பு பகுதியில் தாங்க முடியாத வலி உள்ளது. இதற்கான தீர்வு என்ன?

முதுகு தண்டுவடப்பகுதியில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானம் காரணமாக வலி ஏற்படும். அதே போல் விபத்துக்களால் ஏற்படும் வலி, முதுகுக்கு அழுத்தம் கொடுப்பதாலும் 'டிஸ்க் பல்ஜ்' வலி ஏற்படும்.

ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து பணி செய்பவர்கள், சுமை துாக்குபவர்கள், இருசக்கர வாகனங்களில் அதிகமாக பயணம் செய்பவர்கள் இது போன்ற வலியால் அவதிப்படும் நிலை ஏற்படும். வலி ஏற்படும் போது உடனடியாக மருத்துவர் ஆலோசனையை பெற வேண்டும்.

பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சையளிக்கப்படும். சிறிய அளவில் எலும்பு முறிவு என்றால் இடுப்பில் பெல்ட் அணிவது, மருந்து மாத்திரை மூலம் குணப்படுத்தலாம். பிசியோதெரபி சிகிச்சையும் வழங்கலாம். தீவிர பாதிப்பு இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும்.

தண்டுவடத்தில் காச நோய் கிருமி தொற்றுகளாலும் வலி ஏற்படும். காசநோய் கிருமி தொற்றுக்கான மாத்திரைகளை சாப்பிட்டால் தீர்வு ஏற்படும்.

- டாக்டர் பி.பார்த்திபன், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்

பா.ராதிகா, சிவகங்கை: உயர் ரத்த அழுத்தம் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது?

உயர் ரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிகள் மகப்பேறு டாக்டரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். ரத்த அழுத்த அளவு, கால் வீக்கம் சிறுநீரில் புரதம், எடை அதிகரிப்பு போன்றவற்றை டாக்டர் மூலம் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும். மருந்துகளை சுயமாக நிறுத்துவதோ அல்லது அளவை மாற்றுவதோ கூடாது. சில மருந்துகள் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பற்றவையாக இருக்கலாம் என்பதால் டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பன்படுத்த வேண்டும். உப்பின் பயன்பாட்டைக் குறைப்பது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். பதப்படுத்தப்பட்ட உணவு, ஊறுகாய், அப்பளம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

- டாக்டர் காஞ்சனா, இணை பேராசிரியர், அரசு மருத்துவக் கல்லுாரி, சிவகங்கை

இந்திரா, ஸ்ரீவில்லிபுத்துார்: எனது 15 வயது மகளுக்கு அடிக்கடி காது வலி ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம், எப்படி சரி செய்ய வேண்டும்?

தலையை அடிக்கடி நனைப்பதாலும், ஈரத்தன்மையுடன் தலையை நெடுநேரம் வைத்திருப்பதாலும் காதில் வலி ஏற்படலாம். அடிக்கடிசளி, தும்மல், மூக்கடைப்பு பிரச்னை இருந்தாலும் காது ஜவ்வு பாதிக்கப்பட்டு வலி ஏற்படலாம். இதனை தவிர்க்க குளிர்ந்த நீரை அதிகளவில் பயன்படுத்துவதையும், குளிர்பானங்கள் அதிகமாக குடிப்பதையும், வாகன பயணத்தின் போது காதிற்குள் குளிர்ந்த காற்று செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

- டாக்டர் கனகவேல்காது, மூக்கு, தொண்டை நோய் சிறப்பு நிபுணர், ஸ்ரீவில்லிபுத்துார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us