Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/ எப்.எம்.பி., பார்க்காமல் அடுக்குமாடி திட்டத்தில் வீடு வாங்குகிறீர்களா?

எப்.எம்.பி., பார்க்காமல் அடுக்குமாடி திட்டத்தில் வீடு வாங்குகிறீர்களா?

எப்.எம்.பி., பார்க்காமல் அடுக்குமாடி திட்டத்தில் வீடு வாங்குகிறீர்களா?

எப்.எம்.பி., பார்க்காமல் அடுக்குமாடி திட்டத்தில் வீடு வாங்குகிறீர்களா?

ADDED : ஜூன் 22, 2024 06:59 AM


Google News
Latest Tamil News
சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபடும் போது, ஆவண ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர், நிலத்தின் உரிமை ஆவணங்கள், திட்ட அனுமதி வரைபடம் போன்ற விஷயங்களில் தான் கவனம் செலுத்துகின்றனர்.

இன்றைய சூழலில், பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், அதை செயல்படுத்தும் நிறுவனம் அளிக்கும் விபரங்கள் அடிப்படையில் தான் வீடு வாங்குவோர் ஆய்வு மேற்கொள்ள முடியும். திட்ட அனுமதி, ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு போன்ற விபரங்களை பொது மக்கள் தாங்களாக சரி பார்க்க வேண்டும்.

நீங்கள் வீடு வாங்க ஒரு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை தேர்வு செய்யும் நிலையில், அது அமைந்துள்ள நிலம் தொடர்பான விஷயங்களில் முழுமையான ஆய்வு செய்ய வேண்டும். அந்த நிலம் யாருடைய பெயரில் உள்ளது. கட்டுமான நிறுவனம் அதன் உரிமையாளரா, பொது அதிகாரம் பெற்றதா என்பதை தெளிவாக விசாரிக்க வேண்டும்.

இத்துடன், நில உரிமை பத்திரத்தை ஆய்வு செய்கையில், கட்டுமான நிறுவனம் பெயருக்கு கடைசியாக வழங்கப்பட்ட ஆவணத்தை மட்டும் பார்த்தால் போதும் என்று சிலர் நினைக்கின்றனர். அந்த நிலம் கட்டுமான நிறுவனம் பெயருக்கு எப்படி வந்துள்ளது என்பதையும், அதற்கு முன் யாருடையது என்பதையும் பார்க்க வேண்டும்.

இதில் நில உரிமை, பட்டா, திட்ட அனுமதி வரைபடம் ஆகியவற்றை ஆய்வு செய்தால், பெரும்பாலான விஷயங்கள் வெளிப்படையாகிவிடும். ஆனால், அந்த நிலத்தில் வருவாய் துறை நிர்வாக ரீதியான விஷயங்கள் எதுவும் உள்ளதா என்பதை முழுமையாக ஆய்வு செய்ய இது போதாது.

குறிப்பாக, ஒரு நிலத்தின் பட்டா மற்றும் பத்திரத்தில் சர்வே எண், பரப்பளவு, வகைபாடு மட்டுமே இருக்கும். அதன் நான்கு எல்லைகள் எது என்ற விபரங்கள் எழுத்து வடிவில் தான் குறிப்பிடப்பட்டு இருக்கும் என்பதால், கள நிலவரத்தை அறிவது எளிதல்ல.

இத்தகைய சூழலில், வருவாய் துறை அளித்த எப்.எம்.பி., எனப்படும் நில அளவை வரைபடத்தில் அந்த குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலத்தின் முழு விபரம் கிடைக்கும். குறிப்பாக, அந்த நிலத்தில் பொது பாதை, வண்டிப்பாதை, வாய்க்கால், நீர் நிலை ஏதாவது இருக்கிறதா என்பது குறித்த அடிப்படை விபரங்களை அறியலாம்.

நீங்கள் வீடு வாங்கும் திட்டம் அமைந்துள்ள நிலத்தின் நில அளவை வரைபட பிரதி வேண்டும் என்று கேட்டு வாங்கி பாருங்கள். நிலம் தொடர்பான பிரச்னை எதுவும் இல்லை, எந்த விபரங்களும் மறைக்கப்படவில்லை எனும் நிலையில், கட்டுமான நிறுவனங்கள் இந்த விபரங்களை வீடு வாங்குவோருக்கு அளித்து விடும்.

ஒருவேளை கட்டுமான நிறுவனம் இந்த வரைபடத்தை அளிக்க மறுத்தால், வருவாய் துறையின் இணையதளத்தில் நீங்கள் நேரடியாக பெறலாம் என்கின்றனர் நில அளவை துறை அதிகாரிகள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us