எலக் ஷன் வந்தது... 'ஈகோ' பறந்தது!
எலக் ஷன் வந்தது... 'ஈகோ' பறந்தது!
எலக் ஷன் வந்தது... 'ஈகோ' பறந்தது!
எலக் ஷன் வந்தது... 'ஈகோ' பறந்தது!
ADDED : மார் 17, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
''ஒ ரு வழியா 'எலக்ஷன்' தேதி அறிவிச்சுட்டாங்க. இனி, எங்க பார்த்தாலும், 'எலக்ஷன்' சம்மந்தப்பட்ட பேச்சா தான் இருக்கும்...'' ஆரம்பித்தாள் மித்ரா.
''ஆமா மித்து. நீ சொல்றது 'கரெக்ட்' தான். அவிநாசி தொகுதியில இந்த தடவை தி.மு.க.வில 'சீட்' கேட்டு, ஒரே பேர் கொண்ட'மாரி' இயக்குனர் ஒருத்தரும், அந்தியூரை சேர்ந்த 'மாஜி' வி.ஐ.பி. ஒருத்தரும் விருப்ப மனு கொடுத்திருக்காங்களாம். தி.மு.க. சார்பில் நிறுத்தப்படற வேட்பாளரை பொருத்து தான், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேட் பாளரை சொல்வாங்களாம்...'' என்றாள் சித்ரா.
''அக்கா, அதே ஊரில, புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள டாஸ்மாக் கடையை மூடிட்டாங்களாம். விசாரிச்சதுல, அந்த கடைக்கு பார் நடத்துற பிரச்னையில, ஆளுங்கட்சி ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு ஏற்பட்ட போட்டியால, 'நமக்கெதுக்கு வம்பு'ன்னு டாஸ்மாக் டி.எம்.தான் பூட்ட சொல்லிட்டாராம்,''
''இதேமாதிரி மக்களுக்கு தலைவலியா உள்ள பல டாஸ்மாக் கடைகளையும் மூடினால், லேடீஸ்க்கு நிம்மதியா இருக்கும்,'' என்ற மித்ரா, ''ஊத்துக்குளி ரோடு பாளையக்காட்ல, ரோட்டுக்கு ரெண்டு பக்கமும், ரெண்டு டாஸ்மாக் கடை, 'பார்' இருக்கு. அதுல, இல்லீகலா, 24 மணி நேரமா சரக்கு விக்கிறாங்கன்னு சொல்லி, பா.ஜ. காரங்க ஆர்ப்பாட்டம் பண்ணாங்க. உடனே போலீஸ் வந்து சமாதானம் செஞ்சு, இனி விக்கக்கூடாது. மீறனால், நடவடிக்கை உண்டுன்னு எச்சரிக்கை செஞ்சாங்களாம். ஆனா, மறுபடியும் 'இல்லீகலா' மது வித்துக்கிட்டு தான் இருக்கறாங்களாம்...'' என்றாள்.
தலைநகரம் யாருக்கு? ''பல்லடம் தொகுதியில, அ.தி.மு.க. கூட்டணியில பா.ஜ. முன்னாள் தலைவரு போட்டியிடறதுக்கு வாய்ப்பு அதிகம்னு பேசிக்கிறாங்க அக்கா...'' பேச்சை மாற்றிய சித்ரா தொடர்ந்தாள்.
''அவரை மாவட்ட தலைநகரான சவுத்ல கூட போட்டியிட வைக்கலாம்'ன்னு, அ.தி.மு.க. காரங்களே பேசிக்கிறாங்களாம். அந்த தொகுதிக்கு, அதே கட்சியோட மாநில நிர்வாகியும் குறி வச்சிருக்காராம். ஆளுங்கட்சி சார்பில, இப்ப இருக்கற வி.ஐ.பி.க்கு திரும்பவும் 'சீட்' கொடுப்பாங்களான்னு தெரியல. 'சீட்' கன்பார்ம் ஆனதுக்கு அப்புறம், தொகுதி மக்களை நல்லபடியா 'கவனிக்கலாம்'ன்னு சொல்லி, 'வெய்ட்' பண்றாராம். அதேபோல, விஜய் கட்சியில இருக்கற மாஜி அ.தி.மு.க பெண் வி.ஐ.பி. ஒருத்தரு, நார்த் தொகுதிக்கு குறி வச்சிருக்காங்களாம்,'' என்றாள்.
ஓட்டில்லாதவரின் சேட்டை ''நானும் விஜய் கட்சி மேட்டர் ஒன்று சொல்றேன் சித்ராக்கா...'' என்ற மித்ரா, ''ரெண்டு, மூனு நாள் முன்னாடி, அந்த கட்சி சார்பில திருப்பூர்ல ஆர்ப்பாட்டம் நடந்துச்சு. வேன்ல நின்னபடி தான் நிர்வாகிங்க பேசினாங்க. எல்லாரும் 'திபுதிபு'ன்னு வேன்ல ஏற 'ட்ரை' பண்ணப்போ, ஒருத்தரு, 'கூட்டமா யாரும் ஏறாதீங்க...'ன்னு, கெஞ்சாத குறையா சொல்லி, கட்டுப் படுத்தி வச்சிருந்தாரு. ஆனா, கொஞ்ச நேரத்துல, மண்டல பொறுப்பாளரான 'மாஜி' பெண் எம்.பி.கூட, 10, 15 பேர் வேன்ல ஏறியிருக்காங்க. இது, மாநகர நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடமா போச்சாம்...'' என்றாள்.
''அந்த கட்சிக்கு சேர்ற கூட்டத்தை வச்சு, எதையும் கணிக்க முடியாது மித்து. இப்படி தான், ரெண்டு நாளைக்கு முன்னாடி, பெருமாநல்லுார்ல, கட்சியோட வடக்கு தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடந்துச்சு. அதுல கலந்துக்கிட்ட, 'ரிப்போர்ட்டர்' ஒருத்தரு, கூட்டம் நடக்கிறத போட்டோ எடுத்திருக்காரு. அப்போ கட்சி தொண்டர், அவர் போட்டோ எடுக்கிறத தடுத்து, 'நீங்க யாரு'ன்னு கேட்டிருக்கான். இதிலென்ன கொடுமைன்னா, அந்த பையனுக்கு ஓட்டோ இல்லையாம்...'' சொல்லி சிரித்தாள் சித்ரா.
''இப்படி பக்குவம் இல்லாதவங்கதான் அந்த கட்சியில நிறைய பேர் இருக்காங்க,'' என்ற மித்ரா, ''காங்கயம் பக்கத்துல, போன வாரம் ரெண்டு லாரிகள் மோதி, விபத்து நடந்துச்சு. இந்த ஆக்ஸிடென்டை சுமூகமா பேசி முடிக்க ஒரு போலீஸ் ஆபீசர் 'டீல்' பேசியிருக்காரு. விவகாரம் பெரிய ஆபீசர் காதுக்கு போக, ஸ்டேஷன்ல வேல பார்த்துட்டு இருந்த ஒரு போலீஸ்காரரை பலிகடாக்கி, 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்களாம்...'' என்றாள்.
''இதெல்லாம் நல்லாவா இருக்கு...'' ஆதங்கப்பட்ட சித்ரா, ''முத்துார் நெல் கொள்முதல் மையத்துல, விவசாயிகள்கிட்ட இருந்து கொள்முதல் செய்ற நெல் மூட்டைகளை, உடனுக்குடன் வாகனங்களில் ஏற்றி அனுப்பாம, குடோன்லயே தேக்கி வைக்கிறாங்களாம். அத எடுத்துட்டு போற வண்டியோட கான்ட்ராக்டருக்கு, ஆளுங்கட்சி செல்வாக்கு இருக்கிறதால, அவர் இஷ்டத்துக்கு நடந்துக்குறாராம். இப்படி பண்றதால, எடை பிரச்னையும் வருதாம். ஆனா, நெல்லை எடுத்துட்டு போக சாக்குப்பை தட்டுப்பாடு தான், இந்த பிரச்னைக்கு காரணம்ன்னும் ஒரு தரப்பு சொல்றாங்களாம்...,' என்றாள் சித்ரா.
விஐபி அந்தர்பல்டி ''அக்கா... குப்பை கொட்டும் மேட்டர்ல, சிட்டிக்கு பக்கத்துல இருக்கிற கார்ப்பரேஷன் விஐபிக்கு, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிச்சு, போலீசாருடன் தள்ளுமுள்ளு ஆகி, எப்.ஐ.ஆர். ஆனது தெரியுமில்ல''
''ஆமான்டி அது பழைய கதை தானே...''
''ஆனா, அந்த கேஸ் எல்லாத்தையும் வாபஸ் வாங்குறன்னு சொன்ன விஐபி, அதுக்காக நடந்த கூட்டத்துல, கிராம மக்கள் மத்தியில தன்னோட வருத்தத்தை பதிவு செஞ்சாராம். இதில என்ன விஷயம்னா, எலக் ஷன் வர்றதால, எதுக்கு மக்கள்கிட்ட பிரச்னை. ஒரு கூட்டம் போட்டு சமாதானமா போங்கன்னு கட்சி மேலிட உத்தரவாம். அதனால, மக்கள்கிட்ட மனம் திறந்து பேசின விஐபி, கிராமத்தில் கொட்டிய குப்பை எல்லாம் சுத்தமா எடுக்க சொல்லி உத்தரவு போட்டாராம். அடுத்த ரெண்டு நாள்ல, ஒரு துளி குப்பையில்லையாம். இதனால, கிராம மக்கள் குஷியாயிட்டாங்க,''
''இல்ல மித்து. வேற வழியில்ல. எலக் ஷன் வந்திருச்சு. கட்சி சொல்றது கேட்டாதான், மக்கள் கிட்ட போக முடியும். அதனால, விஐபி அடக்கி வாசிக்கிறாரு,'' சொல்லி சிரித்த சித்ராவிடம் விடைபெற்றாள் மித்ரா.


