காக்கிச் சட்டைக்குள் ஒரு 'கருணை'
காக்கிச் சட்டைக்குள் ஒரு 'கருணை'
காக்கிச் சட்டைக்குள் ஒரு 'கருணை'
ADDED : மார் 03, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''இ றுதி வாக்காளர் பட்டியல் ரிலீஸ் பண்ணிட்டாங்க. உன் பேர் இருக்கான்னு 'செக்' பண்ணிட்டியா மித்து...'' அரட்டையை ஆரம்பித்தாள் சித்ரா.
''ம்ம்ம்...'செக்' பண்ணி பாத்துட்டேன்க்கா. கரெக்டாத்தான் இருக்கு. என்ன ஒரு விஷயம்ன்னா, எஸ்.ஐ.ஆர்.க்கு ஆளுங்கட்சிக்காரங்க எதிர்ப்பு தெரிவிச்ச மாதிரி காண்பிச்சிக்கிட்டாலும், அத அவங்க தான், நுாறு பர்சென்ட் பயன்படுத்திக்கிட்டாங்கன்னு சொல்றாங்க...'' என்றாள் மித்ரா.
''ஓ... அப்படியா...''
''ஆமாங்க்கா. ஒவ்வொரு வார்டுலயும் பி.எல்.ஏ.க்களோட, அந்தந்த வார்டு ஆளுங்கட்சி நிர்வாகிங்க கூடயே போய், எந்தெந்த வீட்ல யாரு இருக்கா; அதுல ஆளுங்கட்சிக்கு ஆதரவா எத்தன ஓட்டு இருக்கு. மத்த கட்சிக்கு ஆதரவா எவ்ளோ ஓட்டு இருக்குன்னு தெரிஞ்சு வச்சுகிட்டாங்களாம். எலக் ஷன் டைம்ல அவங்கள நல்லபடியா 'கவனிச்சு' ஓட்டு வாங்கிடலாம்ன்னு 'பிளான்' போட்டிருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.
கச்சிதமா நிரம்புது 'கல்லா' ''அதெல்லாம் சரிதான்டி. ஆனா, எல்லா டிபார்ட்மென்ட்லயும் கலெக் ஷன், கரெப்ஷன் 'ஓவரா' இருக்குன்னு பேசிக்கிறாங்க. பல்லடம் யூனியன் ஆபிஸ்ல 'டெண்டர்' வைத்து ஆளுங்கட்சி தரப்பு, பல கோடி ரூபாய் சுருட்ட 'ட்ரை' பண்ணியிருக்காங்க. இதுக்கு பெரிய ஆபீசர் ஒத்து வராததால, மேலிடத்துல 'பிரஷர்' கொடுத்து, அவரை 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்கன்னா பாரேன்...'' அங்கலாய்த்தாள் சித்ரா.
''பேரூராட்சி, நகராட்சிகளில் டிரான்ஸ்பர், பதவி உயர்வு எது வந்தாலும், மேலிடத்தை 'கவனிக்கனும்'ன்னு சொல்லி, பெரிய அமவுன்ட் 'கலெக் ஷன்' பண்ணிடறாங்களாம். 'பில்டிங் அப்ரூவலுக்கு, சதுர அடிக்கு இவ்வளவுன்னு 'ரேட்' பிக்ஸ் பண்ணி, கொளுத்த வசூல் வேட்டையாம். இலவசம், உரிமைத்தொகை, ஊக்கத்தொகைன்னு அரசாங்கம் எத்தனை திட்டங்கள் கொடுத்தாலும், இந்த கமிஷன், கலெக் ஷன் விவகாரம் தான், விஸ்வரூபம் எடுக்கப்போகுதுன்னு, ஆபீசர்களே பேசுற அளவுக்கு ஆயிடுச்சுங்க்கா...'' யதார்த்தம் உடைத்தாள் மித்ரா.
ஆபீசர்களுக்கு 'டோஸ்' ''போன வாரம் கலெக்டர் ஆபீஸ்ல நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்துல, 'ரெவின்யூ டிபார்ட்மென்ட் செயல்பாடு ரொம்ப மோசம்'ன்னு, விவசாய சங்கத்துக்காரங்க புகார் வாசிச்சிருக்காங்க. இத கேட்ட பெரிய ஆபீசர், ''இந்தளவு புகார் வர்ற அளவுக்கு நடந்துக்கலாமா? இப்படியெல்லாம் செய்யாதீங்க. கஷ்டமா இருக்கு. எந்த புகாரா இருந்தாலும், சீக்கிரமா 'ஆக் ஷன்' எடுங்கன்னு 'அட்வைஸ்' பண்ணியிருக்காரு. அத்தோட விடாமா, கரும்பு லோடு லாரிக்கு 'ஓவர் லோடு'ன்னு ஓடிப்போய் 'கேஸ்' போடறீங்க. அனுமதியில்லாம கல், மண் எடுத்துட்டு வர்ற லாரிகளுக்கும் அப்படித்தான் 'பைன்' போடறீங்களான்னு கேட்டு, சம்மந்தப்பட்ட துறை ஆபீசர்களை ஒரு பிடி பிடிச்சிட்டாராம்,'' என்றாள் மித்ரா.
''ஒவ்வொரு ஏரியாவுலயும், ஆளுங்கட்சிக்காரங்க ஆசியோட வீடுவீடா போய் ரேஷன் அரிசியை 'கலெக்ட்' பண்ணி, கள்ளச்சந்தைக்கு அனுப்பி வைக்கிற வேலையை சிலர் செய்றாங்க. ரேஷன் கடைகளிலிருந்து வாங்குற இலவச அரிசியை கிலோவுக்கு, 10 ரூபாய்ன்னு வாங்கிட்டு போயிடுவாங்களாம். இப்போ, எலக் ஷன் டைம்ங்கறதால, ரெண்டு மாசத்துக்கு இந்த வேலையை யாரும் செய்ய வேண்டாம்ன்னு, 'மேலிட' உத்தரவாம்,''
''இதனால, ரேஷன் கடைல இருந்து அரிசியை வாங்கி வீட்ல பத்திரமா வைங்க; ரெண்டு மாசம் கழிச்சு மொத்தமா வாங்கிக்கிறோம்னு ரேஷன் அரிசி கலெக் ஷன் பண்றவங்க சொல்லிட்டு இருக்காங்களாம்...'' என்றாள் சித்ரா.
''கவர்மென்ட்ல, வேல செய்ற கான்ட்ராக்ட் ஊழியர்கள் தான், பணி நிரந்தரம், சம்பள உயர்வு கேட்டு ரோட்டுக்கு வந்து போராட்டம் நடத்துவாங்க. இந்த மாதிரி போராட்டங்கள்ல 'ஆபீசர்' லெவல்ல இருக்கறவங்க கலந்துக்க மாட்டாங்க. ஆனா, கொஞ்ச நாள் முன்னாடி, இ.பி. ஆபீசர்களே ரோட்ல இறங்கி ஆர்ப்பாட்டம் பண்ணது தான் ஆச்சர்யத்திலும், ஆச்சர்யம்...'' என்றாள் சித்ரா.
எலக் ஷன் ஜூரம் ''வர்ற எலக் ஷன்ல திருப்பூர் நார்த் தொகுதியில அ.தி.மு.க. சார்பில போட்டி போட, 'ஆனந்த'மானவரு ட்ரை பண்றாருல்ல...'' என அரசியல் மேட்டருக்கு தாவிய சித்ரா, ''அதுக்கு வெள்ளோட்டமா, கார்ப்பரேஷன் லிமிட்ல இருக்கற வார்டு மக்களுக்கு, ஹாட்பாக்ஸ், எவர்சில்வர் தட்டுன்னு பரிசு மழை பொழியறாராம். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்தே, பெண்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கருணை தொகை தர்றது தான்னு சும்மா அடிச்சு விடறாராம்...''
''ஆளுங்கட்சி சார்பில் போன வாரம், கோவையில பூத் ஏஜன்ட் ஆலோசனைக்கூட்டம் நடந்துச்சுல்ல. கூட்டத்துல கலந்துக்கிட்டவங்களுக்கு, 500 ரூபா கொடுத்திருக்காங்க. ஆனா, அவிநாசி தொகுதியில மட்டும், 200 ரூபாய் தான் கொடுத்தாங்களாம். 'இப்பவே இப்படி பண்ணா... எலக் ஷனுக்கு நாங்க எப்படி வேல பாக்கிறது'ன்னு, பூத் ஏஜன்டுங்க புலம்பி யிருக்காங்க...''
''த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டம், காங்கயம் ரோட்ல இருக்கற ஒரு மண்டபத்துல நடந்திருக்கு. இதுல, மாவட்ட நிர்வாகிங்க சிலருக்கு மேடையில இடம் ஒதுக்கலையாம். இதனால, அவங்க ஒட்டு மொத்தமாக கூட்டத்தை புறக்கணிச்சு வெளியே போயிட்டாங்களாம்...'' என மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள் சித்ரா.
''இப்ப ஆரம்பிச்ச கட்சியில அதுக்குள்ள கோஷ்டி பூசலா?,'' கேட்ட மித்ரா, ''பெரிச்சிபாளையம், தெற்கு தோட்டம் பகுதியில கார்ப்பரேஷன் மூலமா, கான்கிரீட் ரோடு போடற வேலையை துவக்கினாங்க. 'இந்த ரோடு நல்லாத்தானே இருக்கு; திரும்பவும் எதுக்கு ரோடு போடறீங்க. பக்கத்து வீதி தான் மண் ரோடா இருக்கு. அங்க தார் ரோடு போடலாம்லன்னு, மக்கள் கேட்க, 'இந்த வீதியில ரோடு போடறதுக்கு தான் 'பர்மிஷன்' கிடைச்சுருக்கு'ன்னு கார்ப்பரேஷன் ஆபீசர்ங்க சொல்லியிருக்காங்க. ஆனா, மக்களோட எதிர்ப்பால், ரோடு போடற வேலையை நிறுத்திட்டாங்களாம்'' என்றாள்.
இப்படியும் மனிதாபிமானம் ''பெங்களூர்ல இருந்து திருப்பூருக்கு கூரியர்ல வந்த குட்காவை வாங்கறதுக்காக அஞ்சு பேர் போயிருக்காங்க; அவங்களை மடக்கி பிடிச்ச நார்த் கவனிக்கிற சிட்டி போலீஸ்காரங்க, அவங்ககிட்ட இருந்து, 250 கிலோ குட்காவை பறிமுதல் பண்ணாங்க. அந்த கும்பல்ல ஒரு பனியன் தொழிலாளியும் சம்மந்தப்பட்டிருக்க, அவரோட, 14 வயசு பையன், ரெண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக கோவையில இருக்கற ஹாஸ்பிடல்ல ஐ.சி.யு.ல இருக்கற விஷயம் தெரிய வந்திருக்கு,''
''அந்த தொழிலாளியோட இக்கட்டான சூழ்நிலையை புரிஞ்சுக்கிட்ட போலீஸ்காரங்க, மத்த நான்கு பேத்தையும் ஜெயிலுக்கு அனுப்பிட்டு, அந்த தொழிலாளிக்கு மட்டும் சம்மன் கொடுத்து, கோர்ட்டில ஆஜராகணும்ன்னு சொல்லி அனுப்பிட்டாங்களாம்...'' என்றாள் மித்ரா.
''அடடே பரவாயில்லயே. காக்கிச் சட்டைக்குள்ள கொஞ்சம் கருணையும் இருக்கே,'' என்ற சித்ரா, ''ஆனா, அதே நார்த் ஸ்டேஷன்ல, கட்டுமஸ்தான உடம்பை வச்சிருக்க ஒரு போலீஸ்காரர், வாகன தணிக்கைங்கற பெயர்ல, எங்கெல்லாம் முட்டு சந்து இருக்கோ, அங்கெல்லாம் நின்று வசூல் அள்ளி குவிக்கிறாராம்,'' என்றாள் சித்ரா.
'காளை' பெயரிலும் அரசியல் ''காங்கயம் யூனியன் ஆபீஸ் வளாகத்துல, மாவட்ட மினிஸ்டர்கள் காங்கயம் காளைக்கு வெண்கல சிலையை திறந்து வச்சாங்க. காங்கயம் பகுதியில காளைக்கு சிலை அமைக்கிறது சம்மந்தமா, ஊராட்சி ஒன்றியத்தில, ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி, சிலை அமைக்க முயற்சி பண்ணியிருக்காங்க. அதுக்குள்ள அவங்க பதவிக்காலம் முடிஞ்சு போனதால, கட்சி சார்பில சிலை அமைக்க குழு அமைச்சு, நன்கொடை நிதி திரட்டி காளைக்கு சிலை வச்சிருக்காங்களாம்,''
''இந்த நிலைமைல, முன்னாள் யூனியன் தலைவரோட பெயரை பயன்படுத்தி, அவரது முயற்சியால தான் காளை சிலை வந்த மாதிரியும், அதுக்காக அவரு தமிழக அரசுக்கு நன்றி சொல்ற மாதிரியும், அவரோட போட்டோவை போட்டு, யாரோ போஸ்டர் ஒட்டியிருக்காங்க. இது, அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்காம். இந்த மாதிரி, போஸ்டர் ஒட்டினவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்ன்னு, போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்திட்டாராம்,'' என்றாள் மித்ரா.
ஆளுங்கட்சி மல்லுக்கட்டு ''மித்து, போன வாரம் கார்ப்பரேஷன் பட்ஜெட் கூட்டம் நடந்ததில்ல. அதில, 'ஒவ்வொரு பட்ஜெட்டுக்கும் அட்டை படங்கள் மட்டுமே மாறுது. மற்றபடி திட்டம் ஒன்றுமில்லை. இதற்கு முன்னாடி பட்ஜெட்ல சொன்ன திட்டங்கள் பத்தி பேசிட்டு, அதுக்கு அப்புறம் சொல்லலாம். ஒவ்வொரு கூட்டத்திலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது மரபு. அதையும் பாடவில்லை,' என்று கார்ப்பரேஷன் எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டுகளை அடுக்கினாராம்,''
''ஆனால், அத கண்டுக்காத மேயர், 'உங்களுக்கு வெளிநடப்பு செய்ய வேண்டும் என்பதற்காக காரணங்களை கூறுகிறீர்கள். வேண்டுமென்றால், வெளிநடப்பு செய்து கொள்ளுங்க,'' என்றதும், ''நாங்கள் ஆரோக்கியமான முறையில் விவாதம் செய்யுங்க என்று தான் சொல்கிறோம். வெளிநடப்பு நோக்கமல்ல'' என்று மேயருடன் கடும் வாக்குவாதம் செய்த பின், வெளிநடப்பு செய்தனராம்,'' என்றாள் சித்ரா.
''பட்ஜெட் கூட்டத்தில சூடு பறக்கத்தானே செய்யும்,'' என்ற மித்ரா, ''தேர்தல் நெருங்குவதால், ஆளுங்கட்சி சார்பில், திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதியில் போட்டியிட, பலரும் சென்னை சென்று, விருப்ப மனு தாக்கல் செய்றாங்களாம். சிட்டிங் எம்.எல்.ஏ.,வோட 'சன்', மேயர், வடக்கு பகுதி பொறுப்பாளர் என பலரும், இரண்டு தொகுதியில ஏதாவது ஒன்னுல 'சீட்' வாங்கிடணும் என, தங்கள் கட்சி தலைமையிலுள்ள செல்வாக்கை பயன்படுத்தி காய் நகர்த்தி வருகின்றனராம்,''
''இப்படி 'சீட்' கேட்டு, 'மல்லுக்கட்டும்' ஆளுங்கட்சி நிர்வாகிகளை பார்த்து, கூட்டணியில் இருக்கும், 'தோழர்கள்' 'அவங்களுக்குள்ளயே இந்தளவு 'டப்' குடுத்துக்கறாங்க. நமக்கு தொகுதி கிடைக்குமா?'' என்று புலம்பி வருகின்றனராம்.
''ஓ.கே. மித்து... மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வரலாம்'' என, சித்ரா அழைக்க, ''ஓ...போலாமே'' என புறப்பட்டாள் மித்ரா.


