Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/கட்சி நிதி கொடுத்தா தான் சொத்து வரி; அப்பாவி மக்களிடம் பணம் பறி!

கட்சி நிதி கொடுத்தா தான் சொத்து வரி; அப்பாவி மக்களிடம் பணம் பறி!

கட்சி நிதி கொடுத்தா தான் சொத்து வரி; அப்பாவி மக்களிடம் பணம் பறி!

கட்சி நிதி கொடுத்தா தான் சொத்து வரி; அப்பாவி மக்களிடம் பணம் பறி!

UPDATED : செப் 23, 2025 08:50 AMADDED : செப் 23, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
சி த்ராவும், மித்ராவும் அதிகாலையிலேயே எழுந்து, குறிச்சி பொங்காளியம்மன் கோயில் அருகே குறிச்சி குளக்கரையில், 'வாக்கிங்' செல்ல ஆரம்பித்தனர்.

குளிர் அதிகமாக இருந்ததால், ஸ்வெட்டர், மங்கி குல்லா அணிந்திருந்த மித்ரா, ''ஏ.டி.எம்.கே. எம்.எல்.ஏ. பேசுன வீடியோ சமூக வலைதளத்துல வைரலாகிட்டு இருக்காமே...''

''அது, சிங்காாநல்லுார் தொகுதியில உப்பிலிபாளையம் ஏரியாவுல நடந்த மீட்டிங்ல, எம்.எல்.ஏ. ஜெயராம் பேசுன வீடியோ. ஆளுங்கட்சிக்காரங்க செயல்பாட்டை தோலுரிச்சுக் காட்டிட்டாரு. அப்போ, 'திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் மாநகர் மாவட்ட செயலாளரா இருக்காரு; அவர் மனைவி கிழக்கு மண்டல சேர்மனா இருக்காங்க. கார்ப்பரேஷன் லிமிட்டுல இருக்கற 15 வார்டு, சிங்காநல்லுார் தொகுதிக்குள்ள வருது. கூடைப்பந்து மைதானம், மேடை, ரேஷன் கடை ஒதுக்குறதுக்கு தொகுதி நிதி ஒதுக்குனா, எந்த வேலையும் செய்யாம ஆளுங்கட்சிக்காரங்க முடக்கி வச்சிருக்காங்க. மாமியார் வீட்டு காரை நிறுத்துறதுக்கு இடவசதி வேணும்னு, மைதானம் அமைக்க விடாம தடுக்குறாங்கன்னு நேரடியாவே குற்றம் சுமத்தியிருக்காரு,''

'பார்ட்டி பண்ட்' கலெக்சன் ''அதெல்லாம் இருக்கட்டும்... கார்ப்பரேஷன் மேட்டர் எதுவுமே சொல்லாம நழுவுறீங்களே...''

அதைக்கேட்டு சிரித்த சித்ரா, ''கார்ப்பரேஷன் சப்ஜெக்ட் தானே. புதுத்தகவல் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. எப்பவும் பில்டிங் பிளான் அப்ரூவல் வாங்குறதுக்கு பைல் போனா, 'பார்ட்டி பண்ட்' கேக்குறது வழக்கம். இப்போ, சொத்து வரி போடுறதுக்கு பைல் கொடுத்தாலும், ரெசிடென்சியல் பில்டிங்கா இருந்தா, 10 பர்சன்டேஜ், கமர்சியல் பில்டிங்கா இருந்தா, 20 பர்சன்டேஜ் 'பார்ட்டி பண்ட்' கொடுக்கணும்னு, பில் கலெக்டர்களை கட்டாயப்படுத்துறாங்க,''

''பார்ட்டி பண்ட் கொடுக்கலைன்னா, பைல்களை கெடப்புல போடச் சொல்லி வாய்மொழி உத்தரவு போட்டிருக்காங்க. திருச்சி மீசைக்காரர் நியமிச்சிருக்கற, 'அவிநாசி'க்காரர் உதவியாளரான நான்கெழுத்து பிரமுகர், பில் கலெக்டர்களை கான்டாக்ட் பண்ணி ஆர்டர் போடுறாராம். வரி வசூலை அதிகப்படுத்தச் சொல்லி கமிஷனர் தரப்புல அழுத்தம் வருது; 'பார்ட்டி பண்ட்' வசூலிக்கச் சொல்லி, இன்னொரு தரப்புல இருந்து அழுத்தம் வருது. யார் உத்தரவை செயல்படுத்துறதுன்னு தெரியாம, பில் கலெக்டர்கள் தவிக்கிறாங்க...'' என்றபடி, குளக்கரையில் நடக்க ஆரம்பித்தாள் சித்ரா.

சீனியர்கள் அதிருப்தி பின்தொடர்ந்து சென்ற மித்ரா, ''முப்பெரும் விழாவுக்கு போயிருந்த ஆளுங்கட்சி சீனியர்கள் பலரும் அதிருப்தியில இருக்காங்களாமே...'' என நோண்டினாள்.

''ஆமாப்பா... பொங்கலுார் பழனிசாமிக்கு விருது கொடுத்ததை எல்லோரும் பாராட்டுறாங்க. அதோட, மேற்கு மண்டலத்துல சிறப்பா பணியாற்றியதா, குறிச்சி பகுதி கழக செயலாளருக்கு விருது கொடுத்து, பண முடிப்பு கொடுத்தாங்க. 2021 அசெம்ப்ளி எலக்சன்லயும், 2024 எம்.பி. எலக்சன்லயும் குறிச்சி ஏரியாவுல அதிகமான ஓட்டு வாங்கிக் கொடுத்திருக்காருன்னு ஏரியாக்காரங்க சொல்றாங்க.

அவரை விட சீனியர்கள் பலரும் இருக்காங்க. அவுங்களை ஒதுக்கிட்டு, இவருக்கு கொடுத்ததுனால சீனியர்ஸ் சங்கடத்துல இருக்காங்க. இதெல்லாம், 2026 எலக்சன் சமயத்துல ஆளுங்கட்சிக்கு எதிரா திரும்புமா, அதுக்குள்ள அதிருப்தியாளர்களை கண்டுபிடிச்சு, தலைமையில இருந்து சமரசம் செய்வாங்களான்னு, உடன்பிறப்புகள் மத்தியில 'ஹாட் டாபிக்'கா போயிட்டு இருக்கு,''

நம்மூரில் ஆதவ்! பேசிக் கொண்டே, தஞ்சாவூர் பொம்மை சிலை பகுதியை கடந்த மித்ரா, ''ஆதவ் அர்ஜூனா நம்மூர்ல போட்டி போடப் போறதா சொல்றாங்களே... உண்மையா'' என, கேட்டாள்.

''அதுவா... ஆளுங்கட்சி தரப்புல தெற்கு தொகுதியை கைப்பத்துறதுக்கு பலத்த போட்டி நடந்துக்கிட்டு இருக்கு. ஏகப்பட்ட பேரு, அவுங்கவுங்களுக்கு நெருக்கமான வி.ஐ.பி.,கள் உதவியோட, கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுக்குறாங்க. டிசம்பர் அல்லது ஜனவரியில வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஆரம்பிப்பாங்கன்னு, நிர்வாகிகள் தரப்புல சொல்றாங்க. இருந்தாலும், திடமான நம்பிக்கையில 'ரெண்டு' பேர், தொகுதியை ஆளுக்கொரு திசையில தயார் செஞ்சுட்டு இருக்காங்க,''

''இந்த தொகுதியில சிறுபான்மையினர் ஓட்டும், ஆதிதிராவிடர்கள் ஓட்டும் ஜாஸ்தியா இருக்கு. அதனால, ஆதவ் அர்ஜூனா போட்டி போடுறதுக்கு பிளான் வச்சிருக்காராம். அதனால, தெற்கு தொகுதிக்குள்ள மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி, விஜய் பேசுறதுக்கு இடம் தேர்வு செஞ்சுட்டு இருக்காங்களாம்...''

விஜய் பிரசாரம் தள்ளி வைப்பு ''நம்மூருக்கு விஜய் பிரசாரத்துக்கு வர்றது, தள்ளிப் போகுதுன்னு சொன்னாங்களே...''

''ஆமா, மித்து! நானும் கேள்விப்பட்டேன். அடுத்த மாசம், 4, 5ல் வர்றதா இருந்துச்சு. போலீஸ் பர்மிஷன், பாதுகாப்பு கேட்டு, கட்சியில இருந்து கமிஷனர் ஆபீசுல பெட்டிஷன் கொடுத்திருக்காங்க. அடுத்த மாசம் சி.எம்., நிகழ்ச்சி நடக்கப் போகுது. ஏற்கனவே இ.பி.எஸ். ரெண்டு ரவுண்டு நம்மூருக்கு வந்துட்டுப் போயிருக்காரு.

ஆளுங்கட்சி தரப்பு, அ.தி.மு.க. தரப்புன்னு ரெண்டு தரப்பையும் மிரட்டுற மாதிரி இருக்கணுங்கிறதுக்காக, சி.எம்., வந்துட்டு போனதுக்கு அப்புறம் நடத்துனா, 'எபக்ட்' நல்லா இருக்கும்னு, விஜய்க்கு ஆலோசனை சொல்லி இருக்காங்க. அதனால, சி.எம்., பங்சனுக்கு அப்புறம் நடத்திக்கிடலாம்னு ஒத்திவச்சிருக்காங்களாம்,''

அந்தர் பல்டி ரகசியம் ''அதெல்லாம் இருக்கட்டும். பப்ளிக் எதிர்ப்பை பார்த்ததும் ஆளுங்கட்சி தரப்பு பின்வாங்கியிருச்சாமே...''

''ஆமா மித்து! நானும் கேள்விப்பட்டேன். சூலுார்ல இருக்கற பொன்விழா கலையரங்கம் பெயரை மாத்துறதுக்கு ஆளுங்கட்சி தரப்பு, பேரூராட்சி நிர்வாகம், மேலிட தலைகள், உயரதிகாரிகள் வரைக்கும் முயற்சி செஞ்சாங்க. பெயரை மாத்துறதுக்கு அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளும், 'பப்ளிக்'கும் ஆட்சேபனை தெரிவிச்சு, ஆபீசர்களிடம் பெட்டிசன் கொடுத்திருக்காங்க.

எதிர்ப்பு பரவலா கெளம்புனதுனால, எதுக்கு வீண் வம்புன்னு, கலையரங்கத்துல இருக்கற விளையாட்டு மைதானத்துக்கு பெயர் வைக்கப் போறாம்னு, பேரூராட்சி நிர்வாகம் 'அந்தர் பல்டி' அடிச்சிருக்கு... என்னடா... இது, நேத்து வரைக்கும் ஒன்னு சொன்னாங்க; இன்னைக்கு மாத்திப் பேசுறாங்களேன்னு, 'பப்ளிக்' தரப்புல சிரிக்கிறாங்க,''

லட்சங்களில் லஞ்சம் ''லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்காரங்க, கவர்மென்ட் டிபார்ட்மென்ட்டுல அடிக்கடி 'அரெஸ்ட்' பண்ணினாலும் லஞ்சம் வாங்குறது இன்னும் குறையலையே...''

''நீ சொல்றது உண்மைதான்... அன்னுார் ஏரியாவுல ரொம்ப நாளா தரிசா கெடந்த பூமியை சைட் பிரிச்சு விக்கிறதுக்கு 'மூவ்' பண்றாங்க. இதுக்கு அக்ரி டிபார்ட்மென்ட்டுலயும், டி.டி.சி.பி.,யிலும் பர்மிஷன் வாங்கணும். அக்ரி டிபார்ட்மென்ட்டுல சில ஆயிரங்கள் லஞ்சம் வாங்குறாங்க. டி.டி.சி.பி., ஆபீசுல லட்சத்துல லஞ்சம் கேக்குறாங்க.

லஞ்சத் தொகை எவ்வளவுன்னு சொல்றதுக்கும் இழுத்தடிக்கிறாங்களாம். லஞ்சம் வாங்கி, கைமாத்தி விடுறதுக்குன்னு புரோக்கர் வச்சிருக்காங்க,'' என்ற சித்ரா, குளக்கரையின் கடைசி பகுதிக்கு சென்று விட்டு திரும்பினாள்.

சிட்டியை நோக்கிச் சென்ற ஆம்புலன்சை பார்த்த மித்ரா, ''அக்கா, கவர்மென்ட் ஹாஸ்பிடலுக்கு புது டீன் அப்பாயின்மென்ட் செஞ்சதுல இருந்து, ஏதாச்சும் ஒரு பிரச்னை வந்துட்டு இருக்கே... ஏதாச்சும் உள்குத்து இருக்குமோ...'' என, கேட்டாள்.

''நீ சொல்றது கரெக்ட்டுதான்! இப்போ, கொஞ்ச நாளா, ஆஸ்பத்திரி நிர்வாகப் பொறுப்புல இருக்குற ஒருத்தரு 'டாமினேசன்', அதிகமா இருக்குதுன்னு சொல்றாங்க. ஹாஸ்பிடலுக்கு ரொம்ப லேட்டா வருவாராம்; சீக்கிரமாவே கெளம்பி போயிடுவாராம். ஸ்டாபை மரியாதை குறைவா, வா... போன்னு பேசுறதா சொல்றாங்க...'' என்றபடி, ஸ்கூட்டரை பார்க் செய்திருந்த இடத்தை நோக்கி, நடந்தாள் சித்ரா.

பின்தொடர்ந்து சென்றாள் மித்ரா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us