Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/ ஒட்ட வைக்க டிரை பண்ணுறாரு மாஜி மினிஸ்டர் ஜெயிக்க 'ஸ்கெட்ச்' போட்டுக் குடுத்தாரு ஆபீசர்!

ஒட்ட வைக்க டிரை பண்ணுறாரு மாஜி மினிஸ்டர் ஜெயிக்க 'ஸ்கெட்ச்' போட்டுக் குடுத்தாரு ஆபீசர்!

ஒட்ட வைக்க டிரை பண்ணுறாரு மாஜி மினிஸ்டர் ஜெயிக்க 'ஸ்கெட்ச்' போட்டுக் குடுத்தாரு ஆபீசர்!

ஒட்ட வைக்க டிரை பண்ணுறாரு மாஜி மினிஸ்டர் ஜெயிக்க 'ஸ்கெட்ச்' போட்டுக் குடுத்தாரு ஆபீசர்!

ADDED : ஜூன் 11, 2024 01:00 AM


Google News
Latest Tamil News
பணி நிமித்தமாக, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்த, 'இன்டெக்' கண்காட்சிக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர்.

காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நவீன இயந்திரங்களை பார்த்து பிரமித்த மித்ரா, ''என்னக்கா... நம்மூர் தொழில்துறையினர் உச்சத்துக்கு போயிட்டாங்கன்னு நினைக்கிறேன். ஒவ்வொரு மெஷினும் மிரட்டுதே...'' என கேட்டாள்.

''ஆமாப்பா... நீ சொல்றது உண்மைதான். ராக்கெட்டுக்கு தேவையான உதிரிபாகங்கள் கூட நம்மூர்ல தயாரிச்சு அனுப்புறாங்க. 'கவர்மென்ட் சைடு'ல 'சப்போர்ட்' கெடைச்சா, இன்னும் கலக்குவாங்கன்னு சொல்றாங்க,''

தொழில்துறை 'அப்செட்'


''எலக்சன்ல அண்ணாமலை தோத்ததுனால, இண்டஸ்ட்ரீக்காரங்க ரொம்பவே அப்செட்டுல இருக்காங்களாமே...''

''பிரதமர் மோடிகிட்ட, நேருக்கு நேரா பேசுற பவர்புல் லீடரா அண்ணாமலை இருக்காரு; அவரை தேர்ந்தெடுத்து அனுப்புனா, மத்திய அமைச்சராகி, தொழில்துறைக்கு தேவையான உதவி செய்வாருன்னு நம்புனாங்க. எல்லாமே தலைகீழா நடந்துடுச்சு. இப்போ, நம்மூர் எம்.பி., எதிர்க்கட்சி வரிசையில இருக்காரு; தேவையான உதவி கெடைக்குமான்னு ஏக்கத்துல இருக்காங்க,''

நிர்வாகிக்கு கல்தா


''அதெல்லாம் இருக்கட்டும்... தாமரை கட்சி மீட்டிங்ல உண்மையை போட்டு உடைச்ச நிர்வாகியை ஓரங்கட்டிட்டாங்களோமே...''

''அதுவா... எலக்சன் நேரத்துல ஒவ்வொரு சட்டசபை வாரியா 'ஒர்க்' எப்படி போயிட்டு இருக்குன்னு அண்ணாமலை தலைமையில, மீட்டிங் நடந்திருக்கு. அப்போ, சவுத் தொகுதியில பிரசாரம் சூடுபிடிக்கலை; கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள ஓட்டு அறுவடை செய்யாம, கட்சிக்காரங்க ரொம்பவே பின்தங்கி இருக்காங்க. கார்ப்பரேஷன் ஏரியாவுல தி.மு.க., மேல மக்களுக்கு கடுமையான கோபம் இருக்கு; அதை பயன்படுத்திக்க தவறிட்டு வர்றோம்னு, 'ரெண்டெழுத்து இனிசியல்' மாஜி கவுன்சிலர் போட்டு ஒடைச்சிட்டாராம்,''

''மறுநாள் அவரோட தொகுதி பொறுப்பாளர் பதவியை பறிச்சிட்டாங்களாம். இது, அண்ணாமலை கவனத்துக்கு போனதும், மாஜி கவுன்சிலரை கூப்பிட்டு, ஓட்டலுக்கு அழைச்சிட்டு போயி, சரிசமமா உட்கார்ந்து, சமாதானம் செஞ்சிருக்காரு. தேர்தல் முடியட்டும்; மறுபடியும் 'போஸ்டிங்' வாங்கித் தர்றேன்னு உறுதி சொல்லியிருக்காரு,''

ஆளுங்கட்சி மாநாடு


''தி.மு.க., தரப்புல, ஸ்டேட் லெவல்ல நன்றி அறிவிப்பு மாநாட்டை, நம்மூர்ல நடத்துறாங்களே... ஏனாம்...''

''அதாம்ப்பா... பாலிடிக்ஸ்! கொங்கு மண்டலம்னா... அ.தி.மு.க., கோட்டைன்னு 'மாஜி' அமைச்சர் வேலுமணி மார்தட்டிட்டு இருந்தாரு. அந்த கோட்டையை, லோக்சபா எலக்சன்ல ஒடைச்சிட்டாங்க. 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்னாடி பிரசாரத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், கொடிசியா மைதானத்துல நடந்த மீட்டிங்லதான், 'கோட்டைய ஒடைச்சுக் காட்டுவோம்'ன்னு சபதம் போட்டு பேசியிருக்காரு,''

''இப்போ, கொங்கு மண்டலம் தி.மு.க., கட்டுப்பாட்டுக்குள்ள வந்துருச்சு. பா.ஜ., ரெண்டாவது இடத்துக்கு வந்துருக்கு. அ.தி.மு.க., மூனாவது இடத்துக்கு போயிடுச்சு. அந்த வெற்றியை கோவை ஜனங்ககிட்ட, ஆழமா பதிய வைக்கிறதுக்கு, நம்மூர்ல கூட்டம் நடத்துறாங்க,''

நடவடிக்கை இருக்காது!


''தி.மு.க.,வுல உள்ளடி வேலை செஞ்சவங்க மேல நடவடிக்கை இருக்காதுன்னு சொல்றாங்களே... உண்மையா...''

''அதுவா... எலக்சனுக்கு முன்னாடி... யாராச்சும் உள்ளடி வேலை செஞ்சா ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம்னு, முதல்வரே நேரடியா 'வார்ன்' பண்ணி, ஸ்டேட்மென்ட் விட்டாரு. அதனால தான் நம்மூர்ல ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்துல, ஜெயிக்க முடிஞ்சதாம்.

இல்லேன்னா... கடைசி நேரத்துல கவுத்து விட்டுருப்பாங்கன்னு சொல்றாங்க. இப்பவும் கூட, மாநகர் மாவட்ட செயலாளர் வார்டு, மேயர் வார்டு, வேட்பாளர் வார்டுல ஓட்டு குறைஞ்சிருக்கு. அதனால, கட்சி ரீதியா நடவடிக்கை எடுப்பாங்களோன்னு பயத்துல இருந்தாங்க...''

''ஆனா, நன்றி அறிவிப்பு மாநாட்டை நம்மூர்ல நடத்துறதுனாலயும், 28 வருஷத்துக்கு அப்புறம் நம்மூர்ல தி.மு.க., - எம்.பி., வந்திருக்கிறதுனாலயும், நடவடிக்கை இருக்காதுன்னு உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க,'' என பேசிக் கொண்டே, தொழிற்காட்சி வளாகத்துல இருந்து வெளியே வந்தாள் சித்ரா.

அ.தி.மு.க.,வில் சலசலப்பு


ஹெல்மெட் அணிந்து, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த மித்ரா, ''அ.தி.மு.க., கூடாரத்திலயும் சலசலப்பு கேட்க ஆரம்பிக்குதே...'' என கேட்டாள்.

''ஆமாப்பா... நீ சொல்றது கரெக்டுதான்! ஏ.டி.எம்.கே., - எம்.எல்.ஏ.,க்கள் ஒத்துமையா இருக்கற மாதிரி தோணுது. இருந்தாலும் நாலு பேர் இ.பி.எஸ்., பக்கம் இருக்காங்களாம். அவுங்க, 'மாஜி'யோட பட்டும்படாம தொடர்புல இருக்காங்களாம்.

பா.ஜ., மேலிடத்துல இருக்குற செல்வாக்கை பயன்படுத்தி, மறுபடியும் கூட்டணியை மலர வைக்கிறதுக்கு, 'மாஜி' காய் நகர்த்துறாராம்; இது, சில எம்.எல்.ஏ.,க்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பிடிக்கலையாம்,''

ஆபீசரின் 'ஸ்கெட்ச்'


''ஆளுங்கட்சி ஜெயிக்கிறதுக்கு ஆபீசர் ஒருத்தர் தான், 'ஸ்கெட்ச்' போட்டுக் கொடுத்தாராமே...''

''அதுவா... கோவைன்னாலே அ.தி.மு.க., கோட்டைன்னு ஆளுங்கட்சி தரப்புல நெனைச்சுட்டு இருந்தாங்க. போதாக்குறைக்கு பா.ஜ.,வுல அண்ணாமலை போட்டி போட்டாரு.

வேலுமணி, அண்ணாமலைன்னு ரெண்டு பெரிய தலைகளுக்கு மத்தியில, வெற்றிக்கொடியை நடனும்னா... என்ன செய்றதுன்னு உடன்பிறப்பு கட்சியில, குழம்பி இருந்திருக்காங்க...''

''அப்போ... ஒரு ஆபீசர் சில விஷயங்களை நுணுக்கமா சொல்லியிருக்காரு. அதுல, கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள ரொம்ப கவனம் செலுத்தாதீங்க... குடிதண்ணீ பிரச்னை இருக்கு... ரோடெல்லாம் குண்டும் குழியுமா இருக்கு... ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி வச்சிருக்கோம்... ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மேல, மக்களுக்கு வெறுப்பு இருக்கு. அதனால, வீதி வீதியா பிரசாரத்துக்கு போனா... எதிர்ப்பு அலை வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு,''

''அதனால, ரூரல்ல கவனம் செலுத்துங்க. உரிமைத்தொகை, கல்வி உதவித்தொகை, சிற்றுண்டி திட்டம்னு கவர்மென்ட் ஸ்கீம் மக்களுக்கு நேரடியா போயி சேர்ந்திருக்கு. அதையெல்லாம் சொன்னா போதும்; ரூரல்ல ஈசியா ஓட்டு கெடைக்கும்னு, யோசனை சொல்லியிருக்காரு.

அதே மாதிரி, கடைசி ஒரு வாரம் தொடர்ச்சியா, பல்லடம், கவுண்டம்பாளையம், சூலுார் தொகுதியில கவனம் செலுத்தியிருக்காங்க. அந்த மூணு தொகுதியில ஓட்டு வித்தியாசம் அதிகமாகியிருக்கறதுனால, அந்த ஆபீசர் 'ஹேப்பி'யா இருக்காராம்,'' என்ற சித்ரா, ''கார்ப்பரேஷன்ல கிழக்கு மண்டலத்துல இருக்கற பில் கலெக்டரை பத்தி, போன வாரம் பேசுனாமே... ஏதாச்சும் நடவடிக்கை எடுத்தாங்களா?'' என்று கேட்டாள்.

'சரக்கு' மாஸ்டர்


''ஒரு பில் கலெக்டரை, வெயிட்டிங் லிஸ்ட்டுக்கு மாத்திட்டாங்க. அவரு கவனிச்சிட்டு இருந்த வார்டுல ஒன்னை எடுத்து, இன்னொரு பில் கலெக்டருக்கு கொடுத்திருக்காங்க. இவரோ, 'சரக்கு' மாஸ்டராம். காலங்காத்தாலேயே போதையில தான் ஆபீசுக்கு வருவாராம். இவரு தான் 'லேடி' ஆபீசர் வீட்டுக்கு மளிகை, காய்கறின்னு பொருட்களை வாங்கித்தருவாராம். அதனால, கூடுதலா ஒரு வார்டு ஒதுக்கிக் கொடுத்திருக்காராம்,''

''இவரு யாருன்னு விசாரிச்சா, ஏ.டி.எம்.கே., ஆட்சியில ராத்திரியோட ராத்திரியா 'அப்பாயின்மென்ட்' போடப்பட்ட 54 பேர்ல ஒருத்தராம்; சரியா எழுதப்படிக்கவே தெரியாதாம்; வசூல் பண்ணுறதுல கில்லாடியாம். அதனால, வசூல் பண்ற வேலைய ஒதுக்கிக் கொடுத்திருக்காங்களாம்,''

சமரசம் செய்த போலீஸ்


''போலீஸ்காரங்க சொன்ன பதிலை கேட்டு, ரேஷன் கடைக்காரங்க அதிர்ந்து போயிட்டாங்களாமே...''

''ஏதோ ஒரு சினிமாவுல, அவுங்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்துற மாதிரி சீன் இருக்குதாம். அதை நீக்குறதுக்கு நடவடிக்கை எடுங்கன்னு, கம்ப்ளைன்ட் கொடுக்குறதுக்கு போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்துக்காரங்க போயிருக்காங்க.

'என்கொயரி' செஞ்ச ஆபீசர், 'எங்களை பத்தியும் தான் படுமோசமா சினிமாவுல காட்டுறாங்க; 'யூ டியூப்'ல வீடியோ போடுறாங்க. எங்களால என்ன செய்ய முடியுது. அதனால, வக்கீல் மூலமா நடவடிக்கை எடுங்க'ன்னு 'அட்வைஸ்' பண்ணி அனுப்பியிருக்காரு,''

கணவனுக்கு குறி


''இதே மாதிரி, கம்ப்ளைன்ட் கொடுக்க வந்த லேடியை பார்த்து, எஸ்.பி., ஆபீசுல இருக்கற போலீஸ்காரங்க அதிர்ந்து போயிட்டாங்களாமே...''

''ஆமாக்கா... அது ஒரு காமெடியான விஷயம். தன்னோட வீட்டுக்காரரு மேல கம்ப்ளைன்ட் கொடுக்கறதுக்கு, ஒரு லேடி வந்திருக்காங்க. அதிகாரியை பார்க்குறதுக்கு அனுப்புறதுக்கு முன்னாடி, அந்த லேடியோட ஹேண்ட் பேக்கை சோதனை செஞ்சிருக்காங்க. அதுல, பிளேடு, மிளகாய் பொடி இருந்திருக்கு.

'இதெல்லாம் எதுக்கும்மா'ன்னு போலீஸ்காரங்க விசாரிச்சிருக்காங்க. அதுக்கு, 'என்னோட ஹஸ்பெண்ட்டை என்கொயரிக்கு கூப்பிடுறப்போ, அவர் கண்ணுல மிளகாய் பொடியை துாவி, பிளேடு போடுறதுக்கு ரெடியா இருக்கேன்னு சொல்லியிருக்காங்க. இதைக்கேட்டு, போலீஸ் ஆபீசர்ஸ் அதிர்ந்தே போயிட்டாங்க. இப்போ, அந்த லேடிக்கு மகளிர் போலீஸ் மூலமா கவுன்சிலிங் கொடுக்குறாங்க,''

தமிழ்த்தாய் வாழ்த்து


''அரசு விழாவுல தமிழ்த்தாய் வாழ்த்து பாடுறப்போ, இ.எஸ். ஐ., டீன் அவமதிக்கற மாதிரி நடந்துக்கிட்டாராமே...

''ஆமாப்பா... கவர்மென்ட் மெடிக்கல் காலேஜ் கேம்பஸ்ல, பட்டமளிப்பு விழா நடந்துச்சு; ஹெல்த் மினிஸ்டர் கலந்துக்கிட்டாரு. அந்த விழாவுல தமிழ்த்தாய் வாழ்த்து பாடுறப்போ, எழுந்து நின்னு மரியாதை செலுத்துனாங்க. தனி கூடாரத்துல இருந்த இ.எஸ்.ஐ., டீன், இருக்கையில கால் மீது கால் போட்டு உட்கார்ந்திருந்தாராம்; மத்தவங்க எழுந்திருக்கறதை பார்த்தும் கண்டுக்கவே இல்லையாம். இதைப்பார்த்து, ஹெல்த் டிபார்ட்மென்ட்காரங்க அதிர்ச்சியாகிட்டாங்க,''

இலவச ஊர்திக்கு கரன்சி


''கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல இலவச அமரர் ஊர்தியில, சடலம் எடுத்துட்டு போறதுக்கும் பணம் கேக்குறாங்களாமே...''

''ஆமாப்பா... நீ சொல்றது உண்மைதான்! ஆயிரத்துல ஆரம்பிச்சு அஞ்சாயிரம் வரைக்கும் கேக்குறாங்களாம். நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆபீசருக்கு, வண்டிக்கு ஆயிரம் ரூபா கப்பம் கட்டணுமாம். அதுக்கப்புறம் எவ்ளோ வேணும்னாலும், கலெக்சன் பண்ணிக்கிடலாம்னு பர்மிஷன் கொடுத்திட்டாராம்.

உயரதிகாரிக்கு கம்ப்ளைன்ட் போனா... ஒரு வாரம் 'கப்சிப்'ன்னு இருக்கணும்; அப்புறம் மறுபடியும் மாமூல் கொடுக்கணும்னு, யோசனை சொல்லி இருக்காராம். அதனால, இலவச அமரர் ஊர்தியில தில்லா கலெக்சன் பார்க்குறாங்களாம்,'' என்றபடி, ரேஸ்கோர்சை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.

பின் இருக்கையில் அமர்ந்திருந்த சித்ரா, 'வாட்ஸ்ஆப்' பதிவுகளை பார்த்துக் கொண்டே வந்தாள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us