Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/ நீ நடந்தால் நடை அழகு... நீ பேசும் மியாவ் அழகு!

நீ நடந்தால் நடை அழகு... நீ பேசும் மியாவ் அழகு!

நீ நடந்தால் நடை அழகு... நீ பேசும் மியாவ் அழகு!

நீ நடந்தால் நடை அழகு... நீ பேசும் மியாவ் அழகு!

ADDED : மே 10, 2025 07:57 AM


Google News
Latest Tamil News
உடல் முழுக்க மிருதுவான முடிகளுடன், சின்ன கண்களை சுழற்றிக்கொண்டு, மெல்லிய மீசையை முறுக்கிவிட்டபடியே, 'மியாவ்...' என ரீங்காரமிடும், அரிய வகை பூனைகளை வளர்க்கிறார் கோவை, துடியலுாரை சேர்ந்த அனீஷ் பாத்திமா.

'பா பிரிண்ட்ஸ் கோயமுத்துார்' (Paw Prints Coimbatore) உரிமையாளரான இவர், ப்ரீடரும் கூட. செல்லமே பக்கத்திற்காக பூனை வளர்ப்பு குறித்து இவர் நம்மிடம் பகிர்ந்தவை:

பப்பிகளை போலவே, பூனைகளிலும் நிறைய இனங்கள் இருக்கின்றன. ஒரே இனத்தை சேர்ந்த பூனையிலும் அதன் கண், உடல், வால் போன்ற இடங்களில் நிறம், புள்ளிகள் மாறுபடுவதை பொறுத்து, வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இதில், தற்போது பலரும் விரும்பி வளர்க்கும் அரிய வகை மியாவ்வாக ஹிமாலயன், சில்வர்டாபி, ரேக் டால் ஆகியவை உள்ளன.

ஹிமாயலன் பூனை (Himalayan cat)


இது பெர்ஷியன் இனத்தின் ஒரு வகை. காது, மூக்கு, வால் போன்ற இடங்களில் மட்டும் கருப்பு, ஆரஞ்ச், சிவப்பு நிறத்தில் புள்ளிகளாக இருக்கும். இதன் கண்கள் நீலநிறமாக இருப்பதால், பார்க்கவே அழகாக இருக்கும். வட்டமான முகம், சிறிய மூக்கு, பெரிய கண்கள் என, வித்தியாசமான முக அமைப்பை கொண்டது. இதன் வால் பகுதி சிறியதாக, அதிக முடிகளுடன் காணப்படும். பேரழகி போட்டிக்கு செல்வது போல, உடலை சிலிப்பி கொண்டு ஒய்யாரமாக நடக்கும் அழகும், அதிக சத்தம் எழுப்பாமல் மியாவ் என்ற சிணுங்கலும், வீட்டிலுள்ள அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கும். இதன் வித்தியாசமான நிறத்திற்காகவே பலரும் விரும்பி வாங்குகின்றனர்.

சில்வர் டாபி (Silver Tabby)


பெயருக்கு ஏற்ப, வெள்ளி அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் உடலில் கருப்பு நிறத்தில் கோடுகள், வளைவுகள் காணப்படும். டாபி வகை எல்லா பூனைகளின் நெற்றியிலும், ஆங்கில எழுத்தான 'எம்' வடிவில் குறியிடப்பட்டிருக்கும். இதன் காலில், சாம்பல் அல்லது சிவப்பு நிறக்கோடுகள் இருக்கலாம். இதுவும், பெர்ஷியன் இனத்தின் ஒரு வகையாகும்.

இதன் தோற்றத்திற்காகவே, மார்கெட்டில் மவுசு அதிகம். புத்திசாலியான பூனை என்பதால், வீட்டின் சூழலை புரிந்து கொண்டு செயல்படும். உரிமையாளருடன் எளிதில் நெருங்கிவிடும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் இப்பூனை வளர்த்தால், அவை விளையாடிக் கொண்டே இருக்கும்.

ரேக் டால் (Rag Doll)


மற்ற பூனைகளை விட, உடல் முழுக்க அடர்த்தியான, நீளமான, மென்மையான முடி இருப்பதால், பார்க்கவே அழகாக இருக்கும். இது, வித்தியாசமான முக அமைப்பை கொண்டிருக்கும். இதன் வாய் வெள்ளை நிறத்திலும், கண்களை சுற்றி கறுப்பாகவும், முன்னங்கால் மேல்புறத்தில், பிரவுன் கலந்த வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் காதுகள் சிறியதாகவும், வளைந்தும் காணப்படும். புதிய மனிதர்களிடம் எளிதில் நெருங்குவதோடு, வெளியிடங்களுக்கு அழைத்து சென்றால், குஷியாகிவிடும்.

 எந்த வகை பூனை வளர்த்தாலும், அதன் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உடல் முழுக்க முடி இருப்பதால், தினசரி சீவிவிட வேண்டும். இதன் கழிவுகளை வெளியேற்றும் 'லிட்டர் பாக்ைஸ' தினசரி சுத்தம் செய்வது அவசியம். இதை முறையாக பராமரிக்காமல் பூஞ்சை தொற்று உருவாகும் பட்சத்தில், பூனையின் வால் பகுதி அதில் பட்டால் கூட, எளிதில் தோல் அலர்ஜி ஏற்பட்டு முடி கொட்டிவிடும். பூனைக்கு அதன் மிருதுவான முடி தான் அழகு.

 மாதமிருமுறை பூனையை குளிப்பாட்ட வேண்டும். ஒவ்வொரு முறையும், பூனையின் காது, கண்களை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்வது அவசியம். காதுகளில் பூஞ்சை தொற்று பரவினால், அது தொண்டை, உணவுக்குழாயில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

 பொதுவாக பூனையின் செயல்பாட்டில் மாற்றம் தெரிந்தால், உடனே கால்நடை மருத்துவரை அணுகுவது அவசியம். வாந்தி, வயிற்று போக்கு போன்றவை ஏற்பட்டால், உடனே மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால், மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us