ADDED : செப் 12, 2025 11:28 PM

அ ரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் கூலாக 'ஹை-பை' கொடுத்தபடி, தன் செல்லப்பிராணி 'ரவுடி'யுடன் போஸ் கொடுக்கும் துணை முதல்வர் உதயநிதியின் படம், தற்போது வைரலாகி வருகிறது.
'ரவுடி' என உதயநிதியால் செல்லமாக குறிப்பிடப்பட்டுள்ள, இந்த பப்பி கேன்கோர்சோ இனத்தை சேர்ந்தது. இதற்கு தற்போது இரண்டு வயதாகிறது. 'ரவுடி' உடன் வாக்கிங் செல்வது, கொஞ்சுவது, மடியில் துாக்கி வைத்திருப்பது என, அவ்வப்போது தன் இன்ஸ்டா பக்கத்தில், உதயநிதி புகைப்படம் பதிவிடுவது வழக்கம். நிறைய இனங்கள் இருந்தும், இக்குறிப்பிட்ட பப்பியை அவர் வளர்க்க காரணம் தெரிஞ்சிக்கணுமா? இந்த பப்பியின் சீக்ரெட் இதுதான்.
இத்தாலியை பூர்வீகமாக கொண்ட கேன்கோர்சோ, உலகளவில் அதிக ஆக்ரோஷம் கொண்ட நாய்களில் ஒன்று. இந்த இனத்தை சேர்ந்த இரு நாய்கள் ஒன்றிணைந்து, ஒரு சிறுத்தையையே மிரட்டி ஓடவிடும் அளவுக்கு துணிச்சல், ஆற்றல் கொண்டவை. தனிமனித பாதுகாவலுக்கு ஏற்றது. அதீத புத்திசாலி என்பதால், எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும். அசாதாரண சூழலிலும், தன் உரிமையாளரை பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும்.
கிட்டத்தட்ட 70 செ.மீ., உயரம், 50 கிலோ எடையுடன், பெரிய வாய், தாடைப்பகுதியில் தொங்கும் தசைகளை கொண்டிருப்பதால், இதை பார்த்தாலே மிரட்சியை உருவாக்கிவிடும். இதன் எல்லைக்குள், தெரியாதவர்கள் காலடி எடுத்து வைக்க முடியாது. அந்தளவுக்கு எந்நேரமும் அலர்ட்டாக இருக்கும்.
ஒரு பாதுகாவலரின் பொறுப்பை முழுமையாக எடுத்து கொள்ளும் இந்த இன பப்பியை, துணை முதல்வர் உதயநிதி வளர்ப்பதன் ரகசியம் இப்போது புரிந்திருக்குமே!