Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/ தாய்! இவருக்கு 322 'சேய்'

தாய்! இவருக்கு 322 'சேய்'

தாய்! இவருக்கு 322 'சேய்'

தாய்! இவருக்கு 322 'சேய்'

ADDED : ஜூலை 04, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
''வாயில்லா ஜீவன்களின் உணர்வுக்கு, ஒரு மொழி இருக்கிறது. அது எல்லாருக்கும் புரிவதில்லை. அவைகளின் அன்பின் மொழியை அறிந்துவிட்டால், அதன் விசுவாசத்தை உணர்ந்துவிட்டால் மனிதர்களின் எந்த கேலிகூத்தும், வெற்று கூச்சல்களும் நம்மை பாதிக்காது. என் வீட்டில், 322 பப்பி, மியாவ்கள் இருக்கின்றன. இவைகள் தான் என் உலகம்,'' என்கிறார், சென்னை திருவெற்றியூரை சேர்ந்த கலா குபேந்திரன்.

பப்பிகளுக்கு உணவளிப்பதில் பிசியாக இருந்த இவரை, செல்லமே பக்கத்திற்காக தொடர்பு கொண்டோம்.

நம்மிடம் பகிர்ந்தவை:

உங்களை பற்றி?


சொந்த ஊர் திருவெற்றியூர். படித்தது எட்டாம் வகுப்பு. என் அப்பா வேணுகோபால், ஆதரவற்றவர்கள் இறந்துவிட்டால் இறுதி காரியம் செய்வார். அதில் அவருக்கு ஆத்ம திருப்தி. பொது பணிகளில் ஈடுபடும் போது தெருநாய், மாடு, பூனை அடிப்பட்டால், சொந்த செலவில் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார். அவருடனே இருந்ததால் ஐந்தறிவு ஜீவன்கள் மீது தனி பிரியம் ஏற்பட்டுவிட்டது.

திருமணத்திற்கு பின் என் கணவர் குபேந்திரனும் இதற்கு தடை போடவில்லை. இதனால், தற்போது என் வீட்டில் 270 பப்பி, 52 பூனைகள் இருக்கின்றன. தவிர, வீட்டை சுற்றியுள்ள தெருநாய்களுக்கு உணவளிக்கிறேன். அவைகளுக்கு உடல்நலம் சரியில்லாத போது மருத்துவ சிகிச்சை அளிப்பது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது என, என் உலகம் இவர்களை சுற்றியே இருக்கிறது. எனக்கு குழந்தை இல்லை; ஆனால், 322 உயிர்களுக்கு 'அம்மாவாக' இருக்கிறேன்.

இவைகளை பராமரிப்பது சிரமமாக இல்லையா?


அதெப்படி சிரமமாக இருக்கும். அம்மா என்ற உணர்வு வந்துவிட்டால், அவைகளை அரவணைக்க தானே தோன்றும். இவைகளுக்கு ஒரு மொழி இருக்கிறது. அது அன்பின் மொழி. அதன் கண்களில் தெரியும் விசுவாசத்திற்கு நிகராக எதையும் ஒப்பிடவே முடியாது.

தினசரி 100 கிலோ அரிசியில் உணவு சமைக்கிறேன். ஒரு நாளைக்கு, கிட்டத்தட்ட 650 பப்பிகளுக்கு உணவளிக்கிறேன். என் வீட்டில் இருக்கும் பப்பிகளில் பெரும்பாலானவை, நடக்க முடியாத நிலையில் இருப்பவை, கண் தெரியாதவை, சுயமாக இயங்க முடியாதவை. இதனால், வெளியூருக்கு சென்றாலும், இரவு தங்க மாட்டேன். நான் இல்லாவிடில், இவைகள் துாங்காது. என் வண்டியின் சத்தம் கேட்டால், எங்கிருந்தாலும் தெருநாய்கள் ஓடிவந்துவிடும். இந்த பாசத்திற்கு முன்பு, எந்த வேலை செய்தாலும் சிரமமாக தோன்றாது.

ஆனால், சில நேரங்களில் பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படும் போது மட்டும், யாரிடம் கேட்பது, எங்கு முறையிடுவது என்ற மன போராட்டம் ஏற்பட்டுவிடும். என் கணவர் அரசு பேருந்து நடத்துனர் என்பதால், அவரின் சம்பளத்தை, முழுமையாக பயன்படுத்தி கொள்கிறோம். இதுதவிர, நண்பர்கள், தன்னார்வலர்கள் சிலர் உதவுகின்றனர். என் வீட்டை சுற்றியிருப்பவர்களும், ஆதரவு தருவதால் தான், என்னால் தொடர்ந்து இயங்க முடிகிறது.

நிறைய பப்பிகள் இருப்பதால், தமிழக அரசு சார்பில், ஆம்புலன்சு இலவசமாக தரப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவ செலவினங்களுக்கு தான் சில நேரங்களில் திண்டாட வேண்டியிருக்கிறது. இதெல்லாம் எப்படியும் சமாளித்து கொள்ளலாம். ஆனால் சில நேரங்களில், உதவி கேட்டு நிற்கும் போது, அதுசார்ந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிரும் போது, கமெண்ட் அடிப்பது தான் கஷ்டமாக இருக்கும்.

'மனுசங்களுக்கே சோறு இல்ல; இதுல நாய்க்கு சோறு தேவையா' என சிலர் கேட்கின்றனர். சக மனிதர்களுக்கு உதவ பலர் இருக்கின்றனர். இவைகளுக்காக இருக்கும் வெகுசிலரில், நானும் ஒருத்தி. இந்த வாழ்வு, இவர்களுக்கானது.

உதவ விரும்புவோர் அழைக்க: 90031 50947





      Our Apps Available On




      Dinamalar

      Follow us