ADDED : ஜூன் 01, 2024 09:36 AM

சைவம் படத்தில் வரும் சிறுமி, சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலை காப்பாற்ற துடிக்கும் காட்சிகள், பார்வையாளர் மனங்களிலும் ஊடுருவி, தவிப்பை ஏற்படுத்தும். இப்போதும் கிராமங்களில், கோழி, சேவலுக்கு பெயர் வைத்து, செல்லப்பிராணியாக வளர்ப்போர் இருக்கின்றனர்.
நெருக்கடியான நகர சூழலில், கோழி வளர்க்க முடியுமா என, வேலுாரை சேர்ந்த, நாட்டுக்கோழி பண்ணை உரிமையாளர் செங்கல்வராயனிடம் கேட்டோம். அவர் நம்மோடு பகிர்ந்தவை: சிட்டியிலும், கோழி வளர்க்கலாம். இதில், சிறுவிடை, பெருவிடை, கருங்கால், கிளி மூக்கு, மொட்டை கழுத்து, வான்கோழின்னு நிறைய நாட்டு ரக ப்ரீட்ஸ் இருக்கு. இதுல, மேய்ச்சலுக்கு விடாம, கூண்டுக்குள்ளே வச்சி வளர்க்குற ப்ரீட்ஸோட, பிசிக்கல் சிஸ்டம், புட் ஹாபிட் மாறிடும்.
தோட்டம், வீட்டை சுத்தி மேய்ச்சல் விட்டு வளர்க்கும் போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ஆறு மாசத்துல முட்டையிட தொடங்கிடும். ஒரு வருஷத்துல, 70-90 வரை முட்டையிடும். ஒருமுறை முட்டையிட்டு, அதோட வாரிசு வந்ததுக்கு அப்புறம் தான், திரும்பவும் முட்டையிடும். இப்படி முட்டையிடுறதுக்கு முன்னாடி ஸ்டேஜ்ல இருக்கற கோழியதான், வெடக்கோழின்னு சொல்லு வாங்க.
வீட்டை சுற்றி ஒரு சென்ட் இடம் இருந்தா, 4-5 கோழி வரைக்கும் வளர்க்கலாம். இதுக்கு, செடி, மர நிழல் வேணும். மதிய நேரத்துல, செடிக்கு தண்ணீர் விட்டா, அந்த ஈரப்பதத்துக்கு தேடி போய் ரெஸ்ட் எடுத்துக்கும். மார்னிங், ஈவினிங்ல, தலா 100 கிராம் அரிசி போட்டுட்டா, பசிக்கும் போதெல்லாம் கொத்தி சாப்பிட்டுக்கும். அதிகபட்சமா, 8 கோழிக்கு ஒரு சேவல் இருந்தாவே போதும்.
சில கோழி, அதோட முட்டைய அதுவே உடைச்சிடும். இதுக்கு, கால்சியம் சத்து குறைபாடும் காரணமா இருக்கலாம். கோழி தீவனத்துல, காய வச்ச முட்டை ஓடு சேர்த்து கொடுத்தாவே போதும். மத்தபடி, கோழிக்குன்னு எந்த மெனக்கெடலும் தேவையில்ல. பராமரிப்பு செலவும் ரொம்ப கம்மி.