கொஞ்சி பேசும்... கெஞ்சி கீச்சிடும்!
கொஞ்சி பேசும்... கெஞ்சி கீச்சிடும்!
கொஞ்சி பேசும்... கெஞ்சி கீச்சிடும்!
ADDED : ஆக 03, 2024 11:34 AM

மதுரை, கே.புதுாரில், 'லஷ்மி பார்ம்' என்ற பறவை புகலிடத்தின் உரிமையாளரான சுகுமார், வெளிநாட்டு இன பறவைகளை, வீட்டில் வளர்க்க பழக்கப்படுத்தி, விற்பனை செய்து வருகிறார். பறவைகளை பழக்கும் முறை பற்றி, இவர் நம்மோடு பகிர்ந்தவை:
*இந்தியாவில், நம் நாட்டு இன பறவைகளை செல்லப்பிராணியாக வளர்க்க தடை உள்ளது. வெளிநாட்டு இன பறவைகளை, மத்திய காடுகள், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் இணையதளத்தில் அனுமதி சான்றிதழ் பெற்று வளர்க்கலாம்.
*காக்டெய்ல், சன்கனுார், ஸ்மால் கனுார், லோரிகேட்ஸ், மக்காவ், ஆப்பிரிக்கன் கிரே பேரட், காக்கட்டூஸ் போன்ற, 40க்கும் மேற்பட்ட பறவைகள், வீட்டில் வளர்க்க தகுதியுடையவை. இதற்கு உரிய பராமரிப்பு, போதிய இடம், உணவு வழங்கினால், சராசரி ஆயுட்காலத்தை தாண்டியும் ஆரோக்கியமாக வாழும்.
காட்டில் வாழ்ந்த உயிரினம் என்பதால், இவை வீட்டிலுள்ளோரிடம் எளிதில் பழகுவதற்கு, பிறந்து சில நாட்களிலே, கையில் வைத்து உணவு கொடுத்து, வார்த்தைகள் பேசுதல், அலகால் பிறரை கொத்தாமல் இருத்தல், கடிக்காமல் இருக்க பழக்குவேன். மூன்று மாதங்களான பிறகு இதை விற்கும்போது, உரிமையாளரிடம் எளிதில் பழகிவிடும்.
*குறிப்பாக, காக்டெய்ல், ஸ்மால் கனுார் வெரைட்டி பறவைகளுக்கு, 2 அடி கூண்டு, சன்கனுார், லோரிகேட்ஸ் வகை பறவைகளுக்கு தலா 4 அடி , கிரே பேரட் வளர்ப்பதாக இருந்தால் 8 அடி கூண்டு மற்றும் மக்காவ், காக்கட்டூ வகை பறவைகளை தலா, 10 அடி கூண்டில் வைத்து வளர்க்க வேண்டும்.
*முறையாக பழக்கினால், கிரே பேரட், 50க்கும் மேற்பட்ட வார்த்தைகளும், லோரிகேட்ஸ், 20 வார்த்தைகள் வரையும் பேசும். கொஞ்சி, கெஞ்சி, வெகுசில நாட்களிலே, வீட்டின் முக்கிய அங்கத்தினராக மாறிவிடும்.
*பறவைகளை பொறுத்தவரை, பராமரிப்புக்கு அதிக மெனக்கெட வேண்டியதில்லை. முளைகட்டிய தானியங்கள், ஊறவைத்த கருப்பு சுண்டல், கோதுமை, பழங்கள், பாதாம், முந்திரி போன்றவை விரும்பி சாப்பிடும்.
*வேலைக்கு செல்வோரும், வீட்டில் பறவை வளர்க்கலாம். இதன் கூண்டை அடிக்கடி சுத்தப்படுத்தி, உணவு, தண்ணீர் வைத்துவிட்டால் போதும். மொபைல் போன்களில் மூழ்கியிருக்கும் குட்டீஸ்களிடம், இந்த பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் குஷியாகிவிடுவர்.
பறவை வீட்டில் வளர்த்தால்...
சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைக்குமே!
மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே!....