Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/அழகென்பது யாதெனின்...

அழகென்பது யாதெனின்...

அழகென்பது யாதெனின்...

அழகென்பது யாதெனின்...

PUBLISHED ON : ஜன 19, 2025


Google News
Latest Tamil News
'யாரையும் எதையும் பார்த்திராத இவர்களை எல்லாரும் பார்க்க வேண்டும்; இவர்களின் உணர்வுகளை கொண் டாட வேண்டும்' எனும் விருப்பத்திலும்...

'பார்வையோடு சம்பந்தப்பட்டதல்ல அழகு என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்' எனும் வேட்கையிலும் பிறந்ததே... அழகென்பது யாதெனின்...

இந்த வார பங்கேற்பாளர் ரா. நாகேஸ்வரி. 35 ஆண்டு காலமாய் இந்த உலகத்தை இவர் பார்த்ததில்லை. சென்னை, நந்தனத்தில் வசிக்கும் இவர் எம்.ஏ., பி.எட்., முடித்திருக்கிறார். அமேசான் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

'கண்ணு தெரியுறதுன்னா என்னன்னு நான் பார்வை இருக்குறவங்ககிட்டே கேட்டிருக்கேன். 'எதிர்ல இருக்குற விஷயத்தை நீங்க தொட்டு உணர்றீங்க இல்லையா... நாங்க பார்த்து உணர்றோம்'னு பதில் சொல்வாங்க.

'பார்த்து உணர்றதுன்னா என்ன'ன்னு கேட்பேன்; அவங்களால ஆழமா பதில் சொல்ல முடியாது. 'பார்வை வேறு, உணர்தல் வேறு'ன்னு நான் புரிஞ்சுக்குவேன்!'

நம் பார்வையை அலச வேண்டிய அவசியம் புரிய வைக்கிறது நாகேஸ்வரி சொல்லும் முதல் உண்மை!

'ஒருத்தரோட குரலும் அது வெளிப்படுத்துற பண்பும்தான் எங்க இருள் உலகத்துல நாங்க உணர்ற அழகு. ஆனாலும், எனக்கு ஒப்பனை பண்ணிக்கிறதுல அவ்வளவு இஷ்டம்; இத்தனைக்கும் என்னை நான் பார்த்தது கிடையாது. நம்புவீங்களா... எனக்கும் ஒரு காதல் கதை இருக்கு. 'நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்'னு அடிக்கடி சொன்ன குரல் மூலமா நேசத்தை திகட்ட திகட்ட அனுபவிச்சிருக்கேன்!'

'ஆமாம்... நான் காயப்பட்டவள்தான்' என்று சொல்லும் நாகேஸ்வரியின் இத்துணிச்சலில் மின்னலின் பளிச்! இந்த துணிச்சல் தந்த பக்குவத்தால்...

'வாழ்க்கையாகவே மாறிப்போவது காதல் எனினும், இழந்த காதலுக்காய் இருக்கும் வாழ்க்கையை பழிக்காமல் 'இதுவும் கடந்து போகும்' என்று கடந்து வருவதே அந்த காதலுக்கு செய்யும் மரியாதை' என்கிறார்.

நாகேஸ்வரியின் உலகத்தில் எவையெல்லாம் அழகு?

'இப்படித்தான் இருக்கும்'னு எனக்குள்ளே நான் உருவாக்கி வைச்சிருக்கிற கற்பனை கண்கள். அப்புறம் மழை; என்னைப் பொறுத்தவரைக்கும் அது தண்ணீர். வானமும், மேகமும் அறியாத எனக்கு மண்வாசனையோட மேல தெறிக்கிற நீர்துளிதான் மழை; அப்போ, மனசுக்கு நிறைவா இருக்கும்.

இதேமாதிரி, பூவை தொட்டுப் பார்த்து, 'இது இந்த பூ'ன்னு உணர்ற தருணமும், குழந்தைகளை தொட்டுப் பார்த்து 'கை கால் முளைத்த பூ'ன்னு புன்னகைக்கிற தருணமும் நிறைவா இருக்கும். இதெல்லாத்துக்கும் மேல, எனக்கான கண்களா இறைவன் படைச்சிருக்கிற என் அம்மா கூட நான் இருக்குற தருணங்கள் ரொம்பவே நிறைவா இருக்கும்.

புரிந்தது... நாகேஸ்வரியின் வாழ்வில் 'மனநிறைவு'தான் அழகு.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us