Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/நிலமும் நானும்

நிலமும் நானும்

நிலமும் நானும்

நிலமும் நானும்

PUBLISHED ON : பிப் 23, 2025


Google News
Latest Tamil News
'சிறுகோட்டுப் பெரும்பழம்' என்று கபிலர் வர்ணித்த பலாப்பழங்களை பிரசவிக்கும் பலா மரங்கள் மீது பேரன்பு கொண்டிருக்கிறார் கடலுார், பண்ருட்டி அருகிலுள்ள பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஹரிதாஸ்.

இந்த பேரன்புக்கு காரணம் என்ன?

என் தோட்டத்து பலா மரங்களே... தமிழக வேளாண்மை துறையில் மாவட்ட துணை இயக்குனராக ஓய்வு பெற்ற நான், வரப்பில் வாழ்ந்திருந்த உங்களை முதன்முதலாக 2010ம் ஆண்டு தனிப்பயிராக நடவு செய்ததை எண்ணிப் பார்க்கிறேன். அன்று, 1.5 ஏக்கர்... 90 மரங்கள்; இன்று, 150 ரகங்கள்... 400 மரங்கள். உங்களது வளர்ச்சியால், எனது கிராமத்தினருக்கு இப்போது நான் வழிகாட்டி!

ஒருமுறை செலவில் 100 ஆண்டுகள் கடந்தும் பலன் தரும் உங்களால் விவசாயிகள் பெறும் லாபம் மிக அதிகம். 40 ஆண்டுகள் முதிர்ந்த நீங்கள் லட்சங்களில் விலை போகிறீர்கள். உங்களது பழம் மற்றும் பலாகொட்டைகளில் பலவகை மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரிக்க முடிகிறது.

தண்ணீர் தேக்கி வைக்காத, சுண்ணாம்பு சத்து குறைவான மணற்பரப்பு கொண்ட விவசாயிகள் உங்களை பயிரிட்டு பயனுற வேண்டும் என்பதற்காக என் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து உழைப்பேன்.

நிலத்தடி நீர் வரம்பற்று உறிஞ்சப்படுகிற இன்றைய சூழலில், 'நாம் இந்த உலகத்தை நம் குழந்தைகளிடமிருந்து கடனாக பெற்றுள்ளோம்' என்பதை நம்புகிற என்னால், குறைந்த நீரில் வளரும் உங்களை எப்படி நேசிக்காமல் இருக்க முடியும்?

தனது 18 ஏக்கர் நிலத்தில் ஐந்து ஏக்கரை பலா மரங்களுக்காக ஒதுக்கி இருக்கிறார் ஹரிதாஸ். தஞ்சாவூர்/ பெரியகுளம்/ பேச்சிப்பாறை/ ருத்ராட்சா பலா, முட்டம் வரிக்கா, ஆயிரம் காய்ச்சி, மகா பத்ரி உள்ளிட்ட ரகங்களுடன் 'மாதிரி பலா தோப்பு' ஒன்றை தனிமனிதராக இவர் உருவாக்கி இருக்கிறார். இதற்காகவே, புதிய பலா ரகத்திற்கு 'ஹரிகோல்டு' என்று பெயர் சூட்டி இவரை கவுரவித்துள்ளது தமிழக வேளாண்மை துறை.

ஹரிதாஸ் அய்யாவுக்கு...

எங்களை பார்வையிட வரும் அனைவரின் மனதிலும் எங்களை நீங்கள் விதைப்பதை நாங்கள் நன்கு அறிவோம். தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூரில் இருந்த எங்களை தமிழகம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள்.

வேர் அழுகல், பழ அழுகல் நோய்கள் மற்றும் நுண்கிருமிகளால் நாங்கள் பாதிக்கப்படுகையில் இயற்கை பூச்சி விரட்டி மூலம் எங்களை காப்பாற்றி இருக்கிறீர்கள். 'கவாத்து' முறையில் 100 - 150 நாட்களுக்குள் நாங்கள் கனி தர, எங்களின் சரியான பூவை நீங்கள் தேர்வு செய்வது முக்கிய காரணம்!

விவசாயிகளின் வளர்ச்சிக்கு எங்களையும் உதவ வைத்த உங்களிடம் ஆயுள் உள்ளவரை விசு'வாசமாக' இருப்போம்.



பேரன்புடன்...

உங்களது பலா மரங்கள்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us