Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/முகவரி

முகவரி

முகவரி

முகவரி

PUBLISHED ON : ஜூன் 22, 2025


Google News
Latest Tamil News
'இவர் இங்கே' என்றுரைக்கும் முகவரி அல்ல இது; 'இவர் இப்படி' என்று சொல்லும் முகவரி!

இவ்வாரம்... ஆதரவற்றோருக்கு அடைக்கலமும், கைதுாக்கி விட ஆளற்றோருக்கு ஆதரவும் தரும் 'சேவாலயா' தொண்டு நிறுவனத்தின் ஆதாரம்; 37 ஆண்டுகளாக தமிழகத்தில் கல்வி, மருத்துவ சேவைகளை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நல்லுள்ளங்கள் உதவியோடு வழங்கி வரும்... 'சேவாலயா' முரளிதரன்!

என்னவாகும் விருப்பத்துடன் இன்னவாகிநிற்கிறீர்கள்?

கல்வி தரச்சொன்ன பாரதி, உணவு தரச் சொன்ன விவேகானந்தர், கிராமங்களை உயர்த்திவிடச் சொன்ன காந்தி... இவங்க ஆசைகளை நிறைவேற்றணும்னு 11 வயசுல ஆசைப்பட்டேன்; 63 வயசுலேயும் அந்த ஆசை தீரலை!

உதவிகள் மனிதத்தின் வெளிப்பாடா... சுயநலத்தின் வெளிப்பாடா?

'நீயும் நல்லா இருக்கணும்'னு நினைச்சு கொடுக்கிறதும் மனிதம்தான்; 'உனக்கு இதை கொடுத்தா நான் நல்லா இருப்பேன்'னு நம்பி நீட்டுறதும் மனிதம்தான்; ஒரு ஜீவன் தன்னை நேசிக்கிறதை 'சுயநலம்'னு எப்படி சொல்றது?

சேவை மனப்பான்மையை யாராலும் வளர்த்துக் கொள்ள இயலுமா?

எங்க பள்ளி மாணவர்களோட எண்ணிக்கை 2,200; பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுல 100 சதவீத தேர்ச்சி; திறன் மேம்பாட்டுக்கு பிரத்யேக வசதி; இந்த எல்லாத்துக்கும் காரணம் நான் மட்டும் இல்ல... நாங்கள்!

'அன்பு' - ஆதரவற்றவன் சார்பில் இதன் அர்த்தம்?

'சேவாலயா' நிழலுக்கு வந்தவங்க ஆரம்பத்துல என்னை 'அண்ணா'ன்னு கூப்பிட்டாங்க; அது, 'அப்பா'வா மாறுச்சு; அடுத்தது 'தாத்தா'வா இருக்கலாம்; ஆனா, இது எல்லாமே எனக்குள்ளே 'அன்பு'ன்னு தான் பதிவாகுது!

'என் வாழ்க்கை... வரம்' - இப்படி உணர்ந்த தருணம்?

அப்பா இல்லை... ஒரே நம்பிக்கையான அம்மாவும் தவறிப்போன நாள்ல, மயான சாம்பலை அள்ளி 'அம்மா... அம்மா...'ன்னு அழுதுட்டு இருந்த அந்த சிறுமியை, 'சேவாலயா' தன் கூட்டுக்கு அழைச்சுட்டு வந்த நாள்!

தன் சந்தோஷ நாட்களில் மட்டும் இவ்விடங்களை நினைப்பவர்கள் பற்றி?

'தனக்கப்புறம் உங்களைப் பார்த்துக்க முரளிதரன் தயார் பண்ணி வைச்சிருக்கிற குழு மட்டுமில்ல... நாங்களும் இருக்கோம்'னு வருஷத்துக்கு ஒருதடவையாவது வந்து சொல்லிட்டுப் போறதுல ரொம்பவே சந்தோஷப்படுறேன்!

யாருமற்ற ஜீவனாக ஒருவன் தன்னை உணர்வது இறைவனின் பிழையா?

'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்' - 'கையேந்தி வாழ்ற சூழல் யாருக்காவது ஏற்பட்டா இந்த உலகத்தை படைச்சவனும் அப்படியே வாழ்ந்து கெடுவான்'னு வள்ளுவர் சொல்றார்; 'ஒவ்வொரு மனிதனும் இறைவன்'னு நான் நம்புறேன்!

இறைவனை காண்பது சரி; ஏழையின் சிரிப்பு இதயத்தில் இருந்தா எழுகிறது?

ஆதரவில்லாம வர்ற குழந்தைகளுக்கு நானும்என் மனைவி புவனேஸ்வரியும் அப்பா - அம்மாவாகி, அவங்களை ஆளாக்கி திருமணம் பண்ணி வைச்ச தருணங்கள்ல, அவங்க மன பூரிப்பை அந்த முகங்கள்ல பார்த்திருக்கோம்!

இந்த சேவை தந்த அனுபவத்தில்... உறவும், உணர்வும்?

ஆதரவற்ற முதியோர்களையும், குழந்தைகளையும் ஒருத்தருக்கொருத்தர் ஆதரவாக்கி பாதுகாக்குற பாக்கியத்துல சொல்றேன்... ஆறுதலான சின்ன 'ஸ்பரிசம்'தான் உறவு; 'கண்ணீர்'தான் அந்த உறவை வணங்குற உணர்வு!

பலமிக்கவர்கள் ஆள்பலம் உள்ளவர்களா... ஆதரவற்றவர்களா?

ஆதரவற்றவனா உணர்றது நரகம்; அந்த நரகத்துல இருந்து வெளியே கொண்டு வர்றதுக்குதான் 400 பணியாளர்கள் இங்கே உழைக்கிறோம். உறுதியா சொல்றேன்... இங்கே வளர்ந்து ஜெயிச்சவன் பெரும் பலசாலி!

பலர் நீட்டும் உதவியால்தான் 'சேவாலயா' எனில், புண்ணியத்தில் உங்கள் பங்கு?

லட்சங்கள்ல சம்பாதிச்ச சாப்ட்வேர் இன்ஜினியர் நான்; அந்த பணியை உதறிட்டு மனைவியோடு இந்த கடமையைச் செய்றேன்; தோளுக்கு மேல வளர்ந்த என் மூணு பசங்களும் நிறைவா உணர்றாங்க; போதும்... எனக்கு இது போதும்!

'எந்த ஒரு மனிதனும் நல்லவன் இல்லை' என்றால் ஏற்பீர்களா?

இந்த 37 ஆண்டு காலம், 10 லட்சம் பேரோட வாழ்க்கையை திருத்தி எழுத எனக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. நான் திருத்தினது எல்லாம் தீர்ப்புகள் இல்ல... பிழைகள்! 'பிழைகளோட வாழ்றவன்தான் மனுஷன்'னு நான் நம்புறேன்!

'எல்லாம் இருந்தும் எதுவும் அற்றவன்' - யார்?

உடல் இருக்கு... அதுல ஆரோக்கியம் இருக்கு; குடும்பம் இருக்கு... நிறைய அன்பு, பாசம் இருக்கு; நட்பு இருக்கு... அதுல நேர்மை இருக்கு; இப்படி எல்லாம் இருந்தும் தனக்கான சிறகுகளை தயாரிக்கத் தெரியாதவன்!

உங்கள் பார்வையில் இன்றைய சமூகத்தின் பெரும் வியாதி?

அலட்சியம்.

ஆறுதலான சின்ன 'ஸ்பரிசம்'தான்

உறவு; 'கண்ணீர்'தான் அந்த

உறவை வணங்குற உணர்வு!



99414 50444


vpdr@sevalaya.org




      Our Apps Available On




      Dinamalar

      Follow us