Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/முகவரி

முகவரி

முகவரி

முகவரி

PUBLISHED ON : ஏப் 27, 2025


Google News
Latest Tamil News
'இவர் இங்கே' என்றுரைக்கும் 'முகவரி' அல்ல இது; 'இவர் இப்படி' என்று சொல்லும் முகவரி! இவ்வாரம்... கிட்டத்தட்ட கால் நுாற்றாண்டு காலம் ஐ.பி.எஸ்., பணி செய்திருப்பினும், இன்னும்... பசி தீரா சிங்கமாய் உலவும் தென்மண்டல காவல் துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா.

'நான்' - உங்கள் அனுபவத்தில் இதனை விளக்கினால்...

'என் திறமை என் அதிகாரியால அங்கீகரிக்கப்படும்'னு என் தலைமையின் கீழே வேலை பார்க்குறவங்க தீவிரமா நம்புற சூழல்ல, 'நான்'னு நான் எதைச் சொன்னாலும் அது குற்றம்; கூட்டு முயற்சிதான் எங்க காவல் பணி!

'பயம்தான் விழிப்போடு இயங்க வைக்கும்' என்பது காவல் துறையினருக்குப் பொருந்துமா?

'விதிகளுக்குள்ளே தான் இயங்கணும்'ங்கிற பயமும், 'நேர்மையான அதிகாரிக்கு பதில் சொல்லியாகணுமே'ங்கிற பயமும், 'இந்த தப்பு பண்ணினா மனசாட்சி உறுத்துமே'ங்கிற பயமும் காவல் துறையினருக்கு அதிகமா இருக்கணும்!

அதிக மரியாதை சந்தித்துப் பழக்கப்பட்ட மனிதன் பலமானவனா... பலவீனமானவனா?

'கிடைக்கிற மரியாதை, தான் சார்ந்திருக்கிற பதவிக்கானது'ன்னு உணர்ற மனுஷன் பலமானவன்; மரியாதை கிடைக்காத நேரங்கள்ல, 'என்னோட எந்த செயல் இந்த இழப்புக்கு காரணம்'னு யோசிக்காதவன் பலவீனமானவன்!

உங்களை எப்போதும் வியக்க வைக்கும் மனிதர் யார்?

ஐ.பி.எஸ்., தர்ற பதவி கம்பீரம்தான்; ஆனா, தனக்கு கிடைச்ச பதவிகளுக்கு எல்லாம் தன் செயல்பாடுகளால கம்பீரம் தந்தவர் கே. விஜய்குமார் ஐ.பி.எஸ்.,; அவருக்கு இணையான ஆளுமையை இன்னும் நான் பார்க்கலை!

ஐ.பி.எஸ்., பணியில் சாதிக்க விரும்பியதில் எத்தனை சதவீதம் சாத்தியமாகி இருக்கிறது?

ஐ.பி.எஸ்., கனவோட என்னை நான் செதுக்கினதில்லை; ஆனா, அதுதான் வாழ்க்கைன்னு ஆனதுக்கப்புறம் பெரும் கனவோட இயங்குறேன். 'உண்மையின் பக்கம் நிற்கணும்'னு 100 சதவீதம் ஆத்மார்த்தமா முயற்சி எடுக்கிறேன்!

தமிழக அரசு 2022ல் வழங்கிய 'சிறந்த பணி'விருது தந்தது என்ன?

'கொரோனா' சூழல்ல லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்களை தமிழகத்துல இருந்து பத்திரமா அனுப்பி வைச்சப்போ கிடைச்ச சந்தோஷத்தை, இன்னொரு முறை அதே அளவுல அனுபவிக்க வாய்ப்பு தந்த விருது அது!

மனித மூளைக்கு 'மறதி' இல்லையெனில் மக்கள் பார்வையில் காவல் துறை?

'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே'ங்கிற கீதை தத்துவ அடிப்படையில இயங்குற ஆள் நான்; 'காவல் துறையின் சாதனைகளையும் மக்கள் மூளை மறக்காது'ன்னு உங்க கேள்வி நீட்டுற இனிப்பு ரொம்பவே தித்திக்குது!

'உங்களை முழுமையாக அறிவேன்' என்று யாராவது உங்களிடம் சொன்னால்...

'பரிதாபத்திற்குரிய மனிதன்'னு தோணும். 'நாம எடுக்குற முடிவுகள் சூழ்நிலை சம்பந்தப்பட்டது; சூழ்நிலை கைதியா மனிதன் இயங்குறப்போ, யாரும் யாரையும் முழுசா புரிஞ்சுக்க வாய்ப்பே இல்லை'ங்கிறது என் அனுபவம்!

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி இனி குற்றங்களை குறைக்குமா, வளர்க்குமா?

தொழில்நுட்பத்தோட முதுகு சவாரியில குற்றங்கள் ஓடுது; தொழில்நுட்ப சிறகுகளோட காவல் துறை விரட்டுது; குற்றவாளிகளை கண்காணிக்கிற எங்க 'பருந்து செயலி'தான் என் பதிலுக்கு சாட்சி!

'பிரேம் ஆனந்த் சின்ஹா போல் இயங்க வேண்டும்' எனும் ஆசையை துாண்டி விட்டிருப்பதாக நம்புகிறீர்களா?

'இப்படி ஒரு தாக்கத்தை உங்களுக்குள்ளே ஏற்படுத்தி இருக்குறதை கே. விஜய் குமார் சார் தெரிஞ்சு வைச்சிருப்பாரா'ன்னு கேட்குற மாதிரி இருக்கு; இந்த கேள்விக்கான பதிலை எதிர்காலம் சொல்லும்!

உங்களின் இந்த வாழ்க்கையில் யாருக்கு அதீத சந்தோஷம்?

என் அப்பாவை விட 10 மாத காலம் முன்கூட்டியே எனக்கு அறிமுகமான அம்மா, என் அப்பா, என் மனைவி, என் மகள்... இதுதான் வரிசை; சந்தோஷத்துக்கான ஒரே காரணம்... மக்களுக்கு உதவ எனக்கு கிடைச்சிருக்கிற வாய்ப்பு!

'அதிகாரம் இல்லாத ஒருநாள்' - எப்படி உணர்வீர்கள்?

என்னை நான் முழுமையா அதிகாரம் பண்ணிக்க கிடைச்ச வாய்ப்பா அந்த நாளை பயன்படுத்திக்குவேன்! 'அதிகாரம் இல்லாத இடத்துல எதையும் கத்துக்க முடியாது; கற்றல் இல்லாம வளர்ச்சி இருக்காது'ங்கிறது என் நம்பிக்கை!

யாருக்கு அஞ்சுவார் இந்த பிரேம் ஆனந்த் சின்ஹா?

கடவுள்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us