Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/அது...நீங்களா?

அது...நீங்களா?

அது...நீங்களா?

அது...நீங்களா?

PUBLISHED ON : ஏப் 13, 2025


Google News
Latest Tamil News
ஐந்து ரூபாய் சுண்டல் பொட்டலத்தின் நுால் பிரிக்கும் வரை மனதிற்கு பொறுமை இல்லை; அப்படி ஒரு மணம்!

இடித்த இஞ்சி, பூண்டு, சோம்பு, மிளகாய் உள்ளிட்டவற்றுடன் பொறித்தெடுத்த கடலைமாவும், அரிசிமாவும் கரம் மசாலாவும் சேர்ந்து கமகமக்கும் பட்டாணி சுண்டல்

காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதியில் இருக்கிறது ஏ.லட்சுமிபதி ஐயர் இனிப்பகம். சுண்டல் பொட்டலத்தின் நுால் பிரித்ததும் குப்பென்று கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா வாசம். நன்கு வெந்து மசிந்து பொங்கல் பதத்தில் இருந்த வெண் பட்டாணியின் ருசியை ஒருபடி மேலேற்றி இருந்தது மஞ்சள் துாள், மிளகாய் துாளுடன் சேர்ந்த பிரத்யேக மசாலா காரம்!

சூடான மெதுபக்கோடா உருண்டை ஒன்றை உதிர்த்து பட்டாணி சுண்டலுடன் சேர்த்து ருசிக்கையில்... 'இதற்குமேல் என்னடா சுகம்' என்றது மனது. இந்த கூட்டணி... மாப்பிள்ளை பட தனுஷ் மாதிரி; நாவில் பட்டதும் ருசிக்காது; கரைய கரைய ருசி துாள் கிளப்பும்!

'வறுத்த பட்டாணி, உரலில் தயாரிக்கப்பட்ட மசாலா, விறகு அடுப்பு, நான்கு தலை முறை அனுபவ தாளிப்பு... சுண்டல் ருசிக்கு காரணம்' என்றார் உரிமையாளர். 'இரண்டு பொட்டலம் கொடுங்க' என்று மின்னலாய் ஓடி வந்து நின்றான் ஒரு சிறுவன்.

'தீர்ந்து போச்சேப்பா... ஒண்ணுதான் மிச்சம்' என்றார் கடைக்காரர். 'பரவாயில்லை கொடுங்க... நான் என் பாட்டிக்கு கொடுத்துடுறேன்' என்று கை நீட்டினான். வாய் நிறைய சுண்டலுடன் ஆச்சரியப்பட்டு நின்றேன்.

'ஆசை அறுக்கும் வித்தை' அறிந்த அச்சிறுவனின் பெற்றோர் நீங்களா?

93840 99399




      Our Apps Available On




      Dinamalar

      Follow us