ADDED : ஆக 06, 2011 02:25 AM
திருச்சி: கல்லணை அருகே கழுத்தறுப்பட்டு கிடந்த வாலிபர் திருச்சியைச் சேர்ந்தவரா? என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அடுத்துள்ள கல்லணை கூகூர் பாறை அருகே நேற்று அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவ்வழியே சென்ற விவசாயிகள் இதைப்பார்த்து தோகூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் சென்ற போலீஸார், வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் ஊதா நிற கைலியும், கருப்பு கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்தார். சட்டை திருச்சி-1 என்ற முகவரியில் கனகா டைலரிடம் தைக்கப்பட்டுள்ளது. அவரது கையில் ஈஸ்வரி என்ற பச்சை குத்தப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் அருகே கஞ்சா பொட்டலம் கிடந்துள்ளது. சம்பவ இடத்துக்கு மோப்பநாய் கரிகாலன் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரத்திலிருந்த பஸ்ஸ்டாண்ட் வரை சென்று படுத்துக் கொண்டது. கொலையை இரண்டுக்கும் மேற்பட்டோர் செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.