சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயாரிக்க 62 பதிப்பகங்களுக்கு கல்வித்துறை அனுமதி
சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயாரிக்க 62 பதிப்பகங்களுக்கு கல்வித்துறை அனுமதி
சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயாரிக்க 62 பதிப்பகங்களுக்கு கல்வித்துறை அனுமதி
சென்னை : சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை தயாரிக்க, 62 தனியார் பதிப்பகங்களுக்கு, மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், மேக்மில்லன், டாடா மெக்ரா, சாம்பா பதிப்பகம் உள்ளிட்ட, பிரபலமான பதிப்பகங்களும் அனுமதி பெற்றுள்ளன. சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தொடர்பான ஒரு வழக்கில், தனியார் பள்ளிகளுக்கு இரண்டு விதமான, 'சாய்ஸ்'களை, சென்னை ஐகோர்ட் வழங்கியுள்ளது. அரசு தயாரிக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அல்லது அரசு அனுமதி பெற்ற தனியார் பதிப்பகங்கள் தயாரிக்கும் பாடப் புத்தகங்கள் ஆகிய இரண்டில், ஏதாவது ஒரு பாடப் புத்தகங்களை தனியார் பள்ளிகள் வாங்கிக்கொள்ளலாம் என, ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அதன்படி, சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை தயாரிக்க அனுமதிகேட்டு, ஏராளமான தனியார் பதிப்பகங்கள், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்திடம் விண்ணப்பித்தன. கடந்த ஏப்ரல் 5ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயற்சித்தபோது, தேர்தல் வந்தது. இதனால், தனியார் பதிப்பகங்களுக்கு அனுமதி அளிக்கும் விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், தனியார் பதிப்பகங்களுக்கு அனுமதி அளித்து, மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான பதிப்பகங்கள், ஏற்கனவே சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை தயாராக அச்சிட்டு வைத்துள்ளன. நடப்பு கல்வியாண்டில், சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்படுவது உறுதியாகிவிட்டால், தனியார் பள்ளிகள் அனைத்தும், தனியார் பதிப்பகங்களிடம் இருந்து பாடப் புத்தகங்களை வாங்க திட்டமிட்டுள்ளன.