மாதாந்திர மண்ணெண்ணெய் தேவை அதிகரிப்பு : ஒருதலை பட்சத்தால் வினியோகத்தில் பாதிப்பு
மாதாந்திர மண்ணெண்ணெய் தேவை அதிகரிப்பு : ஒருதலை பட்சத்தால் வினியோகத்தில் பாதிப்பு
மாதாந்திர மண்ணெண்ணெய் தேவை அதிகரிப்பு : ஒருதலை பட்சத்தால் வினியோகத்தில் பாதிப்பு
ADDED : செப் 04, 2011 01:22 AM
சென்னை: மத்திய அரசின் ஒருதலை பட்சமான முடிவினால், பொது வினியோகத் திட்டத்தில், மண்ணெண்ணெய் வினியோகம் குறைவாக இருக்கிறது.
இருப்பினும், தேவையை பூர்த்தி செய்ய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில், மண்ணெண்ணெய் தேவை, ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால், மத்திய அரசின் ஒருதலைப்பட்சமான முடிவினால், பொதுவினியோகத் திட்டத்தில், மண்ணெண்ணெய் வினியோகம் எப்போதும் பாரபட்சமாக இருக்கிறது. கடந்த, 2004ம் ஆண்டு முதல், 2010 மார்ச் வரை, 59 ஆயிரத்து, 852 கிலோ லிட்டர் வழங்கப்பட்டது. ஆனால், 2010-12ல், 52 ஆயிரத்து 804 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 44 ஆயிரத்து, 572 ஆக மேலும் குறைத்து வினியோகம் செய்தது. இருப்பினும், மண்ணெண்ணெய் நுகர்வு, 52 ஆயிரம் கிலோ லிட்டராக உள்ளது. எனவே, ஜூலை முதல் பொது வினியோகத் திட்டத்தில், மண்ணெண்ணெய் வினியோகம் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதும், கடந்த 2004ம் ஆண்டிற்கு பின் வழங்கப்பட்ட, 55 லட்சம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு மட்டும், தலா 3 லிட்டர் வீதம் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. தமிழகத்தில், மண்ணெண்ணெய் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதற்கு, மாதம் தோறும், 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டர் ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசிடம், கேட்டுக்கொண்டுள்ளது. அதே சமயம், ஜூன் 15ம் தேதி முதல், காஸ் இணைப்பு விவரங்களை ரேஷன் கார்டுகளில் முத்திரையிடப்படாத இனங்களைக் கண்டறிந்து, அவற்றில் முத்திரையிட்டு அதன் மூலம், ஏற்படும் மண்ணெண்ணெய் சேமிப்பு, தகுதியுள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்படும். ஆரம்ப நிலை கணிப்புப்படி, 50.24 லட்சம் ரேஷன் கார்டுகளில், காஸ் முத்திரை பதிவு செய்யப்படாமல் உள்ளது. இதன் மூலம் 3,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் சேமிக்க இயலும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பற்றாக்குறை நீடிப்பதால், பொது வினியோகத் திட்ட மண்ணெண்ணெயை வேறு நோக்கத்திற்காக கடத்தப்படுவதை தடுக்க, தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுத்து வருகிறது.