ADDED : ஜூலை 19, 2011 12:42 AM
பந்தலூர் : பந்தலூர் அருகே உப்பட்டி பாரதமாதா மேல்நிலைப்பள்ளியில் பொது தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் பண முடிப்பு வழங்கப்பட்டது.
உப்பட்டி பாரதமாதா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் பள்ளி தலைமையாசிரியர் கீவர்கீஸ் வரவேற்று பேசுகையில், ''பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி, ஒழுக்கம், பொது அறிவு, சேவை பணிகளை போதித்தாலும், மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் அவற்றை கற்றுக்கொண்டால் மட்டுமே சிறப்பானவர்களாக மாற இயலும். மாணவர்கள் பள்ளியில் மட்டுமின்றி பொதுவாழ்வில் சிறப்பானவர்களாக வாழ வேண்டுமானால் ஆசிரியர்களுடன், பெற்றோர்களும் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சிக்கு பள்ளி பி.டி.ஏ. தலைவர் சற்குணசீலன் தலைமை வகித்தார். தொடர்ந்து பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் தில்சாத், பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் அகஸ்டின் , பள்ளியில் சிறந்த மாணவர்கள் அன்சிமரியா, யோகேஸ்வரன், பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவன் விஜய் ஆகியோருக்கு பரிசு மற்றும் பணமுடிப்பு வழங்கப்பட்டது. காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கமும் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சுரேஷ்பாபு செய்திருந்தார். ஆசிரியர் பிஜூ நன்றி கூறினார்.