
கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் மாஜி...! ''கட்சியை உடைச்சிடக் கூடாதுன்னு பயப்படறா ஓய்...!'' என, அரசியல் தகவலுடன் பேச ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்தக் கட்சியிலங்க...'' என, விவரம் கேட்டார் அந்தோணிசாமி.
''பா.ம.க., விஷயத்தைச் சொன்னேன்...
''அணி மாற வாய்ப்பிருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் சிலர், பா.ம.க.,வினரை தொடர்பு கொண்டு பேசிண்டிருக்கா... இந்த நிலை நீடிச்சா, கட்சியையே உடைச்சிடுவா... அதுல இருந்து தப்பிக்கறது தான் பா.ம.க.,வுக்கு இப்போதைய ஒரே பிரச்னையா இருக்கு ஓய்... உள்ளாட்சித் தேர்தல்ல, தி.மு.க., என்ன நிலை எடுக்கப் போறதுன்னு தெரியலை... அந்தக் கட்சியே பல சிக்கல்ல நீடிச்சிண்டிருக்கு... அதோட சேர்ந்து தேர்தலை சந்திக்க, பா.ம.க., தொண்டர்கள் விரும்பலை... அதனால, சந்தர்ப்பம் கிடைச்சா, அ.தி.மு.க., பக்கம் சாய வாய்ப்பிருக்குன்னு சொல்றா...'' என்றார் குப்பண்ணா.
''கட்சித் தலைமை மீது முன்னாள் அமைச்சர் கடும் அதிருப்தியில் இருக்கார் பா...'' என, அடுத்த மேட்டரை துவக்கினார் அன்வர்பாய்.
''எந்த கட்சியில வே...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
''தி.மு.க.,வுல தான் பா... நில அபகரிப்பு, நில மோசடி விவகாரங்களில் அரசு தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுத்துட்டு இருக்கு... வீரமான முன்னாள் அமைச்சர் ஒருத்தர் மேலயும் நில அபகரிப்பு வழக்கு போட்டு, போலீஸ் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராயிட்டு இருக்கு பா...
''எதிர்க்கட்சியின் வலுவான மாவட்டச் செயலரா இருந்தும், அரசு தரப்புல தைரியமா வழக்கு போட்டிருக்காங்க... அதுக்கு, கட்சித் தலைமைகிட்ட இருந்து கண்டனம், போராட்டம்னு பரபரப்பு அறிவிப்புகள் வரும்னு அவர் எதிர்பார்த்தாராம்... ஆனா, கட்சித் தலைமை கண்டுக்கவே இல்லை... அதனால, தலைமை மேல கடும் கோபத்தில இருக்கார் பா... '' என்றார் அன்வர்பாய்.
''சென்னை அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து ரவுடியை மீட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு, 'கார்டன்'ல இருந்து, 'டோஸ்' விழுந்துருக்கு வே...
'சட்டம்-ஒழுங்கு விஷயத்துல கட்சி பேரைச் சொல்லி தலையிடக் கூடாது'ன்னு, அவரை எச்சரிச்சதால ஆடிப்போயிருக்காராம்...
''அதுபோல, சென்னை புறநகர்ல அரசியல் சிபாரிசுடன் ஒன்பது இன்ஸ்பெக்டர்கள் போஸ்டிங் வாங்கிட்டு வந்திருக்காவ... அவங்களுக்கும் உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பிருக்கு... புறநகர் போலீஸ் கமிஷனர் கரண் சின்ஹா, மேலிடத்துக்கு புகார் அனுப்பாம அடக்கி வாசிக்கிறார் வே...'' என்று ஒரே மூச்சில் கூறிவிட்டு அண்ணாச்சி புறப்பட, பெஞ்ச் அமைதியானது.