/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பழமையான வெலிங்டன் ஏரி தூர் வாரப்படுமா? பாசன விவசாயிகள் எதிர்பார்ப்புபழமையான வெலிங்டன் ஏரி தூர் வாரப்படுமா? பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு
பழமையான வெலிங்டன் ஏரி தூர் வாரப்படுமா? பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு
பழமையான வெலிங்டன் ஏரி தூர் வாரப்படுமா? பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு
பழமையான வெலிங்டன் ஏரி தூர் வாரப்படுமா? பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 13, 2011 01:34 AM
திட்டக்குடி : பழமை வாய்ந்த வெலிங்டன் ஏரியை தூர் வாரி, படகு குழாம் அமைத்து சுற்றுலா மையமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாயில் உள்ள வெலிங்கடன் ஏரி இரண்டாம் உலக போரின்போது 1923ம் ஆண்டு கட்டப்பட்டது. 16.6 சதுர கி.மீ., பரப்பளவும், 29.74 அடி உயரம் கொண்ட இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 2,560 மில்லியன் கனஅடி ஆகும். ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் வெள்ளாற்றிலிருந்து வரும் மழைநீர், தொழுதூர் அணைக்கட்டு வழியாக வெலிங்டன் ஏரியை வந்தடைகிறது. இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வாய்க்கால்கள் மூலம் பீமன் ஏரி, சிறுமுளை ஏரி, பெறுமுளை ஏரி, வையங்குடி ஏரி உட்பட 23 ஏரிகளுக்கு செல்கிறது. அங்கிருந்து சிறு, சிறு வாய்க்கால்கள் மூலம் விவசாய பாசனத்திற்கு செல்கிறது. வெலிங்டன் ஏரி தண்ணீர் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுக்காக்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உளள 28 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை பாசனத்திற்கு ஏரியில் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் ஆண்டிற்கு ஒரு போகம் மட்டுமே பயிர் செய்யப்படுகிறது. ஏரியில் இருந்து செல்லும் பிரதான வாய்க்கால் 36 கி.மீ., நீளமுடையது. ஏரி கட்டப்பட்டு 88 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் பிரதான வாய்க்கால், மதகுகள் உள்ளிட்டவை பழுதடைந்ததால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறி வீணாகியது. இதனையடுத்து மத்திய அரசின் கழனி வாய்க்கால் சீரமைப்பு திட்டத்தின் கீழ் 5.50 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு, பழுதடைந்த மதகுகள் தற்போது ஓரளவிற்கு சீரமைக்கப்பட்டுள்ளன. வாய்க்கால்களில் இரு பக்கமும் கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏரி கட்டப்பட்டு 88 ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு முறைக்கூட தூர் வாராததால் ஏரியின் அடியில் வண்டல் மண் படிவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் ஏரி ஏழு முதல் 10 அடி ஆழம் வரை தூர்ந்துள்ளது. தற்போது வெலிங்டன் ஏரி பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஆட்சியில் ஏரி தூர் வார திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏரியின் அடியில் உள்ள மண் தரம் இல்லாமல் உள்ளதால், இதனை எடுத்து கரையைப் பலப்படுத்தவும் முடியாது. வாரப்படும் மண்ணை எங்கே போடுவது என்பதில் குழப்பம் நிலவுவதால், தூர் வாரும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தூர் வாரினால் ஏரியின் கொள்ளளவு அதிகரிப்பதன் மூலம் கூடுதலாக ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும். சுற்று வட்டார பகுதிகளில் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மேலும் உயரும். விவசாயிகளின் நலன் கருதி பழமையான வெலிங்டன் ஏரியையும், அதன் துணை ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரி ஆழப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். 'வருவாய் கிடைக்க வழி' ஏரியை சுற்றுலாதலமாக மாற்ற வேண்டுமென இப்பகுதி பொது மக்கள் கோரிக்கையை ஏற்று தயாரிக்கப்பட்ட திட்டமும் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. ஏரியை ஆழப்படுத்தி, கரையை சீரமைத்து சிறுவர் பூங்காக்கள் மற்றும் படகு குழாம் அமைத்து சுற்றுலா மையமாக மாற்றினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். கோடைகாலங்களில் பல்வேறு பகதிகளில் இருந்து ஏராளமான பறவைகள் வெலிங்கடன் ஏரிக்கு தினமும் வந்து செல்கின்றன. சதுப்பு நிலக் காடுகளை வளர்க்க அரசு நடவடிக்கை மேற்கொண்டால் பறவைகளின் சரணாலயமாக வெலிங்டன் ஏரி மாற வாய்ப்பு உள்ளது.