சம்பளம் கோரி 18 ஆண்டுகளாக போராடிய 71 வயது முதியவர் : ஐகோர்ட் கிளை உத்தரவு
சம்பளம் கோரி 18 ஆண்டுகளாக போராடிய 71 வயது முதியவர் : ஐகோர்ட் கிளை உத்தரவு
சம்பளம் கோரி 18 ஆண்டுகளாக போராடிய 71 வயது முதியவர் : ஐகோர்ட் கிளை உத்தரவு
ADDED : ஆக 17, 2011 01:33 AM

மதுரை : தூத்துக்குடியில் 18 ஆண்டுகளாக சம்பளம் கோரி போராடிய 71 வயது முன்னாள் ராணுவ வீரருக்கு 50 சதவீத சம்பளம் வழங்க, போக்குவரத்து கழகத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் சங்கரன். இவர் ராணுவத்தில் 1967 முதல் மூன்றாண்டுகள் பணிபுரிந்தார். 1972 ஜன., 1ல் மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக சேர்ந்தார். பின், நெல்லைக்கு மாற்றப்பட்டார். இவர் 1937 அக்., 24ல் பிறந்தவர். பணி பதிவேடுகளில் 1935 ஜூன் 2ல் பிறந்ததாக இருந்தது. இதை மாற்ற கோரி போக்குவரத்து கழகத்தில் மனு செய்தார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சப் கோர்ட்டில் மனு செய்தார். மனு தள்ளுபடியானது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு செய்தார். மனு நிலுவையில் இருந்த போது, அதிகாரிகள் கட்டாயப்படுத்தி, 28 மாதங்களுக்கு முன்பாக ஓய்வு பெற வைத்தனர். இதனால் 28 மாத சம்பளம் மற்றும் ஓய்வூதிய பயன்களை வழங்க கோரி ஐகோர்ட் கிளையில் ரிட் மனு செய்தார். மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்து சங்கரன், ரிட் அப்பீல் செய்தார்.
நேற்று நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் முன் மனு விசாரணைக்கு வந்தது. சங்கரன் நேரில் ஆஜராகி வாதிடுகையில், ''பிறந்த தேதியை மாற்றியதில் என் மீது தவறு இல்லை. பிறந்த தேதியை ஆராயாமல், முன்கூட்டி ஓய்வு பெற வைத்தனர்,'' என்றார். நீதிபதிகள், ''மனுதாரருக்கு ஏற்கனவே 2 மாத சம்பளம் வழங்கப்பட்டதால், மீதமுள்ள 26 மாத சம்பளத்தில் 50 சதவீதத்தை போக்குவரத்து கழக அதிகாரிகள் வழங்க வேண்டும்,'' என, உத்தரவிட்டனர்.