Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மேற்கு வங்க பனியன் உற்பத்தியாளர்கள் திருப்பூர் தொழில் துறையினருடன் ஆலோசனை

மேற்கு வங்க பனியன் உற்பத்தியாளர்கள் திருப்பூர் தொழில் துறையினருடன் ஆலோசனை

மேற்கு வங்க பனியன் உற்பத்தியாளர்கள் திருப்பூர் தொழில் துறையினருடன் ஆலோசனை

மேற்கு வங்க பனியன் உற்பத்தியாளர்கள் திருப்பூர் தொழில் துறையினருடன் ஆலோசனை

ADDED : ஆக 01, 2011 11:11 PM


Google News
Latest Tamil News

திருப்பூர்: மேற்கு வங்க பனியன் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், உள்நாட்டு பனியன் உற்பத்தி மற்றும் இதர பிரச்னைகள் தொடர்பாக, திருப்பூர் 'சைமா' சங்க நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.



மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் பனியன் உற்பத்தியாளர்கள், ஸ்ரீமாய் பானர்ஜி என்பவரது தலைமையில், 'பெங்கால் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம்' நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு பனியன் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், பெங்கால் பனியன் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் குழு, தமிழகம் வந்துள்ளது. இக்குழு திருப்பூரில் 'சைமா' சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தது.



கூட்டத்தில், 'சைமா' தலைவர் ஈஸ்வரன் பேசியதாவது: மத்திய அரசு 'பிராண்டட்' ஆடைகளுக்கு, கலால் வரி விதித்துள்ளதால், இந்தியா முழுவதும் உள்ள பனியன் உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால், நிர்வாக சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, வர்த்தகமும் கடும் சோதனைகளை சந்தித்து வருகிறது. இந்தியாவில் உள்ள இதர ஜவுளி நிறுவனங்களை காட்டிலும், திருப்பூர் தொழில் துறையினருக்கு, சாயப்பிரச்னை கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது. தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதால், விரைவில் சாயப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதற்கு பிறகும், மத்திய கலால் வரி பிரச்னை பெரிய சவாலாக இருக்கும். எனவே, சைமா சங்கம், முதல்வரை சந்தித்து, கலால் வரியை திரும்ப பெற வேண்டுமென, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளோம். மேற்கு வங்கத்தில் உள்ள பனியன் உற்பத்தியாளர்களும், முதல்வர் மம்தா பானர்ஜியையும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து, கோரிக்கை வைக்க வேண்டும். அந்தந்த மாநில முதல்வர்கள் நடவடிக்கை எடுக்கும்போது, கலால் வரி விதிப்பு திரும்ப பெறப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது, என்றார்.

பெங்கால் பனியன் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஸ்ரீமாய்பானர்ஜி பேசும்போது,''மேற்கு வங்கத்தில் பனியன் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, வரும் 4ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு செல்ல இருக்கிறோம். குறிப்பாக, நூற்பாலைகள், 'நிட்டிங்' ஆலைகள், கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையம் (சிட்ரா), திருப்பூர் அப்பேரல் பார்க் உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டு, தொழில்நுட்பங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக, அனைத்து மாநில உற்பத்தியாளர்களிடமும் பேசி, மத்திய கலால் வரி விதிப்பை திரும்ப பெறுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்,'' என்றார். மேற்குவங்க குழுவினர், 'சைமா' இன்ஸ்டிடியூட்டை பார்வையிட்டு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது குறித்து கேட்டறிந்தனர். 'சைமா' பொருளாளர் ராமசாமி, துணைத் தலைவர் கோவிந்தப்பன் உள்ளிட்ட நிர்வாகிகளும், பெங்கால் பனியன் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us