Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பெற்றோரை கண்ணியப்படுத்துவோம்

பெற்றோரை கண்ணியப்படுத்துவோம்

பெற்றோரை கண்ணியப்படுத்துவோம்

பெற்றோரை கண்ணியப்படுத்துவோம்

UPDATED : ஆக 04, 2011 08:58 AMADDED : ஆக 03, 2011 10:09 PM


Google News
Latest Tamil News

அலீமக்தூம் மஹாயிமீ என்பவர், சிறுவராக இருந்த காலத்தில், ஒரு இரவில் அவருடைய தாயார், ''மகனே! எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா,'' என்றார்.

மஹாயிமீ தண்ணீர் கோப்பையை நன்றாகக் கழுவி, தண்ணீர் முகரச் சென்ற போது, குடத்தில் தண்ணீர் இல்லை. எனவே, ஒரு கிணற்றுக்குப் போனார். அங்கிருந்து தண்ணீர் கொண்டு வந்தார். அவர் வருவதற்குள், தாயார் தூங்கி விட்டார். மஹாயிமீ விடிய விடிய அம்மாவின் அருகிலேயே தண்ணீர் கோப்பையுடன் நின்றார். காலையில் தாயார் கண்விழித்துக் கேட்டால், உடனே அவருக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தார். மறுநாள் காலை தாயார் கண் விழித்தார். தன் அருகில் மகன் தண்ணீர் கோப்பையுடன் நிற்பதைப் பார்த்தார்.

வியப்பு மேலிட,''மகனே! எவ்வளவு நேரம் இப்படி நிற்கிறாய்?'' என்று கேட்டார்.

'அம்மா! நேற்றிரவு தாங்கள் தண்ணீர் கேட்டீர்கள். நான் கொண்டு வருவதற்குள் உறங்கி விட்டீர்கள். விழித்தவுடன் கேட்டால் கொடுக்கலாமென, தங்கள் அருகிலேயே உறங்காமல் காத்து நிற்கிறேன்,'' என்றார்

அந்தத்தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். இறைவன் அதை ஏற்றுக்கொண்டான். பெற்றவர்கள் மரணமடைந்து விட்டாலும் கூட, அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை உண்டு என்கிறார்கள் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள். மரணித்து விட்ட பெற்றோருக்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பைக் கோருங்கள்.

பெற்றோர்களின் உறவைத் துண்டிக்காமல் வாழுங்கள். அவர்களுடைய நண்பர்களுக்கு கண்ணியம் கொடுங்கள். மரணித்து விட்டஉங்கள் பெற்றோருக்காக நீங்கள் செய்யும் தர்மத்தின் நன்மை உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர்கள் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தம் உள்ளது. பெற்றோர்களின் கோபத்தில் அல்லாஹ்வின் கோபம் உள்ளது. தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்றெல்லாம் அண்ணலார் பொன்மொழிகளை உதிர்த்திருக்கிறார்கள்.

பெற்றவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டியது மிகமிக அவசியம் என்பது இன்றைய இனிய சிந்தனையாக அமையட்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.29மணி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us