நிதி சுருட்டிய 33 ஊராட்சி தலைவர்களுக்கு "ஆப்பு' : தேர்தலில் போட்டியிட தடை வருமா?
நிதி சுருட்டிய 33 ஊராட்சி தலைவர்களுக்கு "ஆப்பு' : தேர்தலில் போட்டியிட தடை வருமா?
நிதி சுருட்டிய 33 ஊராட்சி தலைவர்களுக்கு "ஆப்பு' : தேர்தலில் போட்டியிட தடை வருமா?
சேலம் : சேலம் மாவட்டத்தில், திட்ட நிதியை சுருட்டிய, 33 ஊராட்சி தலைவர்கள், பணத்தை முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்டதோடு, திரும்ப செலுத்துவதாகக் கூறியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில், 385 ஊராட்சிகள் உள்ளன. 2006 உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த பலர், தலைவராக தேர்வு செய்யப்பட்டனர். திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை, போலி கணக்கில் சுருட்டும் நடவடிக்கை அதிகம் காணப்பட்டது. கடந்த ஆண்டு, தாசில்தார் சித்ரா தலைமையில், இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு, அப்போதைய கலெக்டர் சந்திரகுமார் உத்தரவிட்டார். மாவட்டத்தில் உள்ள, 33 ஒன்றியங்களில், பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் தான், அதிக மோசடிகள் நடந்துள்ளன. பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 20 ஒன்றியங்களில், பெரமனூர் தவிர மற்ற ஊராட்சிகள் அனைத்திலும், முறைகேடுகள் நடந்துள்ளன.
அதேபோன்று, பெத்தநாயக்கன்பாளையத்தில், 14 ஊராட்சிகளில் முறைகேடு நடந்துள்ளது. இது தவிர, காடையாம்பட்டி, சேலம், ஓமலூர், கொளத்தூர் உள்ளிட்ட சில ஒன்றியங்களில் ஓரிரு ஊராட்சிகளில், ஒரு லட்சம் முதல், 20 லட்ச ரூபாய் வரை, அரசு நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளது.
அப்போதைய சேலம் தாசில்தார் சித்ரா, பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் விசாரணை மேற்கொண்டார். பாரப்பட்டி சுரேஷ்குமார் சகோதரர் குமார் உள்ளிட்ட தி.மு.க., ஊராட்சி தலைவர்கள், அதில் ஈடுபட்டிருந்தனர். பெயரளவுக்கு மட்டுமே நடந்த விசாரணை, வீரபாண்டி ஆறுமுகம் உத்தரவால் ஒத்திப்போடப்பட்டது. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, ஊராட்சி நிதி முறைகேடு பற்றி, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலையில், 33 ஊராட்சி தலைவர்களும், பணத்தை சுருட்டியதை ஒப்புக்கொண்டதுடன், அவற்றை திரும்பச் செலுத்தி விடுவதாக கூறியுள்ளனர்.
சேலம் மாஜி தாசில்தார் சுப்பிரமணியன் கூறியதாவது: பிரச்னையில், சிக்கியோர், ஜனவரி மாதம் பணத்தை திரும்ப செலுத்தியதாக கூறப்படுகிறது. மோசடி இருக்கும்பட்சத்தில், அவர் பதவி பறிக்கப்படுவதுடன், இரண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படலாம். ஊராட்சி உதவி இயக்குனர் தான் அது குறித்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு சுப்ரமணியன் கூறினார்.