Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வருவாய் ஈட்ட "ஐடியா'

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வருவாய் ஈட்ட "ஐடியா'

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வருவாய் ஈட்ட "ஐடியா'

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வருவாய் ஈட்ட "ஐடியா'

ADDED : ஜூலை 11, 2011 11:34 PM


Google News

வேப்பம்பட்டு : கிராமப்புறங்களில் உள்ள குளங்களை நீராதாரத்திற்கு மட்டுமின்றி, வருவாய் ஈட்டுவதற்கும் பயன்படுத்தலாம் என, வேளாண் ஆய்வாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தபட்சம், இரண்டு அல்லது மூன்று குளங்கள் உள்ளன. நீராதாரங்களாக விளங்கி வரும் இக்குளங்களை, விவசாயிகளே பல இடங்களில் ஆக்கிரமித்து நிலப்பரப்பாக்கி உள்ளனர். எனினும், பெரும்பாலான குளங்கள் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மழைக்காலத்தில் நீர் நிரம்பி காணப்படும் இந்த குளங்களை நீராதாரத்துக்கு மட்டும் பயன்படுத்தாமல், வருவாய் ஈட்டுவதற்கும் பயன்படுத்தலாம் என, வேளாண் ஆய்வாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.



ஏரிகளில் மீன் பிடிப்பதற்கான குத்தகையை, பொதுப்பணித் துறை மூலம் ஏலம் எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதுபோல, குளங்களையும் சிலர் மொத்தமாக குத்தகைக்கு எடுத்து வருவாய் ஈட்டுகின்றனர். ஆனால், பெரும்பாலும் இத்தொழிலில் பண முதலைகளே ஈடுபடுத்தப்படுகின்றனர். அதற்கு மாறாக குளங்களை, தனித்தனியாக கிராமப்புறங்களில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனி நபர்களாகவோ, குழுக்களாகவோ குத்தகைக்கு எடுத்து, அதில் பல்வேறு வகையான மீன்களை வளர்த்து லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. இதுகுறித்து, திருவூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் தேவநாதன் மற்றும் உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி ஆகியோரிடம் கேட்ட போது கூறியதாவது: கிராமங்களில் பயன்படுத்தப்படாத குளங்களை மீன் வளர்ப்புக்காக உபயோகிப்பதன் மூலம், தொழில் வாய்ப்பு கிடைப்பதோடு மீன் உணவு பற்றாக்குறையும் தீரும்.



குளத்து மீன்கள் கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விலை போகிறது. சமுதாயக் குளத்திற்கு ஏற்றது கெண்டை மீன் வளர்ப்பு தான். கெண்டை மீன் இனத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றுள் வேகமாக வளர்ச்சி பெரும் கெண்டை மீன்களை தேர்வு செய்து வளர்க்க வேண்டும். தேர்வு செய்த வகைளை, கூட்டாக வைத்து கூட்டுக் கெண்டை மீன்களை வளர்க்கலாம். கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்புக்கான பயிற்சிகள் திரூர் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் வதட்டூர் கிராமத்தில் பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்டன. கட்லா, ரோகு, புல்கெண்டை, சாதா கெண்டை ஆகியவற்றைக் கொண்ட 10 ஆயிரம் மீன்கள் வளர்க்கப்பட்டன.



முறையாக குளங்களில் இருப்பு செய்யப்பட்ட மீன் குஞ்சுகள், ஒன்பது மாதங்களில் ஒன்றரை முதல் இரண்டரை கிலோ எடையை அடைந்துள்ளன. இவ்வாறு, ஐந்து ஏக்கர் பரப்பில் 5 டன்கள் உற்பத்தி செய்ய முடியும். மீன் குஞ்சுகள் இருப்பு, குளம் பராமரிப்பு, மீன் உணவு உட்பட மொத்த செலவு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் என திட்டமிட்டால், மொத்த வரவு 4 லட்சம் ரூபாயைத் தொடும். நிகர லாபம் 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என, வேளாண் துறை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us