ADDED : ஜூலை 26, 2011 09:42 PM
பொள்ளாச்சி : ஏழை மாணவியின் நான்கு ஆண்டு பொறியியல் படிப்புக்கான செலவையும் பொள்ளாச்சி அச்சக உரிமையாளர் சங்கம் ஏற்றுக்கொண்டது.
ஆர்.கோபாலபுரத்தை சேர்ந்த லாவண்யா பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,166 மதிப்பெண் பெற்று, பொறியியல் 'கட்-ஆப்' 195.25 பெற்றார். லாவண்யாவை படிக்க வைக்க பெற்றோரிடம் வசதியில்லாததால் சமூக அமைப்புகளிடம் நிதியுதவி வேண்டி கடந்த 20ம் தேதி 'தினமலரில்' செய்தி வெளியானது.
இதையடுத்து வித்யா என்பவர் மாணவிக்கு ஐந்தாயிரம் ரூபாயும், ஐயப்பா சேவா சங்கம் சார்பில் மாணவிக்கு 15 ஆயிரத்து 120 ரூபாய் வழங்கப்பட்டது.இந்நிலையில், பொள்ளாச்சி அச்சக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாணவியின் நான்கு ஆண்டு படிப்பு மற்றும் ஹாஸ்டல் செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. முதலாண்டுக்கான கல்வி கட்டணம், ஹாஸ்டல் கட்டணம் போன்றவற்றுக்கு 'டிமாண்ட் டிராப்ட்' எடுத்து கொடுத்துள்ளனர்.பொள்ளாச்சி அச்சக உரிமையாளர் சங்க தலைவர் செல்வக்குமார், செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் என்.செந்தில்குமார் ஆகியோர் சங்க உறுப்பினர்களிடமும், நண்பர்களிடம் நிதி திரட்டி முதல் ஆண்டுக்கான படிப்பு, ஹாஸ்டல் செலவுக்கு 39,140 ரூபாய்க்கு 'டிடி'யும், இதர செலவுக்காக 13,500 ரூபாய் ரொக்கமும் வழங்கியுள்ளனர். மீதமுள்ள மூன்று ஆண்டுக்கான முழு படிப்புச்செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஏழை மாணவியின் பொறியியல் படிப்பு கனவு நிறைவேறியுள்ளது.