இலங்கையை அச்சுறுத்தும் கிரீஸ் பூதங்கள் பீதி : பதட்டமான பகுதிகளில் ராணுவம் குவிப்பு
இலங்கையை அச்சுறுத்தும் கிரீஸ் பூதங்கள் பீதி : பதட்டமான பகுதிகளில் ராணுவம் குவிப்பு
இலங்கையை அச்சுறுத்தும் கிரீஸ் பூதங்கள் பீதி : பதட்டமான பகுதிகளில் ராணுவம் குவிப்பு

கொழும்பு : சமீப காலமாக போர் முடிந்து துப்பாக்கி சப்தம் கேட்காமல் இருந்த இலங்கையில் கிரீஸ் பூதம் என்ற வடிவில் எழுந்துள்ள பீதியும், மோதலும் இணைந்து கொண்டதில் துப்பாக்கி குண்டு 5 பேரை பதம் பார்த்திருக்கிறது. இத்துடன் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் ஒருவர் கொல்லப்பட்டார். கிரீஸ் பூதம் என்ற மர்ம மனிதன் நடமாட்டம் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவி வருவதுடன் சட்டம் - ஒழுங்கு பிரச்னையையும் ஏற்படுத்தியிருக்கிறது. பதட்டம் தொற்றிக்கொண்டுள்ள வவுனியா, மன்னார் மற்றும் புத்தளம் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு்ள்ளது.
இலங்கையில் கடந்த ஜூ லை மாதம் முதல் வார துவக்கத்தில் இந்த கிரீஸ் பூதம் என்ற பீதி இலங்கைக்கு வந்தது. துவக்கத்தில் இந்த பீதி சற்று குறைவாக இருந்தாலும் இது தமிழர்கள், முஸ்லிம் மக்கள், தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியை பாதித்து அதி விரைவாக பரவி வருகிறது. இதனால் அரசு சற்று சங்கடத்தில் ஆழ்ந்து போய் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முனைந்திருக்கிறது.
யார் இந்த கிரீஸ் மனிதன் ? : அதாவது உள்ளாடை அணிந்தபடி உடல் முழுவதும் வழுக்கும் தன்மை கொண்ட கிரீசை ( உயவு களிம்பு ) உடல் முழுவதும் பூசிக்கொண்டு நகரங்கள், கிராமங்கள் என இருள் சூழ்ந்த நேரத்தில் வந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது, குறிப்பாக திருட்டு, பெண்கள் மீது அத்துமீறல் ஆகியன நடக்கும். இந்நேரத்தில் பொதுமக்கள் பிடிக்க வரும்போது இந்த மர்ம மனிதன் கீரிஸ் தடவியிருப்பதால் இலகுவாக பிடி கொடுக்காமல் தப்பித்து விட முடியும்.
இது போன்று ஒட்டமாவடியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒருவரை போலீசிடம் ஒப்படைத்தபோது இவனை போலீசார் விடுவித்து விட்டனர். இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் போலீசாருடன் மோதிக்கொண்டனர். இந்நிலையில் அப்புத்தளை, அம்பாறை மாவட்டம்பொத்து, திரிகோணமலை, மட்டக்கிளப்பு, நாவல்பட்டி, கிண்ணியா, ஏறாவூர், குருநாகல், மன்னார் எருக்கலம்பட்டி, செங்கலவி, வெல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் இந்த பீதி நிலவி தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது போன்ற அச்சத்தினால் பிரச்னை எழுவதும், யாரையாவது பிடித்து அடித்து கொல்வது, மற்றும் போலீசாருடன் மோதலில் கண்ணீர்புகை வீச்சு என மாறிபோன இந்த விவகாரத்தில் இதுவரை 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புத்தளம் மணல்குன்று பகுதியில் கீரீஸ் மனிதன் பீதி எழுந்தது. இதனால் பரபரப்பும், பதட்டமும், தொடர்ந்ததும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஒரு போலீசார் கொல்லப்பட்டார். வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் , குழந்தைகள் உள்பட 5 பேர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
இது குறித்து இலங்கை கால்துறை தலைவர் இலங்கக்கோன் கூறுகையில்: நாட்டில் கிரீஸ் மனிதன் என்ற எவரும் இல்லை. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் இதனை சில சமூக விரோதிகள் சாதகமாக பயன்படுத்த சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றார். அரசு தரப்பில் கிரீஸ் மனிதன் பிரச்னை தூண்டி விடப்படுவதாகவும் ஒரு சில அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இலங்கை இப்போது கிரீஸ் மனிதன் பீதியில் மாட்டிக்கொண்டு அல்லாடுகிறது. இதனை அதிபர் மகிந்தா ராஜபக்க்ஷே எப்படி சமாளிக்கப்போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.


