/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"சுயநலம் இருக்கும் இடத்தில் ஒழுக்கம் இருக்காது'"சுயநலம் இருக்கும் இடத்தில் ஒழுக்கம் இருக்காது'
"சுயநலம் இருக்கும் இடத்தில் ஒழுக்கம் இருக்காது'
"சுயநலம் இருக்கும் இடத்தில் ஒழுக்கம் இருக்காது'
"சுயநலம் இருக்கும் இடத்தில் ஒழுக்கம் இருக்காது'
ADDED : ஆக 01, 2011 10:02 PM
திருப்பூர் : ''மனிதர்களிடம் நுகர்வு எண்ணம் மேலோங்கி விட்டது.
அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில் சுயநலவாதிகளாக மாறி விட்டனர். சுயநலம் இருக்கும் இடத்தில் ஒழுக்கம் இருக்காது,'' என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசினார்.முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் ரத்ததான கொடையாளர்களுக்கு பரிசளிப்பு விழா, திருப்பூரில் நடந்தது.அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை வேந்தர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். 'சைமா' தலைவர் ஈஸ்வரன், 'சக்தி பிலிம்ஸ்' உரிமையாளர் சுப்ரமணியம், மருத்துவ துறை இணை இயக்குனர் திருமலைசாமி முன்னிலை வகித்தனர்.கோவை ஸ்ரீவிஜயலட்சுமி சேரிடபிள் டிரஸ்ட் தலைவர் ஆறுமுகசாமிக்கு கல்விக்கான விருதை, பல்கலை வேந்தர் வழங்கினார். முயற்சி அமைப்புக்கு ரத்தம் வழங்கிய கொடையாளர்களுக்கு, அமைப்பின் தலைவர் சிதம்பரம், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். தமிழருவி மணியன் பேசியதாவது:இன்றைய புதிய பொருளாதாரக் கொள்கை இந்திய சமூகத்தை சுயநலத்தை நோக்கி கொண்டு செல்கிறது. முன்னோர் நமக்கு வகுத்துக்கொடுத்த பாதையில் இருந்து நாம் விலகி நடக்கிறோம். சுயநலம் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக ஒழுக்கமின்மையும் குடிகொண்டுவிடும்.சுயநலவாதிகள் பாவத்தின் படிக்கட்டுகளில் பயணிக்கிறார்கள். எவற்றையெல்லாம் இன்பம் என்று நினைக்கிறோமோ, அவையெல்லாம் துன்பத்தையே நமக்கு தருகின்றன. வேக வேகமாக இன்பத்தை நுகர ஆசைப்பட்டு, துன்பத்துக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்கிறோம்.நமது பாரதத்தின் கொள்கை அறம் சார்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்வைதத்தில் ஆதிசங்கரர் இறைவனும் மனிதனும் ஒன்று என்கிறார். ஜீவாத்மாவாகிய மனிதன் தனது முயற்சியின் மூலம் பரமாத்மா ஆகிறான் என்கிறது அத்வைதம்.ராமானுஜரோ அத்வைதத்துக்கும் ஒரு படி மேலே விசிஸ்டாத்வைதத்தை அருளினார்; வசிஸ்டாத்வைதம் என்பது, மிகச்சிறந்த அத்வைதம். அடிபட்டு ஒருவன் கிடக்கிறான்; உடலில் ரத்தம் வழிகிறது என்றால், தனது ரத்தமாக எவன் நினைக்கிறானோ அவனே வைணவன் என்கிறார்.உதவும் எண்ணம் இல்லாதவர்கள் மண்ணில் உலவினாலும், உலவாவிடினும் வீண்தான். அனைவரிடமும் நுகர்வு எண்ணம் மேலோங்கியிருக்கிறது. அனைத்து சுகங்களையும் அனுபவித்து விட வேண்டும் என்ற ஆசை அதிகரித்து விட்டது. தாகம் எடுத்தால் தண்ணீர்; பசியெடுத்தால் உணவு; திணவெடுத்தால் துணை என்பதே இன்றைய மனிதனின் நோக்கமாக இருக்கிறது.மனிதனுக்கும் விலங்குக்கும் மயிரிழையே வேறுபாடு உள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொண்டு நடக்க வேண்டும். இறைமை என்பதற்கு தமிழில் முழுமை என்று பொருள். முழுமையற்றவை விலங்குகள்; முழுமையானவர் கடவுள்; இறைமைக்கும், விலங்குக்கும் இடைப்பட்டவன் மனிதன். கணப்பொழுதில் மனிதன் விலங்காக முடியும்; இறைநிலையை எளிதில் அடைந்து விட முடியாது. ஒவ்வொரு நாளும் நாம் முழுமையை நோக்கி நடந்தால், இறப்பதற்குள் நாம் முழுமை அடைந்து விட முடியும். அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய மூன்றிலும் சுதந்திரம் பெறுவதே உண்மையான சுதந்திரம் என்றார் காந்தி. அவர் கனவு இன்று வரை கனவாகவே இருக்கிறது; இதற்கு காரணம் இன்றைய அரசியல்வாதிகள்.சுயநலத்தால் வாழ்க்கையை சுருக்கி வருகிறோம். சுயநலத்தால் குடும்ப அமைப்புகளும் சீர்குலைந்து விட்டன. திருமணம் முடிந்ததும் பெற்றோரை சுமையாக நினைக்கின்றனர். வாழ்க்கை இனிக்கிறதா என்றால், அனைத்தையும் நுகர வேண்டும் என்கிற சுயநலத்தில் உறவுகளை அறுத்தெறிய விவாகரத்து கேட்டு நிற்கின்றனர், நீதிமன்றத்தில்.முயற்சி அமைப்பு அனைவரையும் சுயநல பாதையில் இருந்து விடுவித்து, பொது நலப்பாதைக்கு கொண்டு செல்கிறது. இதுபோன்ற அமைப்புகளில் இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும்.இவ்வாறு, தமிழருவி மணியன் பேசினார்.