/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/உள்ளாட்சி வேட்பாளர் இறுதிபட்டியல் :காத்திருக்கும் அச்சக உரிமையாளர்கள்உள்ளாட்சி வேட்பாளர் இறுதிபட்டியல் :காத்திருக்கும் அச்சக உரிமையாளர்கள்
உள்ளாட்சி வேட்பாளர் இறுதிபட்டியல் :காத்திருக்கும் அச்சக உரிமையாளர்கள்
உள்ளாட்சி வேட்பாளர் இறுதிபட்டியல் :காத்திருக்கும் அச்சக உரிமையாளர்கள்
உள்ளாட்சி வேட்பாளர் இறுதிபட்டியல் :காத்திருக்கும் அச்சக உரிமையாளர்கள்
ADDED : செப் 28, 2011 11:52 PM
தஞ்சாவூர்: உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் இறுதிப்பட்டியலை பிளக்ஸ் பிரிண்டர்கள், அச்சக உரிமையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17,19 தேதிகளில் நடத்தப்படுகிறது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் செய்வதில் அரசியல் கட்சியினர் துவங்கி சுயேச்சைகள் வரை போட்டி போட்டு வருகின்றனர். அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் எந்நேரமும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதாலும், மகாளய அமாவாசையை அடுத்த வளர்பிறை நாள் என்பதாலும் ஏராளமானோர் இன்று மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாள் எப்போதுதான் வருமோ என்று அரசியல்வாதிகளை விட பிளக்ஸ் பிரிண்டர்ஸ் நிறுவனத்தார், அச்சக உரிமையாளர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். தேர்தல் என்றாலேயே ஆரம்ப நாட்களில் சுவர் விளம்பரம்தான் அதிகமாக இருந்தது. சுவர்களின் அவரவர் சின்னங்களை ஸ்டென்சில் பயன்படுத்தி எழுதி பிரசாரம் செய்த வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். தற்போது காலம் மாறி விட்ட நிலையில் எதற்கெடுத்தாலும் டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ்போர்டுகள் வைப்பது பேஷனாகி விட்டது. அது தேர்தலையும் விடவில்லை. அரசியல் கட்சியினரை பொறுத்தவரை தங்கள் கட்சியின் தலைவர்கள் படங்களோடு, தங்கள் படங்களையும் வைத்து பேனர் போட்டு வருகின்றனர். சுயேச்சைகளோ, தங்களுக்கான சின்னம் என்னவென்று தெரியாததால் இன்னமும் பேனர் போட முன்வரவில்லை. வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் அக்டோபர் மூன்றாம் தேதி என்பதால் அன்றுதான் சுயேச்சைகளுக்கான சின்னங்கள் தெரியவரும். இதற்காக தேர்தல் ஆணையம் 30 சின்னங்களை வெளியிட்டுள்ளது. ஆகாயவிமானம், ஹெலிகாப்டர், லாரி, போன்ற வாகனங்களில் துவங்கி கத்தரிக்காய் வரை சுயேச்சைகளுக்கு சின்னங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன. அவரவருக்கான சின்னம் தெரியவரும் பட்சத்தில்தான் அந்தந்த வேட்பாளர்கள் தங்கள் சின்னங்களோடு பேனர் தயாரிக்கவும், போஸ்டர், துண்டுபிரசுரம் அடிக்கவும் முடியும் என்ற நிலையில் பிளக்ஸ் போர்டு தயாரிப்பாளர்கள் பக்கம் எந்த வேட்பாளரும் வரவில்லை.
அதனால் நொந்து போய் உள்ள பிளக்ஸ் போர்டு, டிஜிட்டல் போர்டு தயாரிப்பாளர்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் போஸ்டர்கள் அச்சடிக்கும் அச்சகத்தார், இறுதிப்பட்டியல் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்காக பல அச்சகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிஜிட்டல் போர்டு தயாரிப்பாளர் அலுவலகங்களில் கூடுதல் கம்ப்யூட்டர் வசதி, ஆபரேட்டர் வசதி, 24மணி நேர மின்சார வசதிக்காக ஜெனரேட்டர் ஏற்பாடு போன்றவை செய்யப்பட்டு, டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ்போர்டுகள் உடனடியாக தயாரித்து தரப்படும் என்ற கவர்ச்சியான விளம்பரங்களும் ஒவ்வொரு நிறுவனம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, அச்சக தரப்பிலோ, சிங்கிள் கலர் எனில் கட்டணம் இவ்வளவு, மல்டி கலருக்கு கட்டணம் இவ்வளவு, குறிப்பிட்ட பிரதிகள் அச்சடிக்க ஆர்டர் கொடுத்தால் தள்ளுபடி இவ்வளவு என்றும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.