ADDED : செப் 29, 2011 12:36 AM
குஜிலியம்பாறை : வேடசந்தூர் பகுதியில், இரவு 8 மணிக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்கள், மீண்டும் இயங்க துவங்கின.பரமக்குடி கலவரம் காரணமாக, கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து கழக பஸ்கள், இரவு 8 மணிக்கு மேல் நிறுத்தப்பட்டன.
வேடசந்தூரில் 12 டவுன் பஸ்கள் ரத்தாகின.பெரும்பாலும் ஒற்றை வழித்தடத்தில் செல்லும், இப்பஸ்கள், இரு வாரங்களாக நிறுத்தப்பட்டதால், மக்கள் பாதிக்கப்பட்டனர். கலவரம் நடந்த பரமக்குடியிலேயே, பஸ் போக்குவரத்து சீரான நிலையில், அமைதி பகுதியான வேடசந்தூரில் நிறுத்தப்பட்டன.கிராமத்தினரின் அவதி குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. அன்று மாலையே, போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீஸ் ஒப்புதலுடன் பஸ்களை மீண்டும் இயக்க துவங்கியுள்ளனர்.


