ஓவியக் கலையில் சாதனை புரிவோருக்கு "கலைமாமணி' விருது
ஓவியக் கலையில் சாதனை புரிவோருக்கு "கலைமாமணி' விருது
ஓவியக் கலையில் சாதனை புரிவோருக்கு "கலைமாமணி' விருது
ADDED : செப் 14, 2011 11:12 AM

சென்னை: 'ஓவியம் மற்றும் சிற்பக்கலைத் துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, 'கலைமாமணி' விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என சென்னை கலை பண்பாட்டு மைய இணை இயக்குனர் குணசேகரன் பேசினார்.
இளம் ஓவியக் கலைஞர்களான இளையராஜா, இளையபாரதி போன்றோரின் ஓவியக் கண்காட்சி, சென்னை மயிலாப்பூர் வினயசா ஆர்ட் கேலரியில் நடந்தது. கண்காட்சியில், பண்டைய கால கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஓவியங்களும், புகைப்படங்களை பிரதிபலிக்கும் ஓவியங்களும் இடம் பெற்றன.
கண்காட்சியில் குணசேகரன் பேசியதாவது: கலைத் துறை தொடர்பாக, சென்னையில் கலந்து கொள்ளும் முதல் கண்காட்சி இது தான். தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் கவின் கலைக் கல்லூரியில் பயின்ற மாணவர்களின் ஓவியங்களை விட, இளையராஜா, இளையபாரதியின் ஓவியங்கள் அருமையாக உள்ளன. கண்காட்சியில் உள்ள அனைத்து ஓவியங்களுமே தமிழர் பண்பாட்டை நினைவு கூர்வதாக உள்ளது. தற்போதுள்ள ஓவியங்களில் தமிழர் பண்பாடு காணப்படவில்லை. கலைக்காக நேரத்தை ஒதுக்கும் சிலர், நம் பண்பாட்டை அழியாமல் காத்து வருகின்றனர். ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை, கலை மற்றும் பண்பாட்டு மையம் ஊக்குவிக்கும். அரசு கலை பண்பாட்டு இயக்ககம் சார்பில், ஓவியத் துறையில் மாணவர்கள் கண்காட்சியை நடத்த சிறப்புத் தொகை வழங்கி வருகிறோம். ஓவியம் மற்றும் சிற்பக் கலைத் துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, 'கலைமாமணி' விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குணசேகரன் பேசினார்.
கண்காட்சியில், சிறுவன் சிபி சக்ரவர்த்தியின் ஓவியமும் இடம் பெற்றது. சென்னை கவின் கலைக் கல்லூரியின் முதல்வர் சந்திரசேகரன், சிற்பக் கலைஞர் தட்சிணாமூர்த்தி, திரைப்பட கலை இயக்குனர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.